அரசியல்
Published:Updated:

ஓடி விளையாடாதே பாப்பா! - பாரதியார் படித்த பள்ளியில் மைதான சர்ச்சை

அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’

எட்டயபுரத்தைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு கல்வி பயின்றுவருகிறார்கள்

‘ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...’ என்று குழந்தைகளுக்காகப் பாடல் எழுதிய பாரதியார் படித்த பள்ளியிலேயே, ‘மைதானத்தைத் தனியாருக்கு விற்றுவிட்டதாக’ புகார் எழுந்திருக்கிறது!

மகாகவி பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’ இருக்கிறது. பாரதியார் படித்த இந்தப் பள்ளியின் விளையாட்டு மைதானத்துக்காக 5.03 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை 1996-ல் தமிழக அரசு வழங்கியது. இந்த நிலம்தான் முறைகேடாகத் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக புகார் எழுந்திருக்கிறது.

அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’
அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’
அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’
அரசு உதவி பெறும் ‘ராஜா மேல்நிலைப்பள்ளி’

இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கும் முன்னாள் மாணவர் காஜா மைதீன் நம்மிடம், “எட்டயபுரத்தைச் சுற்றியுள்ள 40 கிராமங்களிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இங்கு கல்வி பயின்றுவருகிறார்கள். ஆனால், பள்ளியின் தற்போதைய செயலரான ராம்குமார் ராஜா, விளையாட்டு மைதானத்துக்காக அரசு கொடுத்திருந்த 5 ஏக்கர் நிலத்தில், 3 ஏக்கர் நிலத்தை மோசடியாகச் சிலருக்கு விற்பனை செய்திருக்கிறார். ‘அரசு புறம்போக்கு நிலத்தை, முறைகேடாக விற்றுள்ளனர்’ என்பதற்கான ஆவண ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். வழக்கை விசாரித்த நீதிமன்றமும், ‘இந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்கக் கோரி பள்ளிக்கல்வித்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்’ ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ‘பாரதியார் படித்த இந்தப் பள்ளியை மோசடிக் கும்பலிடமிருந்து மீட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும்’ எனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்’’ என்றார்.

காஜா மைதீன், ராம்குமார் ராஜா, செந்தில்ராஜ்
காஜா மைதீன், ராம்குமார் ராஜா, செந்தில்ராஜ்

பள்ளிச் செயலரான ராம்குமார் ராஜாவிடம் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டபோது, “அது என் தந்தையாரின் பூர்வீக நிலம். அவரின் வாரிசு என்ற முறையில், பள்ளியின் வளர்ச்சிக்காக அரசின் அனுமதி பெற்றே, அந்த நிலம் விற்கப்பட்டது. மற்ற விவரங்களை நான் நீதிமன்றத்தில் கூறிக்கொள்கிறேன்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசியபோது, “5.03 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், விற்பனை செய்யக் கூடாது என்றெல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுத்தான் பள்ளி நிர்வாகத்துக்கு நிலம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலத்துக்கான பட்டாவிலும், ‘பள்ளியின் விளையாட்டு மைதானம்’ என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் மறைத்து 3 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்திருக்கிறார் பள்ளிச் செயலர். எனவே, சம்பந்தப்பட்ட பத்திரப் பதிவை ரத்துசெய்யவும், நிலத்தைச் சீரமைத்து மீண்டும் விளையாட்டு மைதானத்தை மாணவர்களின் பயன்பாட்டுக்கே கொண்டுவரவும் அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறேன். நீதிமன்றத்திலும் இதே கருத்து முன்வைக்கப்படும்” என்றார்.

‘படித்தவன் பாதகம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்!’ - பாரதி!