பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்!

அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்!

தேசத்துரோகச் சட்டப் பிரிவில் மாணவர் தலைவர் கன்ஹையா குமார் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சர்ச்சையின் மையமாக விளங்கிய டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யூ), மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ரொமிலா தாப்பர், ஜே.என்.யூ-வில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். ஜே.என்.யூ-வை வளர்த்தெடுத்த பேராசிரியர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர். பணி ஓய்வுக்குப் பிறகு, கௌரவப் பேராசிரியர் (Professor Emeritus) என்ற அந்தஸ்து இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது, அந்த அந்தஸ்தைப் பரிசீலனை செய்வதற்காக, தன்விவரக் குறிப்பை (Curriculum vitae) அனுப்புமாறு ரொமிலா தாப்பரிடம் ஜே.என்.யூ நிர்வாகம் கேட்டிருப்பதுதான் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கையைக் கல்வியாளர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

ஜே.என்.யூ-வில் பணியாற்றிய பொருளாதாரப் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், “ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு, கடந்த காலத்தில் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்குக்காகப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுவதுதான் கௌரவப் பேராசிரியர் என்கிற அந்தஸ்து. எதிர்காலத்தில் அவர்கள் ஆற்றப்போகிற பணிகளுக்காகவோ, ஆற்ற வேண்டிய பணிகளுக்காகவோ வழங்கப்படுவது அல்ல.ஜே.என்.யூ நிர்வாகத்தின் நடவடிக்கை முரண்பாடான தாக இருக்கிறது. கௌரவப் பேராசிரி யர்களுக்கு எந்தவொரு சிறப்பு ஏற்பாடும் வழங்கப்படுவது கிடையாது. ஊதியமும் கிடையாது. இந்த அந்தஸ்து, அவர்களின் வாழ்நாளுக்கானது” என்று கூறியுள்ளார்.

அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்!

டெல்லி முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால், “அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதனாலேயே, உலகின் மிகச்சிறந்த வரலாற்று அறிஞரான ரொமிலா தாப்பரிடம் தன்விவரக் குறிப்பு கேட்டுள்ளார்கள். நம்முடைய உயர்ந்த பல்கலைக்கழகம் சங்பரிவாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இதுபோன்ற செயல் நடக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

“புகழ்பெற்ற ஒரு வரலாற்று அறிஞரைச் சிறுமைப்படுத்துகிற, இழிவுபடுத்துகிற முயற்சி” என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினேன்.

“ரொமிலாதாப்பர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வரலாற்றியலாளர். வரலாற்றுத்துறையில் அவர் செய்துள்ள ஆய்வுகளும், அவருடைய நூல்களும் உலகப் புகழ்பெற்றவை. அப்படிப்பட்ட ஒரு அறிஞரைக் கௌரவப் பேராசிரியராக வைத்துக்கொள்ளவே எந்தவொரு பல்கலைக்கழகமும் விரும்பும். ஆனால் அவரிடம், உங்கள் பயோ டேட்டாவைக் கொடுங்கள் என்று கேட்பது சிறுமைத்தனம், உலகின் மிகப்பெரிய தத்துவ ஞானிகளில் ஒருவரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைச் சந்தித்து உரையாடியவர் ரொமிலா. இப்படிப்பட்ட ஓர் அறிஞரை அவமதிப்பது என்பது, ஒட்டுமொத்த இந்திய அறிவுலகத்தையே அவமதிப்பதற்குச் சமம்.

வரலாறு என்றால் அதை உரிய ஆதாரங்களுடன் கட்டமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் ரொமிலா தாப்பர். ஆதாரம் இல்லாமல் எதையும் அவர் வரலாறு என்று சொன்னது கிடையாது. எனவே, அயோத்யா விவகாரம், ஆரிய திராவிடப் பிரச்னை, மன்னர்கள் பற்றிய பார்வை என இந்துத்துவவாதிகள் முன்வைக்கிற கருத்தோட்டங்க ளுக்கு இவர் உடன்படுபவர் அல்லர். எனவே, இப்படிப்பட்ட ஒருவர் பல்கலைக்கழகத்தில் இருப்பது, தங்களின் வகுப்புவாத வரலாற்றுக் கண்ணோட்டத்துக்கு ஒத்துவராது என்பதால், அவரை அங்கிருந்து அகற்ற முயற்சி செய்கிறார்கள். இதை ஒரு தனிப்பட்ட விஷயமாகப் பார்க்க முடியாது. அரசியல் சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு களை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்கள், இப்போது அறிவுத்துறையையும் அழிக்கப்பார்க்கிறார்கள். அதற்கான ஆரம்பக்கட்டம்தான் இது என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

கற்பிதங்களை வரலாறு என்றும், புராணங்களை சரித்திரம் என்றும் சொல்பவர்கள்தான் மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்கு மாறுபட்ட நிலைப்பாடு கொண்ட வரலாற்று அறிஞர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தவே இப்படிச் செய்கிறார்கள். ஆனானப்பட்ட ரொமிலா தாப்பருக்கே இந்த நிலைமையா என்று மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்ற திட்டத்துடன் இத்தகைய நடவடிக்கையை எடுக்கிறார்கள்” என்றார்.

