Published:Updated:

பள்ளிக் கல்வித்துறையின்கீழ் வரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்... அரசின் நடவடிக்கை சரிதானா?!

தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை

பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவந்த பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவந்திருப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கின்றன.

Published:Updated:

பள்ளிக் கல்வித்துறையின்கீழ் வரும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்... அரசின் நடவடிக்கை சரிதானா?!

பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவந்த பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவந்திருப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கின்றன.

தமிழ்நாடு அரசு - பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டின் 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் பள்ளிகள், இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை என அரசின் பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவந்த பள்ளிகள் அனைத்தும் இனி பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவரப்படும் எனவும், பள்ளிக்கல்வித்துறைக்கு 40,299 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவந்த பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவந்திருப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியிருக்கின்றன. சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற கல்வித்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

நம்மிடம் பேசியவர்கள்,

தேசிய புதிய கல்விக் கொள்கையின்கீழ் திட்டமா?

`` பள்ளிக் கல்வித்துறையைத் தவிர்த்து, வேறு துறைகளின் கீழ் பள்ளிகள் இயங்குவதைத் தவிர்த்துவிட்டு, ஒரே குடையின்கீழ் பள்ளிக்கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்பது தேசிய புதிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம். அதை அமல்படுத்தும் வகையிலேயே தற்போது இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது. 

சிறப்பு கவனம் அடிபடும்!

இந்தத் திட்டத்தால் முதலில் ஆதிதிராவிடர்கள், பழங்குடி மாணவர்கள்மீதான சிறப்பு கவனம் அடிபடும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கென்று மாவட்டவாரியாக ஓர் அலுவலர் இருப்பார். அவர் அந்தந்த மாவட்டங்களிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது ஆய்வுசெய்து தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பார். இந்த இணைப்பு காரணமாக இனி பள்ளிக்கல்வித்துறைக்கான மாவட்டக் கல்வி அலுவலரே  பள்ளிகளை ஆய்வுசெய்வார். ஏற்கெனவே மாவட்டத்திலிருக்கும் பல ஆயிரம் பள்ளிகளில் ஒன்றாகவே ஆதிதிராவிடர் பள்ளிகளும்  கணக்கில் கொள்ளப்படும். இப்படி இருக்கும்போது எப்படி ஆய்வு நடக்கும், எப்படித் தரம் மேம்படும்?

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை

சிறப்புத் திட்டங்களின் நிலை என்னவாகும்? 

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்புவரை சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்புத் திட்டம் இருக்கிறது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் நிதியும் ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் நிலை தற்போது என்னவாகும்... உண்டு உறைவிடப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், சோப்பு முதல் பள்ளியில் சுற்றுலா செல்ல படி (Allowence), வீட்டுக்குச் செல்லும்போது படி, உயர்கல்வி படிக்கும்போது படி எனப் பல்வேறு வகையான திட்டங்கள் இருக்கின்றன. அது போன்ற திட்டங்களின் நிலை என்னவாகும்?

அதிகாரக் குவிப்பு!

அரசியல்ரீதியாக மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு (Centralization) எதிராகத் தொடர்ந்து வினையாற்றிவரும் தி.மு.க., அதற்கு நேர் எதிராக இந்த விவகாரத்தில் Centralization-ஐ ஆதரிப்பது நியாயமா... ஒரு பேச்சுக்கு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான பல்வேறு சலுகைகள் தொடரும் எனக் கொண்டாலும், அவை கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியுமா?

மாணவர்கள் வெறும் நம்பராக மாறும் அபாயம்!

அண்மையில் 50,000 மாணவர்கள் தேர்வுக்கு வராதது குறித்து ஆய்வுசெய்து, பின்னர் அது குறித்து விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், `தேர்வெழுதாத மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்ந்துவிட்டார்கள்' என்கிறார். மாற்றுச் சான்றிதழ் வாங்காமல் எப்படிச் சேர முடியும் என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல் பேசுகிறார். இந்த நிலையில், தற்போதைய இணைப்பு காரணமாக இந்த மாணவர்கள் வெறும் நம்பர்களாக மட்டுமே பார்க்கப்படுவார்கள். ஆதிதிராவிடர் பள்ளியில், ஒரு வாரத்துக்கு மேல் அவர்கள் வராவிட்டால், உடனே வீட்டுக்குச் சென்று காரணம் கேட்பார்கள். பள்ளிக்கல்வித்துறையில் இது சாத்தியமா... ஏற்கெனவே இலவச சைக்கிள் முதல் ஸ்மார்ட் கிளாஸ் வரை பள்ளிக்கல்வித்துறையின் அனைத்துத் திட்டங்களும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் செயல்பட்டுவரும்போது, இந்த இணைப்பு மூலமாக அரசு என்ன சாதிக்க விரும்புகிறது என்ற கேள்வி எழுகிறது.

