2019-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவரும்பொருட்டு, புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. இருப்பினும், இயக்குநருக்கே முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தி.மு.க ஆட்சியில் முழு அதிகாரமும் ஆணையருக்கே என்னும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. `கல்வித்துறை சார்ந்த ஒருவரை இயக்குநராக நியமிப்பதற்கு பதிலாக, நிர்வாக நோக்கத்துக்காக ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிப்பது இந்தத் துறையை மேலும் சிக்கலில் தள்ளும்" எனக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கல்வியாளர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசின் இந்த முடிவை எதிர்த்துவந்தனர்.

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார், மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் நிர்வகித்துவந்த பதவிக்கு வேறு யாரையும் அரசு நியமிக்கவில்லை. முற்றிலுமாக அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டு, மீண்டும் இருந்ததைப்போல ‘இயக்குநர்’ பதவி உருவாக்கப்படும் என்னும் தகவலும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாகத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``இது தொடர்பான கோரிக்கைகள் அமைச்சருக்கு வந்தவண்ணமிருந்தன. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளிநாட்டுப் பயணமாக லண்டனுக்குச் சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம்” என்றனர். தற்போது அமைச்சர் தமிழகத்துக்குத் திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜனிடம் பேசினோம். ``தமிழகத்தில் 3.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், 1.5 லட்சம் அரசு உதவிப் பெறும் ஆசிரியர்கள், தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கோடிக்கணக்கான மாணவர்கள் இந்தத் துறையின் அங்கமாகயிருக்கிறார்கள். ஆணையர் என்பவர் நிர்வாக அடிப்படையில் செயல்படக்கூடியவர். அவருக்குக் கல்வி சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் இருக்கலாம். மேலும் ஆளுநரும், `ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்குத்தான் பணி செய்ய வேண்டும்' எனச் சொன்னதும், அவர்கள்மீதான நிர்வாகச் செயல்பாடுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கெல்லாம் தீர்வு, மாநில அரசு இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதில் கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை நியமித்து முழு அதிகாரத்தைத் தர வேண்டும். இயக்குநரை நியமிப்பது அவசியம் என்பதை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தற்போது, மாநிலத்தின் சுயாட்சியை நிலைநிறுத்த, மாநிலக் கல்விக் கொள்கை உருவாகிவருகிறது. இந்த நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயக்குநர் பதவி இருக்க வேண்டும். இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்குச் சிறந்தது” என்றார்.
இது தொடர்பாக கல்வியாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான முருகப்பன் ராமசாமி பேசுகையில், ``புதிய கல்விக் கொள்கையில்தான் ’ஆணையர்’ என்னும் பதவி இருக்கிறது. அது தமிழகத்துக்குத் தேவைதானா... என்னும் விமர்சனம் அந்தப் பதவி உருவாக்கப்படும்போதே முன்வைக்கப்பட்டது. சமீபத்தில், மாநிலக் கல்விக் கொள்கை என்னும் பெயரில், புதியக் கல்விக் கொள்கையிலுள்ள அம்சங்களை முன்மொழிவதாகக் கூறி, மாநில பாடத்திட்டக் கொள்கைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன் வெளியேறினார். முன்னதாகவே, ஆணையர் பதவியைக் கலைக்க வேண்டுமென்னும் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது ஜவஹர் நேசனும் வெளியேறியிருக்கும் இந்தச் சூழலில், புதிதாக ஆணையரை நியமிப்பது மீண்டும் சர்ச்சையாகும்.
நீட் பிரச்னையை எப்படி மாநில அரசால் தீர்க்க முடியவில்லையோ, அதேபோல் புதிய கல்விக்கொள்கையையும் தவிர்க்க முடியாமல் ஏற்றுக்கொள்ளும் சூழல்தான் தமிழகத்தில் உருவாகும். அதன் தொடக்கம்தான் இந்த ஆணையர் என்னும் அதிகாரப் பதவி. ஏற்கெனவே, ஜவஹர் நேசன் விலகல் புயலைக் கிளப்பியிருப்பதால், இப்போது ஆணையரை நியமிக்காமல் இருப்பதே நல்லது என்னும் நோக்கத்தில் மட்டுமே இது தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. இந்தக் காலதாமதத்தை `ஆணையர் பதவி கலைப்பு' என்றும், `மீண்டும் இயக்குநர் பதவி உருவாக்கப்படும்' என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவேளை, ஆணையரின் அதிகாரத்தை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால், மொத்தமாகப் பதவியைக் காலிசெய்யும் நடவடிக்கை இருக்காது என்பதே என்னுடைய கருத்து” என்றார்.