அறிவுத்துறைக்கு நிகழ்ந்த அவமானம்!

பல்கலைக்கழக விதிகளின்படி எடுக்கப்படும் வழக்கமான ஒரு நடவடிக்கைதான் என்று சொல்லும் ஒரு சாரார், இந்தப் பிரச்னை தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது என்கிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் தமிழகத் தலைவரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான என்.ராஜலட்சுமி, “பல்கலைக்கழக மானியக் குழுவில் (யூ.ஜி.சி) சில விஷயங்களைச் சரிசெய்வதற்காக, சில மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள். எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் விதிமுறைகளை மாற்றியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கது. பொதுவாக, அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஓய்வுபெற்ற பேராசிரியர்களில் சிலருக்கு கௌரவப் பேராசிரியர் என்ற அந்தஸ்து வழங்கப்படும். அது குறிப்பிட்ட காலத்துக்குத்தான். சிலர் ஊதியத்துடனும், சிலர் ஊதியம் இல்லாமலும் கௌரவப் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனியாக அறை ஒதுக்கப்படுகிறது. ஜே.என்.யூ., ஐ.ஐ.டி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் கௌரவப் பேராசிரியர்கள் நிறைய பேர் இருப்பார்கள்.

ஜே.என்.யூ என்பது எல்லா அரசியல் சித்தாந்தங்களுக்கும் இடம் அளிக்கிற ஓர் இடம். பேராசிரியர் ரொமிலா தாப்பர் அவரின் துறையில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். அதற்குள் நாம் போகவேண்டியதில்லை. இப்போது அவருக்கு 87 வயது ஆகிறது. இந்த வயதில் அவரால் அந்த இடத்தில் இருந்து என்ன செய்ய முடியும், அவரால் அந்த இடத்தில் தொடர முடியுமா என்று அறிந்துகொள்வதற்காக நிர்வாகம் அப்படிக் கேட்டிருக்கலாம்.

கௌரவப் பேராசிரியர்கள் அனைவரும் ஒவ்வோர் ஆண்டும் தங்களின் பணிகள் குறித்த விவரங்களை மதிப்பீட்டுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும். தன்விவரக் குறிப்புடன் சேர்த்து அதைச் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோலத்தான், ஜே.என்.யூ-வில் நீண்டகாலம் கௌரவப் பேராசிரியர்களாக இருந்துவரும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட சிலரிடம் தன்விவரக் குறிப்புகளைக் கேட்டுள்ளனர். யூ.ஜி.சி விதிகளின்படி, அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம்தான் அதைக் கேட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான். இதில் தவறு எதுவும் இல்லை. இதை ஏன் இவ்வளவு பெரிதாக்குகிறார்கள் என்று புரியவில்லை” என்றார்.

இந்தியாவின் முக்கியமான வரலாற்றா சிரியர்களில் ஒருவர் ரொமிலா தாப்பர். வரலாற்றை சமூகநோக்கோடு அணுகும் ரொமிலா, அறிவுஜீவிகளின் அடையாளம். அவரை அவமானப்படுத்துவது என்பது அறிவையும் வரலாற்றையும் அவமானப்படுத்துவதுதான்.

பத்மபூஷண் விருதை மறுத்தவர்!

பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய அதிகாரியின் மகளான ரொமிலா தாப்பர், லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர். குருக்‌ஷேத்ரா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றியவர், பின்னர் ஜே.என்.யூ-வில் சேர்ந்தார். 1991-ல் பணி ஓய்வுபெற்ற அவருக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, கௌரவப் பேராசிரியர் (Professor Emeritus) என்ற அந்தஸ்தை 1993-ம் ஆண்டு ஜே.என்.யூ அவருக்கு வழங்கியது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் குறித்து ஆய்வைத் தொடங்கியவர். பண்டைய இந்தியா குறித்த இவர் செய்துள்ள ஆய்வுகள் முக்கியமானவை. ‘அசோகரும் மௌரியப் பேரரசின் வீழ்ச்சியும்’ என்ற இவரது ஆய்வு நூல், அதுவரை இருந்துவந்த இந்தியா பற்றிய தட்டையான கண்ணோட்டத்தை அடியோடு புரட்டிப்போட்டது.

அமெரிக்க லைப்ரரி காங்கிரஸ் அளிக்கும், நோபல் பரிசுக்கு இணையான ‘க்ளுஜ்’ விருதைப் பெற்றுள்ள ரொமிலா தாப்பர், இந்திய அரசு இவருக்கு இருமுறை அறிவித்த பத்மபூஷண் விருதை ஏற்க மறுத்துவிட்டார். ‘கல்வி நிறுவனங்கள் அளிக்கும் விருதுகளை மட்டுமே ஏற்பேன். அரசின் விருதுகளை ஏற்கமாட்டேன்’ என்று விளக்கமளித்தார்.