ரெஸ்யூம், கரிக்குலம் விட்டே (Curriculum Vitae - CV )... இதை தயார் செய்ய வேண்டும் என்று சொன்னால் உடனே ஏதோ ஒரு கம்ப்யூட்டர் சென்ட்டரை நோக்கி ஓடுவோம். அங்கே ஏற்கெனவே இருக்கும் ஏதோ ஒரு மாடலில் ஒன்றை தேர்வு செய்து அதன்படியே ரெடி செய்து விடுவோம். அதை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்றால், வொர்க் அவுட் ஆகுமா?

பல நிறுவனங்களில் ரெஸ்யூம், கரிக்குலம் விட்டேவின் அடிப்படையிலும் கேண்டிட்டேட்டை வேலைக்கு எடுப்பதுண்டு. ஆனால் நாமோ அதன் முக்கியத்துவம் உணராமல், கடைசிவரை கையில் இருக்கும் அந்த ஒரு மாடலை ரெஸ்யூமை வைத்தே அனைத்து நிறுவனங்களிலும் முயற்சி செய்து கொண்டு இருப்போம்.
ரெஸ்யூம், கரிக்குலம் விட்டேவை எப்படி தயார் செய்யவேண்டும், கால மாற்றத்திற்கு ஏற்ப ரெஸ்யூம் மற்றும் கரிக்குலம் விட்டேவில் ஏற்பட்ட மாறுதல்கள் என்ன, அவுட்டேட் மற்றும் அப்டேட் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார், மனித வள மேலாண்மை வல்லுநர் ஜெகஜனனி.
"நீங்கள் இல்லாதபோது உங்களது ரெஸ்யூம் உங்களுக்காக பேசும், அதை நீங்கள் எவ்வளவு நேர்த்தியாக தயார் செய்கிறீர்கள் என்பது முக்கியம். முடிந்தளவு தகவலை சுருக்கி குறிப்பிட வேண்டும்.

முந்தைய கால கட்டத்தில் ரெஸ்யூமை `பயோ டேட்டா' என்றார்கள். பயோ டேட்டா என்பது ஒருவரை பற்றிய அடிப்படை தகவல்களை அளிக்க உதவும் ஒரு சிறிய 'Biographical Information' என்று சொல்லலாம். ஒரு பக்க அளவில் நம்முடைய கல்வி தகுதி, பண்புகள், பொழுதுபோக்குகள், எந்தப் பிரிவில் ஆர்வம் போன்றவை அடங்கிய அறிக்கையை, ஒரு பக்கத்திற்கு மிகாமல் அளிப்பதுதான் பயோ-டேட்டா. இப்போது இது காலாவதியாகிவிட்டது. திருமண வரன் பார்க்கவே தற்போது பயோ டேட்டாவை உபயோகிக்கிறார்கள்.
ரெஸ்யூம் என்பது ஒருவரது திறன், கல்வித் தகுதி, அனுபவம் குறித்த தகவல்கள் அடங்கிய அறிக்கை. இது ஒன்று முதல் இரண்டு பக்க அளவில் இருக்கலாம்.
கரிக்குலம் விட்டே என்பதை வாழ்க்கையின் போக்கு என்றும் சொல்லலாம், ஏனெனில் ஒருவரின் முழு வரலாறும் இதில் அடங்கிவிடும். கரிக்குலம் விட்டேவிற்கு பக்க வரம்புகள் கிடையாது என்றாலும் இரண்டிலிருந்து மூன்று பக்கங்களில் முடிப்பது நல்லது.

முதலில் ஒரு ரெஸ்யூம் அல்லது கரிக்குலம் விட்டே எழுதும்போது, ஐந்து கேள்விகளின் அடிப்படையில் எழுதத் தொடங்குவது நல்லது. என்ன எழுதப் போகிறோம், எப்படி எழுதப் போகிறோம், யாருக்கு எழுதப் போகிறோம், ஏன் எழுதுகிறோம், எப்போது எழுதுகிறோம் என்பதை மனதில் வைத்து எழுத வேண்டும்.
* என்ன எழுத போகிறோம் என்பதில் உங்களது கல்வித் தகுதியை விட பணி அனுபவங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது. அதன் பிறகு கல்வித் தகுதியையும், தொடர்புகொள்ளும் விவரங்களையும் குறிப்பிடலாம். இவற்றை குறிப்பிடுகையில் தலைகீழ் காலவரிசையில் எழுத வேண்டும்.
* ஒருவேளை உங்களுக்குப் பல நிறுவனங்களில் வேலைபார்த்த பணி அனுபவம் இருப்பின், நீங்கள் வேலைசெய்த அனைத்து நிறுவனங்களையும் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான திறன்களை மட்டும் புல்லட்டினில் குறிப்பிடலாம். உதாரணத்திற்கு, இத்தனை ஆண்டுக்காலத்தில், இந்தந்த திறன்களை வளர்த்துக்கொண்டேன் எனக் குறிப்பிடலாம்.

