Published:Updated:

நிலம் போல மனமும் பெரிசு!

 கே.சி.ராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
கே.சி.ராஜன்

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.ராஜன்.

ஒரு நல்லாசிரியரின் பணி எது, 100 சதவிகிதம் தேர்ச்சிபெறச் செய்வது மட்டுமா? தன்னிடம் படிக்கும் மாணவனின் எதிர்காலத்தை மொத்தமாக வடிவமைப்பவர்தான் நல்லாசிரியர்.

அந்த மாதிரியான ஆசிரியர்களைத்தான் மாணவர்கள் காலம் முழுவதும் நினைவில் சுமப்பார்கள். ராஜன் அப்படியொரு நல்லாசிரியர். ஏழை மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடங்களை மட்டும் சொல்லிக்கொடுக்காமல், தன் சொந்த நிலத்தையும் கணக்கு பார்க்காமல் எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்தக் கணக்கு ஆசிரியர்.

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.ராஜன். புழாதி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியரான இவர் மார்ச் 31-ம் தேதியுடன் ஓய்வுபெறவிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யப்போகிறோம் என்று யோசிக்காமல், ஏழை மாணவர்கள் நான்கு பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலா ஐந்து சென்ட் நிலம் எழுதிக்கொடுத்திருக்கிறார் ராஜன்.

நிலம் போல மனமும் பெரிசு!

புழாதி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் மெல்லிய புன்னகை படர நம்மை வரவேற்றார். பள்ளியைச் சுற்றிக்காட்டியபடியே பேசத் தொடங்கினார் ராஜன்.

“என் தந்தை, சகோதரி, மனைவி எல்லோருமே ஆசிரியர்கள்தாம். மிகப்பெரிய பொறுப்புடன் கடந்த 34 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளேன். கேரள பிரதேஷ் பள்ளி ஆசிரியர் சங்கத்தில் இணைப் பொதுச்செயலாளராக இருக்கிறேன். எங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளைச் செய்துவந்தோம். அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கல்வியை மட்டும் போதித்தால் போதாது. காரணம், அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியான சூழ்நிலையிலிருந்து வந்து படிக்க மாட்டார்கள். அப்படி எந்த மாணவராவது பிரச்னையில் இருந்தால், அதைக் கண்டுபிடித்துச் சரிசெய்வதும் ஆசிரியர் பணிதான். என்னுடைய வகுப்பில் ஒரு மாணவி தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் நான் இந்த முடிவை எடுத்தேன்...” என்று சொல்லி அந்த மாணவியை அறிமுகப்படுத்தினார் ராஜன்.

9-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி பேச ஆரம்பித்தார். “நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே என் அப்பா எங்களை விட்டுப் போய்விட்டார். அம்மாவும் பாட்டியும்தான் வளர்த்தனர். வீட்டில் அடிக்கடி பிரச்னை. எட்டாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்குத் தொடர்ந்து வர முடியவில்லை. அதை மாஸ்டரிடம் சொன்னோம். மாஸ்டர்தான் தெய்வத்தின் ரூபமாக வந்து, எங்களுக்கு நிலம் கொடுத்துள்ளார். இப்போது சற்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. நன்கு படிக்க வேண்டும். மாஸ்டரைப்போல நல்லாசிரியராக வேண்டும். நான் டீச்சரானவுடன், என்னை மாதிரி கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்” எனத் தன் கனவுகளை விவரித்தார்.

பேத்தியை அணைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார் அந்த மாணவியின் பாட்டி, “சிறு வயதில் ஒரு குழந்தைக்கு என்னென்ன சந்தோஷங்கள் கிடைக்க வேண்டுமோ அது எதுவுமே இவளுக்குக் கிடைக்கவில்லை. இவள் தந்தை குடித்துவிட்டு என் மகளை அடிக்கும் காட்சியைத்தான் தினம் தினம் பார்த்து வளர்ந்தாள். என் மகளுக்கு இன்னொரு மகனும் உண்டு. அவன் மாற்றுத்திறனாளி. என் மகள் சோப்பு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறாள். வீட்டில் இருந்து நான்தான் இவர்களை வளர்த்துவருகிறேன். எங்களுக்கு முக்கால் சென்டில் சொந்தமாக ஒரு வீடு இருந்தது. ஆனால், கடன் கட்ட முடியாததால் அதை ஜப்தி செய்துவிட்டனர். அதன்பிறகு வாடகை வீட்டுக்குச் சென்றோம். சரியாக வாடகை கொடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில், என் பேத்தியால் பள்ளிக்குச் சரியாக வரமுடியவில்லை. அதை மாஸ்டரிடம் சொன்னேன். இதை நினைவில் வைத்துதான் தற்போது எங்களுக்கு நிலம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் மகளை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்று நினைத்தேன். நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், என் கணவர் அவளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அந்த நிலைமை என் பேத்திக்கும் வந்துவிடக் கூடாது. இவள் நன்கு படிக்க வேண்டும். அதுமட்டுமே என்னுடைய ஆசை” என்று பாட்டி முடிக்கும்போது, பேத்தியின் கண்கள் நீரால் நிரம்பியிருந்தன.

அவர்கள் இருவருக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு ராஜன் தொடர்கிறார், “பல்வேறு பள்ளிகளில் இருந்து நான்கு ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

எந்த இடத்திலும் அவர்களை நான் அடையாளப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். காரணம், அவர்கள் முகம் வெளியுலகுக்கு வந்து, அதனால் அவர்கள் தாழ்வுமனப்பான்மை அடைந்துவிடக்கூடாது. மாணவர்களின் மனநிலையை அறியவேண்டியது ஆசிரியரின் தலையாய கடமை. அவர்களின் வலியைத் தெரிந்துகொள்ள வேண்டும். சுல்தான்பத்தேரி எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் என் மாணவர்தான். என்னிடம் படித்த பலர் இன்று நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தற்போது கல்வி மிகவும் மோசமான ஒரு தொழிலாக மாறிவருவது மிகவும் வேதனையளிக்கிறது.

மாணவர்களின் விருப்பம் எதுவோ, அதைக் கண்டறிந்து அதில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் மூலம் மட்டுமே மாணவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். ஜாதிமதங்களைக் கடந்து, மாணவர்கள் ஒரே சீருடையில் வருவது பள்ளிக்குத்தான். இங்கிருந்துதான் நாம் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும். மனிதனை ஜாதி மதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், சகோதரனாகப் பாருங்கள் என்பதைத்தான் நான் என் மாணவர்களுக்கு அடிக்கடி சொல்லுவேன்.

தற்போது, நான் மாணவர் களுக்குக் கொடுத்திருப்பது எங்களின் பூர்வீக நிலம். என் தாயின் பெயரில் இருந்தது. என் குடும்பத்தினரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதனால், பத்திரப்பதிவு நல்லபடியாக முடிந்து, நிலத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டேன். மேலும், எங்கள் ஆசிரியர் சங்கம் மூலமாக வீடு கட்டுவதற்காக, நான்கு மாணவர்களுக்கும் தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடு கட்டத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். எந்தக் காரணத்துக்காகவும் அவர்களின் கல்வி தடைப்பட்டுவிடக் கூடாது” என்றவர் நிலத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்கிறார்.

“இந்த இடத்திலிருந்து அவர்கள் பள்ளிக்குச் சென்று, வாழ்வில் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதை நான் பார்க்க வேண்டும். இதுதான் என்னுடைய ஓய்வுக்காலத் திட்டம்” என்று உணர்ச்சி பொங்க முடித்தார்.

பாடமெடுக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் பாடமாகவே வாழ்கிறார் ராஜன்.