Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஊக்கத்தொகை; அதிநவீன விடுதிகள்- கல்வி தொடர்பான அறிவிப்புகள் இதோ!| Long Read

தமிழ்நாடு பட்ஜெட் 2023
News
தமிழ்நாடு பட்ஜெட் 2023

இந்த 2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்!

Published:Updated:

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஊக்கத்தொகை; அதிநவீன விடுதிகள்- கல்வி தொடர்பான அறிவிப்புகள் இதோ!| Long Read

இந்த 2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2023
News
தமிழ்நாடு பட்ஜெட் 2023
2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். திமுக அரசு கல்வித் துறைதொடர்பான பல முக்கிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

இந்த 2023-24 பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடியும், உயர் கல்வித் துறைக்கு ரூ 6,967 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு க ஸ்டாலின்
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் மு க ஸ்டாலின்
இந்த 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்ற கல்வி தொடர்பான சில முக்கிய அறிவிப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

1. தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு:

தொழில்நுட்பத் துறையில், தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம், தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு, தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு' நடத்தப்படும். தமிழ்மொழியில் பெருமளவில் மென்பொருட்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

2. அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்:

அரசமைப்புச் சட்டத்தின் தந்தையும், முற்போக்கு சமத்துவ இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் சிந்தனைகளைப் இந்திய அம்பேத்கரின் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படும்.

3.தமிழ் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள்:

கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில், தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்தப் பயணங்கள், நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப்பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு, தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்.

அம்பேத்கர்
அம்பேத்கர்

4. நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள்:

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு தொடர்ந்து வருங்காலங்களிலும் செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

5.பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்:

அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய கட்டடங்கள் கட்ட 7,000 கோடி ரூபாய் செலவில், 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை' அரசு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில், 2000 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

6. எண்ணும் எழுத்தும் திட்டம் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்:

எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், வரும் நிதியாண்டில் 110 கோடி ரூபாய் செலவில் நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சர்வதேச புத்தகக் கண்காட்சி 2023
சர்வதேச புத்தகக் கண்காட்சி 2023

7. சர்வதேச புத்தகக் கண்காட்சி:

அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது. அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும் ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக இவ்வாண்டு நடத்தப்பட்டன. மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியினை 24 நாடுகளின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு வெற்றிகரமாக நடத்தியது. தமிழ்நாடு மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியீட்டாளர்களிடையே அறிவுப் பரிமாற்றம் மற்றும் பதிப்புரிமை பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும் 355 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன. இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

8. பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்:

கல்விப் பெருவழியில் நமது இலட்சியமான சமூகநீதியை அடைந்திட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் மிகவும் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும். இப்பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அனைத்துப் பணிப்பயன்களும் பாதுகாப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ஊக்கத்தொகை; 
அதிநவீன விடுதிகள்- கல்வி தொடர்பான அறிவிப்புகள் இதோ!| Long Read

9.கல்வி உதவித்தொகை சரியாக சென்று சேருவதைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்:

தரவுகள் அடிப்படையிலான ஆளுகை மூலம் திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைக் களைய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதத்தைக் குறைக்கவும், கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

8. 3,50,000 புத்தகங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம்:

சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இதில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான இணையவசதியுடன் கூடிய சிறப்புப் பிரிவு, பார்வைத் திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், கலை அரங்கம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் படைப்புகள், பேச்சுகள் இடம் பெறும் வகையில் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இம்மாபெரும் நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்

கலைஞர் நினைவு நூலகம் மாதிரி
கலைஞர் நினைவு நூலகம் மாதிரி

இந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறியியல், சட்டம். இலக்கியம், மருத்துவம் பண்பாடு. அறிவியல், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 இலட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறும். தென் தமிழ்நாட்டின் அறிவாலயமாகத் திகழப்போகும் இந்நூலகம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய பணிகளைப் போற்றும் வகையில், `கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரைத் தாங்கி, வரும் ஜுன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும்.

வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக மொத்தம் 40,299 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறை:

1. 2,877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம்:

மனிதவளமே மாநிலத்தின் செல்வம் என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அதனை மாபெரும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள, திறன்மிக்க பணியாளர்களே பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு முக்கியக் காரணி என்பதை நன்கு அறிந்துள்ளோம். ஆகவே, மின்னல் வேகத்தில் மாறி வரும் தொழில் சூழலுக்கு தேவைப்படும் மனிதவளத்தை உருவாக்குவதற்கு 2,877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தலைசிறந்த திறன் மையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. வரும் கல்வி ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

2. தொழில்துறை 4.0:

தொழில்துறையினருடன் இணைந்து தொழில்துறை 4.0- தரத்திற்கு ஏற்ப அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளை 'திறன்மிகு மையங்களாக' மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும். இக்கல்வி நிறுவனங்களில், கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழில்சார் பாடத்திட்டங்களை உருவாக்குவது, ஆசிரியர்களின் திறன் மேம்பாடு. மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை இந்திட்டத்தின் குறிக்கோள்களாகும். இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'திறன்மிகு மையங்களாக' தரம் உயர்த்தப்படும்.

3. ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்க பயிற்சி மையம்:

தொழில் பயிற்சி நிறுவனங்களிலும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில் 'தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம்' (TN.WISH) அமைக்கப்படும். இந்த மையத்தில், இயந்திர மின்னணுவியல் (Mechatronics), இணைய வழிச் செயல்பாடு (Internet of things) அதிநவீன வாகனத் தொழில்நுட்பம் (Advanced Automobile Technology), துல்லியப் பொறியியல் (Precision Engineering) மற்றும் உயர்தர வெல்டிங் (Advanced Welding) போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | இன்றைய சட்டப் பேரவை (20.3.2023)
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | இன்றைய சட்டப் பேரவை (20.3.2023)

4. தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும்:

திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க, தற்போதுள்ள தொழிற்சாலைகள் தொழிற்பயிற்சிக் கூடங்களாகப் பயன்படுத்தப்படும். இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் (Factory Skill Schools) என்ற இத்திட்டத்திற்கு இந்த ஆண்டில், 25 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரும் தொழில் தொகுப்பாக உருவெடுத்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும்.

5. காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்:

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளன. நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

6. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்:

கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தப் போக்கை மாற்றியமைக்க, குடிமைப் பணிகள் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி மற்றும் பயிற்சிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும்.

ஒவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யபட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு-செல்வுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய சட்டப் பேரவை (20.3.2023)
இன்றைய சட்டப் பேரவை (20.3.2023)

7. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 100 கோடி ரூபாயில் நவீன வசதிகளுடன் கூடிய நான்கு புதிய விடுதிகள்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

8. ஆதிதிராவிடர் மற்றும் துணைத் பழங்குடியினருக்கான திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம்:

ஆதிதிராவிடர் மற்றும் துணைத் பழங்குடியினருக்கான திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்காக சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர...

உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம்:

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாநிலமெங்கும் நடைபெற்றது. இதன் அடுத்த கட்டமாக, விளையாட்டுத் துறைக்கு புது உத்வேகம் அளிக்கும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் சென்னையில் ஓர் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என்று கூறப்படுகிறது.

சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம்
சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம்

மேலும் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை விரிவாக சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என இந்த 2023 பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த 2023 ஆண்டிற்கான பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.