அரசியல்
அலசல்
Published:Updated:

10-ம் வகுப்பில் 29-வது ரேங்க்... கல்வியில் தடுமாறும் தலைநகர்! - என்ன சொல்கிறார் அமைச்சர் அன்பில்?

அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பில் மகேஸ்

மாணவர்களின் வாழ்க்கைச் சூழல் தெரியாமல், திட்டங்களை வகுத்து, அதற்குக் கோடி கோடியாகச் செலவு செய்தால் எந்தப் பயனும் இல்லை.

பத்தாம் வகுப்புக்கான ரிசல்ட் வெளியாகி ஒரு வாரம் கடந்தும், தலைநகர் சென்னையின் தேர்ச்சி சதவிகிதம் தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கிறது. காரணம், தேர்ச்சி விகிதத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 29-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது சென்னை மாவட்டம்!

பின்தங்கிய மாவட்டங்களாகக் கருதப்படும் அரியலூர், ராமநாதபுரம், தருமபுரியைவிடவும் தேர்ச்சி விகிதத்தில் சென்னை பின்தங்கியதற்கு என்ன காரணம் என்று கல்வியாளர் பொன்.தனசேகரனிடம் கேட்டோம். “கிராமப்புறப் பள்ளி மாணவர்களைவிட நகர்ப்புற பள்ளி மாணவர்களின் கல்விச்சூழல் கொரோனாவுக்கு பின்னர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை போன்ற பெருநகர அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலானோர் விளிம்புநிலையில்தான் இருக்கின்றனர். அவர்களால், தங்கள் குழந்தைகளின் கல்வியை மேற்பார்வையிட முடிவதில்லை. இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக இருந்தாலும், அதைச் சரிசெய்ய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ப்ளஸ் டூ தேர்வில் அதிக மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது சர்ச்சையானதால், 10-ம் வகுப்பில் இடைநின்ற மாணவர்களைக் கடைசி நேரத்தில் கண்டுபிடித்து, தேர்வு எழுத வைத்திருக்கிறார்கள். அதுவும் தேர்ச்சி விகிதம் குறைய ஒரு காரணம். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, தொடக்கப் பள்ளி முதலே மாணவர்களின் கல்வியில், அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

சென்னை மாநகராட்சிப் பள்ளியின் தேர்ச்சி விகிதமும் மோசமான நிலைமையிலேயே (79.60%) இருக்கிறது. பிற நலத்துறைகள் சார்ந்த சிறப்புப் பள்ளிகளைவிட மிகக் குறைவான தேர்ச்சி விகிதத்தையே பெற்றிருக்கின்றன மாநகராட்சிப் பள்ளிகள். உதாரணமாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளி தேர்ச்சி விகிதம், 83.99%-ஆகவும், வனத்துறை பள்ளிகளில் 91.23%-ஆகவும், கள்ளர் சீர்மரபினர் பள்ளிகளில் 92.55%-ஆகவும், சமூக நலத்துறைப் பள்ளிகளில் 91.53%-ஆகவும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 86.12%-ஆகவும் இருக்கிறது. இதில் வனத்துறை மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் பெரும்பாலும் எங்கோ ஒரு காட்டுக்குள்தான் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட தலைநகர் சென்னையிலுள்ள அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சரிந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

அதேபோல, சென்னையின் மையப்பகுதியிலுள்ள கீழ்ப்பாக்கம், கிண்டி, கோயம்பேடு, வேளச்சேரி அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தைவிட, பெருங்குடி, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலுள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மாணவர்கள்
மாணவர்கள்

இது குறித்து ‘பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம். “சென்னையிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே இரு வகைகள் இருக்கின்றன. குடிசைப் பகுதிவாசிகள், நடைபாதையில் வசிப்போர் ஆகியோரின் பிள்ளைகளும், நகர்ப்புற ஏழைகளின் பிள்ளைகளும் படிக்கும் அரசுப் பள்ளிகள் ஒரு வகை; ஓரளவு வசதிபடைத்தவர்களின் பிள்ளைகள் பயிலும் அரசுப் பள்ளிகள் இன்னொரு வகை. இதில், முதலில் குறிப்பிட்ட வகைப் பள்ளிகள்தான் மிகக்குறைந்த தேர்ச்சியை பெற்றிருக்கின்றன. நகர்ப்புற வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் மாணவன், பள்ளிக்கு வந்து செல்லவே பல மணி நேரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. இதோடு பிள்ளைகளின் வாழ்க்கைச் சூழலும் சரியில்லாமல் இருப்பது அவர்களது படிப்பைப் பாதிக்கத்தான் செய்யும்.

பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர், கமிஷனர், இயக்குநர் என மொத்த உயரதிகாரிகளும் தலைநகர் சென்னையில் இருந்தும், பள்ளிகளின் நிலை படுமோசமாக இருக்கிறதென்றால், இதை அரசின் தோல்வியாகத்தான் பார்க்க வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைச் சூழல் தெரியாமல், திட்டங்களை வகுத்து, அதற்குக் கோடி கோடியாகச் செலவு செய்தால் எந்தப் பயனும் இல்லை. கிராமப்புறங்களிலும் ஏழை மக்களின் குழந்தைகள்தான் அரசுப் பள்ளிகளில் அதிகம் படிக் கின்றனர். ஆனாலும், சென்னையோடு ஒப்பிடுகையில் அங்கெல்லாம் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதற்குக் காரணம், அங்கு ஓரளவுக்காவது வாழ்க்கைச் சூழல் நன்றாக இருப்பதுதான். மாணவர்களுக்கான வாழ்க்கைச் சூழலை முறைப்படுத்தாமல், தேர்ச்சியை ஒருபோதும் உயர்த்த முடியாது” என்றார் காட்டமாக.

பொன்.தனசேகரன் - பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொன்.தனசேகரன் - பிரின்ஸ் கஜேந்திர பாபு

இந்தப் பிரச்னைகளை எப்படிக் களையப் போகிறது அரசு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கேட்டோம். “கொரோனா பாதிப்பிலிருந்து கல்விச் சூழல் இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இது நம் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னை. இருந்தபோதும், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் மூலம் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் விளைவாகத்தான், சென்னையில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் சற்று அதிகமாகியிருக்கிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும் கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல, தேர்ச்சி பெறாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை துணைத் தேர்வு எழுத ஊக்குவித்துவருகிறோம். தொடர்ந்து குறைவான தேர்ச்சி விகிதம் பெறும் பள்ளிகளில், நானே நேரில் சென்று ஆய்வு நடத்திவருகிறேன். வரும் காலங்களில் 100 சதவிகித தேர்ச்சி என்பதே எங்களின் இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து நாங்கள் பயணிக்கிறோம்” என்றார் உறுதியாக!