லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே... புதிய கல்வியாண்டு...பெற்றோர் செய்ய வேண்டியவை!

நமக்குள்ளே...
News
நமக்குள்ளே...

கல்லூரி கோர்ஸை பொறுத்தவரை, பிள்ளைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விருப்பம், வயது, வட்டம், அறிவு, தேடலுக்கு ஏற்பதான் அவர்கள் ஒன்றை தேர்வு செய்வார்கள்

புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். எல்.கே.ஜி அட்மிஷனுக்கு தயாராக இருக்கும் குழந்தைகள், 10, 12 உள்ளிட்ட பொதுத்தேர்வெழுதும் வகுப்புகளுக்குச் செல்லவிருக்கும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் உரிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கவிருக்கும் மாணவர்கள், கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக் கும் மாணவர்கள் என பல வீடுகளிலும் பரபரப்புகள் தொற்றிக்கொண்டிருக்கும். இதில், நாம் நிதானத்தை இழந்துவிடாதிருக்க... சில நினைவூட்டல்கள் இங்கே!

எல்.கே.ஜி அட்மிஷனை பொறுத்தவரை `பெரிய’ பள்ளி, குறிப்பிட்ட சிலபஸ் பள்ளி உள்ளிட்டவைதான் நல்ல பள்ளிகள் என, காலை ஐந்தரை மணிக்கே அட்மிஷன் ஃபார்ம் வாங்கப் பெற்றோர் காத்திருக்கும் காட்சிகள் நமக்குப் பழகிவிட்டன. தங்கள் தேர்வுடன் அவர்கள் முக்கியமாகப் பரிசீலிக்க வேண்டியவை... தங்கள் இரண்டரை, மூன்றரை வயதுக் குழந்தையால் பயணிக்கக்கூடிய தூரத்தில் அப்பள்ளி இருக்கிறதா, குழந்தையின் கற்றல்திறனுக்கு ஏற்ற பாடத்திட்டமா அது, தங்கள் பொருளாதாரத்துக்கு ஏற்ற கட்டணமா... இருமுறை யோசித்து முடிவெடுக்கலாம்.

எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், இரண்டு வருடங்களில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள். தொலைவு உள்ளிட்ட காரணங்களுக்காகப் பள்ளி மாற்றுவது, பெற்றோர் வேலைக்கேற்ப ஊர் மாற்றுவது உள்ளிட்ட சூழல்கள் இருந்தால், அது குறித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கையில் இருக்கும். பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையிலோ, பள்ளியில் மவுசு உள்ள குரூப் என்று சொல்லப்படுவதிலோ, பெற்றோர்/பிள்ளையின் நண்பர்கள் சொல்லும் குரூப்பையோ தேர்ந்தெடுப்பது வேண்டாம். கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம் என்பது பற்றிய தோராயமான திட்டமிடலை உருவாக்கிக்கொண்டு, அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரிப் படிப்பு முடிவில் பின்னர் மாற்றம் வரலாம்தான். என்றாலும், எதற்காக இந்தப் பாடப்பிரிவு என்ற திட்டமிடலே இல்லாமல் `டிக்' செய்வதைவிட, ஒரு நோக்கத்துடன் நம் தேர்வு இருக்கும்போது அதை நோக்கி நகர்வதற்கான செயலாக்கம் கிடைக்கும்.

கல்லூரி கோர்ஸை பொறுத்தவரை, பிள்ளைகளின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விருப்பம், வயது, வட்டம், அறிவு, தேடலுக்கு ஏற்பதான் அவர்கள் ஒன்றை தேர்வு செய்வார்கள். பெற்றோர் அதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அவர்களுடன் அதுபற்றி கலந்துரையாடி இரு தரப்புமாக இறுதி முடிவை எடுக்கலாம். தேவைப்பட்டால் கல்வியாளர்களிடம் கவுன்சலிங் செல்லலாம்.

நம் கல்வித்திட்டம் மதிப்பெண்களை நோக்கியதே. எனவே, பள்ளி இறுதியாண்டு வரை அதை முதன்மையாக வைத்தே மாணவர்களையும் நாம் முன் நகர்த்துகிறோம். ஒருவேளை மதிப்பெண்கள் குறைந்துவிட்டால், அது மட்டுமே வெற்றிக்கான திறவுகோல் அல்ல என்ற உண்மையை, நம்பிக்கையை அப்போது நம் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் பெற்றோர்களாகவும் இருப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்