சமூகம்
அலசல்
Published:Updated:

‘ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ ரத்து - சிறுபான்மையினரை ஒடுக்கும் நடவடிக்கையா?

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

மாணவர்கள் படிப்பதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பாகுபாடு எதற்கு..

“மாணவர்களின் கற்றலே, இந்தியாவின் கற்றல். மாணவர்களின் வெற்றியே, இந்தியாவின் வெற்றி. மாணவர்களின் வளர்ச்சியே, இந்தியாவின் வளர்ச்சி.” - சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலையில் நடந்த பட்டமளிப்புவிழாவில் பிரதமர் மோடி பேசிய வார்த்தைகள் இவை. ஆனால், இதற்கு நேர்மாறாக 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கான ‘ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’-ஐ ரத்துசெய்திருக்கிறது மத்திய அரசு.

இது குறித்து நம்மிடம் பேசிய ‘பொதுக்கல்விக்கான மாநில மேடை’யின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “கல்வி, பொருளாதாரத்தில் இந்திய முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பதாகக் கூறிய நீதியரசர் ராஜிந்தர் சச்சார் தலைமையிலான சச்சார் கமிட்டி, அவர்களின் நிலையை மேம்படுத்த 76 பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதையும்கூட உடனே நம் ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இஸ்லாமியர்களும் இடதுசாரிகளும் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்ததாலேயே இந்தக் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்போது உதவித்தொகையை நிறுத்தியதால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் புத்த, சமண, பார்சி உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையின ஏழைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

‘ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ ரத்து - சிறுபான்மையினரை ஒடுக்கும் நடவடிக்கையா?

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி நடுநிலைக் கல்வி வரை ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்கப்படுவதால்தான், 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை வெறும் கல்விக் கட்டணத்துக்கு மட்டுமானதல்ல... போக்குவரத்துச் செலவு, மதிய உணவு, புராஜெக்ட் செய்தல், கல்விச் சுற்றுலா போன்ற கல்வி சார்ந்த இணைச் செயல்களுக்கும் பயன்படும். எனவே, எப்படிப் பார்த்தாலும் உதவித்தொகை ரத்துசெய்யப்பட்டது நியாயமற்றது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசனிடம் கேட்டபோது, “மாணவர்கள் படிப்பதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பாகுபாடு எதற்கு... ஏற்கெனவே இந்தியாவில் ஏராளமான சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் அரசின் உதவியோடு இயங்குகின்றன. அங்கு அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக்கூடக் கடைப்பிடிக்காமல், தங்கள் மதத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். கல்வி உதவித்தொகை நிறுத்தத்தை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கத் தேவையில்லை. ஓர் அரசாங்கம், மக்களை மத அடிப்படையில் பிரித்துப் பார்த்து சலுகை வழங்குவது நியாயமில்லை. சிறுபான்மையின மாணவர்களுக்குக் கொடுக்கிற சலுகைகளைப் பெரும்பான்மையின மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடக்கின்றன. எனவே இந்த அரசு என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு - ராம சீனிவாசன்
பிரின்ஸ் கஜேந்திரபாபு - ராம சீனிவாசன்

சிறுபான்மையினர் கல்வியில் பின்தங்கினால், ஒட்டுமொத்த தேசத்தின் கல்வி விகிதமும் பின்னுக்குப் போகும் என்பதை ஆள்வோர் உணர்வார்களா?