ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

ஆசிரியர் பக்கம்
News
ஆசிரியர் பக்கம்

சென்னையும், திருப்பூரும்... நம் பெண்களும்!

அந்த நடுத்தர குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள். அக்கா படிப்பை முடித்தபோது திருமணமா, வேலையா என்ற பெற்றோரின் மன ஊசலாட்டத்தில் இறுதியாக மகளின் உறுதி வென்றது. வேலைப்பளுவால் அவள் சற்று தாமதமாக திரும்ப நேர்ந்த தினங்களில் வீடு கொதிநிலைக்குச் சென்றது. அலுவலகம் சார்பில் வெளியூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வார பயிற்சிக்குச் செல்ல அவள் அனுமதி கேட்டு நின்றபோது, பல விசாரணைகளுக்குப் பிறகு அந்த மனுவுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

நான்கு வருடங்களுக்குப் பின், இப்போது அந்தப் பெண்ணின் தங்கை படிப்பை முடிக்கிறாள். அடுத்தது வேலைதான் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லாமல் வீடு அவளை வழியனுப்பி வைக்கிறது. வேலை காரணமாக தாமதமாக வீடு திரும்ப நேரும் நாள்களில், அதை ஒரு தகவலாக அவள் அம்மாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமாக இருக்கிறது. வெளியூர் வேலைக்கு அவள் மாற வேண்டிய தேவை வந்தபோது, அலுவலகம் அருகில் ஹாஸ்டல் தொடங்கி, மகளின் இடமாறுதலுக்கான ஏற்பாடுகளை யோசிக்க ஆரம்பிக்கிறார் அப்பா. இப்படி, குடும்பத்தின் தலைமகள்களும், சமூகத்தின் மூத்த பெண்களும் வேலைக்குச் செல்வதில் உள்ள கட்டுப்பாடுகள், அழுத்தங்களை எல்லாம் தாங்கள் வாங்கி, வீடுகளை அந்த வழமைக்கு சிறிது சிறிதாகப் பழக்கி, தங்கள் தங்கைகளுக்கு அந்தப் பாதையை இப்போது சமன்படுத்தி வைத்துள்ளார்கள்.

படிப்பு முடித்த கையோடு மகனைப்போலவே மகளையும் வேலைக்கு அனுப்ப இப்போது வீடுகள் தயார். அவர்களை பாதுகாப்புடன் வரவேற்க நகரங்கள் தயாரா? இதற்கான பாசிட்டிவ் பதிலாக, சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ஓர் ஆய்வு முடிவு. `அவதார்’ என்ற பணியிட திறனாய்வுக்கான அமைப்பு, 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பெருநகரங்களில், உழைப்புதளத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்கள் வரிசையாகப் பிடித்துள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள 25 நகரங்களில் மாநில தலைநகரங்கள் 10 மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்திய தலைநகரான டெல்லிக்கு 14-வது இடம்.

இன்னொரு சிறப்பான தரவும் இந்த ஆய்வு முடிவில் இடம்பெற்றிருக்கிறது. 10 லட்சம் மக்கள்தொகைக்குக் குறைவான நகரங்களின் பட்டியலில், இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களையும் பெற்றிருப்பவை... தமிழக ஊர்களே. திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர் என்ற பெயர்களைப் பார்க்கும்போது மகிழ்வும் பெருமையும் அதிகரிக்கிறது.

நம் மாநில நகரங்களும், அவற்றில் இயங்கும் பெண் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நிறுவனங்களும் பெண்களுக்கு வழங்கும் பயன்படுத்தத்தக்க பொது வசதிகள், பாதுகாப்பு, குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கான உடனடி நடவடிக்கை, பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை, பெண் முன்னேற்றத்துக்கு பலமான அடிப்படையை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. கடமையைச் சிறப்பாகச் செய்த அரசுக்கும், நிறுவனங் களுக்கும் பாராட்டுகள். ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல இருந்தாலும், இந்த தருண நிறைவைக் கொண்டாடுவதும் முக்கியம்.

நாம் சமூகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதை நம்பிக்கையோடு உரக்கச் சொல்வோம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்