Published:Updated:

தேர்வுப்பிரச்னைக்குத் தீர்வு வேண்டும்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`கல்வியில் சிறந்த தமிழ்நாடு', ‘அறிவுசார்ந்த மாநிலம்', ‘உயர்கல்வியில் இந்தியா அடைய நினைக்கும் இலக்கை, இப்போதே அடைந்துவிட்டோம்' - இப்படியெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் நாம் இப்போது வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆம், மார்ச் 13-ம் தேதி தொடங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வை எழுத ஐம்பதாயிரம் மாணவர்கள் வரவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப்பள்ளி மாணவர்கள். இதற்குத் தமிழ்நாடு அரசு புதிது புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லும் காரணங்கள், அதைவிட வேதனை தருபவையாக இருக்கின்றன.

‘‘கொரோனா காலகட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல், பதினோராம் வகுப்புக்கு அனைத்து மாணவர்களும் வந்துவிட்டார்கள். பொதுவாக பத்தாம் வகுப்புத் தேர்வில் சுமார் 5 சதவிகித மாணவர்கள் தோல்வி அடைவார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் பதினோராம் வகுப்பில் சேர்ந்துவிட்டனர். பாடச் சுமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த மாணவர்களில் கணிசமானவர்கள் பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார்கள். இப்படித் தோல்வி அடைந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துப் பொதுத்தேர்வு எழுத முடியும். ஆனால், பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்று தாங்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். இன்றைய பிரச்னைக்கு இதுதான் மூல காரணம்'' என்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை.

‘குடும்பச்சூழல், வறுமை போன்ற காரணங்களால் மாணவர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டதுதான் தேர்வு எழுத வராததற்குக் காரணம்' என்று ஒருநாள் சொல்கிறார் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. இன்னொரு நாள், ‘மாணவர்கள் பலர் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்கில் சேர்ந்துவிட்டார்கள். அதனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதுதான் காரணம்' என்கிறார். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வேறு படிப்புகளில் சேர முடியாது என்பது அமைச்சருக்குத் தெரியாதா?

மாணவர்களின் வருகைப்பதிவைக் கண்காணிக்க `கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை' நடைமுறையில் இருக்கும் இந்தச் சூழ்நிலையில்கூட மாணவர்களின் வருகை குறைந்துபோனது அரசுக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே தெரியாமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.

‘மாணவர்கள் யாரையும் கைவிடாமல் கல்விக்குள் கொண்டு வருகிறோம். இரண்டு நாள்கள் பள்ளிக்கு வந்திருந்தால்கூட ஹால் டிக்கெட் கொடுத்துத் தேர்வு எழுதச் சொல்கிறோம்' என்று அமைச்சர் சொல்வதெல்லாம் இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு அல்ல. சொல்லப்போனால், இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.

மதிய உணவு தொடங்கி, விலையில்லாத மடிக்கணினி, சைக்கிள் போன்ற திட்டங்கள் எல்லாம் செயல்பாட்டில் இருந்தும் ஏன் இத்தனை பேர் தேர்வு எழுதாமல்போனார்கள் என்பதைத் தமிழ்நாடு அரசு உடனடியாகக் களத்தில் இறங்கிக் கண்டறிய வேண்டும். எளிய குடும்பங்களுக்குக் கல்வியின் அவசியத்தைப் புரியவைப்பதிலும், கற்றலை ஈர்ப்புடையதாக மாற்றுவதிலும், அதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதிலும், ஆசிரியர்களுக்குத் தொடர் பயிற்சி அளிப்பதிலும், செறிவான பாடத்திட்டங்களை வகுப்பதிலும் அடங்கியிருக்கிறது இந்தப் பிரச்னைக்கான தீர்வு.