* கல்வித் தகுதியில் உயர்ந்த தகுதியை முதலில் குறிப்பிடவேண்டும். குறிப்பாக நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்ற கல்வியை முதலில் குறிப்பிடுவது சிறந்தது. கல்வித் தகுதியில் நீங்கள் வாங்கிய விருதுகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடலாம்.
* தொழில்நுட்ப திறன்கள் மற்றும் மென் திறன்கள் குறித்து குறிப்பிடுகையில், இந்த தகுதிகளை வைத்து நீங்கள் சாதித்தவற்றை எழுதலாம். உதாரணத்திற்கு, ’நான் கடின உழைப்பாளி, டீம் லீடர்’ என வெறுமனே குறிப்பிடாமல், ’டீம் லீடராக பணியாற்றுகையில் என்னுடைய குழுவின் மோட்டிவேஷன் அளவை அதிகமாக்கினேன்’ எனக் குறிப்பிடலாம்.
ஏன் எழுத வேண்டும், என்ன எழுத வேண்டும் என்பதில், முதலில் என்ன வேலைக்கு எடுக்கிறார்கள் என்பதை குறிப்பெடுத்து கொண்டு அதற்கேற்றாற் போல ரெஸ்யூம், கரிக்குலம் விட்டேவை டிசைன் செய்வது நல்லது. அவர்கள் உங்கள் ரெஸ்யூம் படிக்கும் குறைந்த நேரத்தில் கவரும் வகையில் அவர்களுக்குத் தேவையான தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.

எப்படி எழுத வேண்டும், எவ்வளவு எழுத வேண்டும் என்பதில் உங்களின் தகவலை மூன்று நெடுவரிசைகளின் பகுதிகளாகப் பிரித்துக் கொடுக்கலாம். இடது புறம் உங்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்கள், நடுவில் நீங்கள் சாதித்தவை, வலது புறத்தில் உங்களின் பணிக்காலம், திறமைகள், பதவிகள் மற்றும் அதை சார்ந்த பொறுப்புகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
* 'Above the fold' என்பார்கள். அதாவது, சாதாரணமாகவே நம்முடைய கண்கள் காகிதத்தின் மேல் புறத்தில் உள்ளதை முதலில் பார்க்கும். ரெஸ்யூமின் மூன்றில் ஒரு பகுதியை மேல்புறத்தில், முக்கியமான, பொருத்தமான தகவல்களாகக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் அவர்களின் கண்கள் முதலில் அந்த விஷயங்களைப் பார்க்கின்றன.
* வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பதிவு செய்யக்கூடாது.
* இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* எழுத்துருக்கள்: வழக்கமாக உபயோகப் படுத்தப்படும் ரோமன், ஏரியலே போதும். எழுத்துரு 12, 10 அளவுகளில் இருத்தல் நல்லது. சீரான இடைவெளி விட்டு எழுத்துகள், தலைப்புகள் இருக்க வேண்டும்.
* ரெஸ்யூமில் புகைப்படத்தை வைப்பது நல்லது. முழுவதுமாக தயார் செய்த பிறகு யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரெஸ்யூம்/CV அப்டேட் செய்வது நல்லது. அப்போதுதான் உங்களின் வளர்ச்சி குறித்து சுய பரிசோதனை செய்வதுபோல இருக்கும்.
அவுட்டேட்டட் விஷயங்கள் என்னென்ன?
1. பெரும்பாலானோர் 10,12-ம் வகுப்புக் கல்வியை குறிப்பிடுகின்றனர். அதிகமான நிறுவனங்களில் அதை எதிர்பார்ப்பது இல்லை.
2. தேர்ச்சி பெற்ற வருடம் மற்றும் தேர்ச்சி சதவிகிதம் வெளிநாடுகளில் விண்ணப்பிப்பவர்களுக்குத் தேவை இல்லை.
3. பாரம்பர்ய நிறுவனங்களுக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பினால் ஜாஸ்ஸி வகை டிசைனிங் தேவையில்லை.

4. ஆப்ஜெக்ட்டிவ் (objective) ஒரு காலாவதியான தகவல். நாம் நோக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, நாம் குறிப்பிட்டால் அவர்கள் அதைப் பார்க்கமாட்டார்கள். ரெஃபரென்ஸ் (reference) தேவை இல்லை.
5. உங்களின் டேட் ஆஃப்-ஐ வெளிநாடுகளில் எதிர்பார்ப்பதில்லை. முகவரியும் தேவை இல்லாத ஒன்று தான். ஏனெனில் உங்களை தொடர்பு கொள்வதற்கான வழி இருந்தாலே போதும். உங்களின் பெயர், தொலைபேசி எண், புரொஃபைல் லிங்க், ட்விட்டர், மற்றும் இன்ஸ்டா ஐடி குறிப்பிட்டாலே போதும்
6. தேதி, இடம் தேவை இல்லாத ஒன்று. கவர் பேஜ் தேவை இல்லை.
7. பொதுவாக நேரடியாக கணினியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யக்கேட்கும் போது, ஐகான் பயன்படுத்த வேண்டாம்.
அப்டேட்டட் விஷயங்கள் என்னென்ன?
1. நீங்கள் செய்த பெருமைக்குரிய வேலைகளைக் குறிப்பிடலாம். உதாரணம்: யுஎன்ஓ-ல் தன்னார்வலராகப் பணியாற்றினேன்.
2. உங்கள் ரெஸ்யூமில் எது பொருத்தமற்றது என்பதை கண்டுபிடியுங்கள். குறைந்தபட்சம் காலாண்டுக்கு ஒரு முறையாவது அதை புதுப்பிக்க வேண்டும். உங்களின் கல்வி மற்றும் திறன்களில் பெரிய மாற்றம் இருக்காது, ஆனால் நீங்கள் வேலை செய்யும் விதம் மாறலாம்.

3. இப்போதைய டிரெண்ட், இன்ஃபோகிராபிக்ஸ் பயன்படுத்துவது.
4. உங்களின் ரெஸ்யூம் அனுப்பும்போது பிடிஎப் (pdf) ஆக மாற்றி அனுப்புவது சிறந்தது.