சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

குழந்தைகளுக்கு மைதானங்களும் வேண்டும்!

விளையாட்டு மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
News
விளையாட்டு மைதானம்

90% தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. ஆனால் 1% கூட அதைப் பயன்படுத்துவதில்லை.

பள்ளிகள் குழந்தைகளைக் கவரும் விதமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே கல்வியோடு விளையாட்டையும் இணைத்தார்கள். பாடவேளைகளில் விளையாட்டுக்கென்று நேரமும் ஒதுக்கிவைத்தார்கள். பள்ளிகளில் பட்டை தீட்டப்பட்டவர்களே பிற்காலத்தில் ஒலிம்பிக் வரைக்கும் எட்டிப் பிடித்தார்கள். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு வகுப்பு சம்பிரதாயமாகவே இருக்கிறது. விளையாட்டு ஆசிரியர்கள், வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துபவர்களாகவும் பள்ளி ஒழுங்கைக் காப்பவர்களாகவுமே பணியாற்றுகிறார்கள். இதைவிடவும் அவலம், பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே இல்லை என்பது!

சமீபத்தில் பொதுநல வழக்கொன்றின் விசாரணையின்போது பள்ளிக்கல்வித்துறை நீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கை, இந்த மோசமான நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. 2018-ல் மருத்துவர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் ‘தமிழகத்தில் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. கல்விக்கு இணையாக உடற்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்' எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த அறிக்கையில், ‘சென்னை மாவட்டத்தில் உள்ள 1,434 பள்ளிகளில் 367 பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை; 21 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை; 290 பள்ளிகளில் கழிப்பறைகளில் குப்பைத் தொட்டிகள் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு மைதானங்களும் வேண்டும்!

பள்ளிகள் தொடங்க ஊரகப் பகுதியாக இருந்தால் 3 ஏக்கர், பேரூராட்சியாக இருந்தால் 1 ஏக்கர், நகராட்சியாக இருந்தால் 55 சென்ட் நிலம் இருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தோடு பள்ளிக் கட்டடத்தின் முன் தோற்றம் மற்றும் விளையாட்டு மைதானத்துடன் சேர்ந்த புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். அரசுப்பள்ளிகளைத் தொடங்கும்போது விளையாட்டு மைதானத்தையும் சேர்த்தே திட்டமிடுவது வழக்கம்.

‘‘சென்னையைப் பொருத்தவரை நிலத்தடி நீர் குடிக்கமுடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. கழிவறைக்கு மட்டுமே நிலத்தடிநீரைப் பயன்படுத்த முடியும். குடிநீரை, மெட்ரோ வாட்டர் நிறுவனத்திடம்தான் வாங்கவேண்டும். அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தண்ணீருக்கென்று நிதியாதாரம் ஏதுமில்லை. சாதாரணமாக சென்னையில் 2,400 சதுர அடி உள்ள ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு தண்ணீர்க் கட்டணம் 11,000 ரூபாய் வருகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு பள்ளிக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய் தேவைப்படும். சென்னையிலிருக்கும் பல பள்ளிகளில் தலைமையாசிரியரோ, அப்பகுதி கவுன்சிலரோதான் இந்தப்பணத்தைச் செலுத்துகிறார்கள். பல பள்ளிகளில் என்ஜிஓக்கள் ஆர்.ஓ பிளாண்ட் போட்டுத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் சில மாதங்களிலேயே உரிய பராமரிப்பின்றி செயலிழந்து விடுகின்றன.

அரசு உதவிபெறும் பள்ளிகள் உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்டவை. இன்று அவற்றின் நிலையும் மாறிவிட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில பள்ளிகளின் நிர்வாகிகள், பள்ளியை வணிக நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். தனியார் பள்ளிகளின் நிலை ரொம்பவே மோசம். பெரும்பாலான பள்ளிகள் விளையாட்டு வகுப்புகளிலும் பாடங்களை நடத்துகிறார்கள். பிள்ளைகளை விளையாடவே விடுவதில்லை. விளையாட்டு ஆசிரியர்கள் பிள்ளைகளோடு தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள். பல பள்ளிகளில் உரிய கட்டமைப்புகள் இல்லை. ஒவ்வோராண்டும் ‘அடுத்தாண்டுக்குள் செய்து விடுகிறோம்' என்று சொல்லிச் சொல்லியே தற்காலிக அங்கீகாரத்தை வாங்கி விடுகிறார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது நீதிமன்றம் இந்தச் சூழலை மாற்றும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது’’ என்கிறார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் பெருமாள்சாமி.

கீலோ மாஸ்டர்ஸ் கேம்ஸ் ஃபவுண்டேஷன் தலைவரும் (Khelo Master's Games Foundation) இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனுமான புருஷோத்தமன், ‘‘இது மிகவும் மோசமான சூழல்’’ என்கிறார்.

புருஷோத்தமன், பெருமாள்சாமி
புருஷோத்தமன், பெருமாள்சாமி

‘‘90% தனியார் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. ஆனால் 1% கூட அதைப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் ஆர்வமுள்ள, துடிப்புள்ள விளையாட்டு மாஸ்டர்கள் இல்லை. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் கட்டாயம் விளையாட்டுப் பயிற்சி தரப்படவேண்டும். உலகளவில் விளையாட்டில் முன்னிலை வகிக்கிற சீனா, ஜப்பான், கொரிய நாடுகளில் 6 வயது முதல் விளையாட்டுப் பயிற்சி தருகிறார்கள். பள்ளிகளில் தரப்படும் அடிப்படைப் பயிற்சிதான் தேசத்துக்கான விளையாட்டு வீரர்களை உருவாக்கும். கல்விக்குத் தரும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டுக்குத் தரவேண்டும். விளையாட்டு ஆசிரியர்களுக்கு தகுதிகளை வரையறுக்க வேண்டும். இனியேனும் அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்’’ என்கிறார் புருஷோத்தமன்.

திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதுதான் கல்விக்கூடங்களின் பணி. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளின் அங்கீகாரங்களை ரத்து செய்யவேண்டும். குடிநீரில்லா பள்ளிகளுக்கு அரசு பொறுப்பேற்கவேண்டும்!