ஜனவரி 13 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) திருத்தச் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தார்.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆள்சேர்ப்பு முகமை மூலம் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும், ‘தமிழில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பணிகளில் அமர முடியாது’ என்றும் கூறினார்.
ஏற்கெனவே இருந்த பழைய சட்டத்தின்படி, அரசு பணியில் அமருபவருக்கு ஒன்று தமிழ் தெரிய வேண்டும். தமிழ் தெரியவில்லை என்றால், தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகளுக்குள் தமிழைத் தெரிந்துகொண்டோம் என்று இன்னொரு தேர்வில் காண்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அப்படிச் செய்யாவிட்டால், வேலை பறிபோகும்!

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, பல குளறுபடிகள் நடந்த காரணத்தினால்தான், தேர்வு எழுதுவதற்கு முன்பே முதல் தாளைத் தமிழில் எழுதி, அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற தேர்வுகளை எழுத முடியும் என்று அரசு முடிவுசெய்து அரசாணை வெளியிடப்பட்டு அது செயல்பாட்டில் இருந்து வந்தது என்று கூறினார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட அரசாணைப்படி, பல துறைகளில் பல தேர்வுகள் நடந்துவிட்டிருந்தன. அந்தச் சூழ்நிலையில், மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மெண்ட் (Medical Services Recruitment) தேர்வுக்கான அறிவிப்பு வந்தபோது, ஒரு நபர் அரசாணையை எதிர்த்து, அது சட்டத்திற்கு விரோதமானது என்று மதுரை கிளை நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில், நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்திருந்தது. அதைத்தொடர்ந்து, வல்லுநர்களை நாடி அரசாணையில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் அவையில் அறிமுகம் செய்திருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
அப்போது, தமிழர்கள்தான் தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் அமர வேண்டும் என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் T. வேல்முருகன் தம் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ஆளூர் ஷாநவாஸ் ஆதரவு தெரிவித்தார்.
உறுப்பினர்களின் கோரிக்கை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘இன்றைக்கு இதை(மசோதாவை) நிறைவேற்றவில்லை என்றால், தமிழ் தேர்வே தேவையில்லை என்ற சூழ்நிலை வந்துவிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே இந்த சட்ட முன்வடிவை கொண்டு வந்திருக்கிறோம். இது இறுதித் திருத்தம் என்று சொல்வதற்கில்லை’ என்றார்.
இந்தச் சட்ட முன்வடிவின் மூலமாக, ஏற்கெனவே இருந்த பழைய சட்டப்பிரிவு 21-க்குப் பிறகு ஒரு புதிய பிரிவை (21-A) சேர்த்துள்ளார்கள். எனவே, ‘டிசம்பர் 1, 2021 முதல் நேரடி ஆள்சேர்ப்பு மூலம் எந்தவொரு சேவையிலும், எந்தவொரு பதவிக்கும் ஆள்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் எந்தவொரு நபரும் ஆள்சேர்ப்புக்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழி தாளில் நாற்பது சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற வேண்டும்.’ என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.