பள்ளிக்கல்வித்துறை வளாகம்
பள்ளிக்கல்வித்துறை வளாகம்

இவ்வளவு ஏன், ஆதி திராவிடர் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறைதான் தேர்வு நடத்தி சான்றிதழ் தருகிறது. இந்த நிலையிலேயே எத்தனை ஆதிதிராவிட மாணவர்கள் உயர்கல்வி பயின்றனர் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் அரசிடம் கிடையாது. இந்த நிலையில், இந்த இணைப்பால் மாணவர்கள் கடலில் கொட்டிய உப்பைப்போல் கரைந்துவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. 

இந்த மாற்றம் இதர துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்களை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. இதே போன்று ஆதிதிராவிடர் நலம், பிற்பட்டோர் நலம் எனச் சமூக அடிப்படையிலான பள்ளிகளுக்கு தனித்துவ நிதியுதவி, விடுதி ஏற்பாடுகள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் இனி எந்த மாதிரியான மாற்றத்துக்கு ஆளாகும் என்ற கேள்வியும் அந்த மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஆனால், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் வாசிப்பினூடே, `ஆசிரியர், மாணவர்களுக்கு எந்த பாதிப்புமின்றி இந்த மாற்றங்கள் செய்யப்படும்’ என அறிவித்திருக்கிறார். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பயிலும் மாணவர் நலத்திட்டங்களை ஒருங்கே சென்று சேர்க்கவும் இவை உதவும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும், ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பையும் தனது அறிவிப்பில் நிதியமைச்சர் உறுதிசெய்திருக்கிறார். இந்த உறுதி எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை வரவிருக்கும் காலம் நமக்கு உணர்த்திவிடும்" என்றனர் விரிவாக.

இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``அனைத்துச் சமூகப் பள்ளிகளையும் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவர தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். பள்ளிகளின் பெயர்களில் இருந்த சாதி அடையாளங்களை நீக்கிட முன்வந்திருக்கும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அரசின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இது குறித்து வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் பேசினோம். "எங்கள் தலைவர் திருமாவளவனின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆதிதிராவிடர், கள்ளர் சீர்மரபினர் என மாணவர்களைப் பிரிப்பது உளவியல்ரீதியாக மாணவர்களுக்குப் பின்னடைவாக அமைகிறது. ஆதிதிராவிடர்களுக்கான குடியிருப்புகளைப்போலவே பள்ளிகளும் அவர்களை ஊரைவிட்டு விலக்கியே வைக்கின்றன.

பள்ளிகளின் தரம், மைதானம், உபகரணங்கள், ஆய்வகம் இவ்வளவு ஏன், மாணவர்கள் அமரும் மேசையில்கூட பாகுபாடு இருக்கிறது. இதைக் களைவதற்காகவே இந்தக் கோரிக்கையை வைத்தோம்" என்றார்.

`` `இதனால் சிறப்பு கவனம் குறையும், உதவிகள் குறையும்’ என்கிறார்களே?"

``இந்த இணைப்பால் அந்தச் சமூகத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் பாதிக்கப்படாது. அவர்கள்மீதான சாதிரீதியான பார்வை மாறும். பிற சமூகத்து மாணவர்களுடன் அவர்களுக்கு இணக்கமான சூழல் உருவாகும். சிறப்பு கவனம் நிச்சயம் தொடரும்."

``பள்ளிக்கல்வித்துறையிலும் சாதிரீதியான சில சிக்கல்கள் இருக்கின்றனவே?"

``அதை நடைமுறைச் சிக்கலாகத்தான் நாம் அணுக வேண்டும். இந்தச் சிக்கல்களை எதிர்த்து, களத்தில் வி.சி.க போராடியேவருகிறது. மாணவர்களை அணுகுவதில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்."

``சில அரசுப் பள்ளிகளின் பெயர்களில்கூட இன்னமும் சாதி இருக்கிறதே?"

``அந்தச் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வி.சி.க-வின் கோரிக்கை. காமராஜர் காலத்தில் நிலம் கொடுத்தார்கள், பணம் கொடுத்தார்கள் என்பதற்காக, இன்னமும் அத்தகைய பெயர்களை அரசுப் பள்ளிகள் சுமக்கக் கூடாது. கல்வி நிறுவனத்தில் எதற்குச் சாதிப் பெயர்கள் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு."

வன்னி அரசு
வன்னி அரசு

``இந்த இணைப்பு ஆதிதிராவிட நலத்துறை எதற்கு என்ற எண்ணத்துக்கு வழிவகுக்காதா?"

``நலத்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் என்பது வேறு, மாணவர்களின் கல்வி என்பது வேறு. இரண்டையும் முடிச்சுப்போட்டுப் பார்க்கக் கூடாது. ஆதிதிராவிட நலத்துறைக்கு ஆதிதிராவிடர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைப் போடுங்கள் என்றுதான் நாம் கேட்கிறோம்."

``தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறுதான் இந்த இணைப்பு என்ற விமர்சனம் குறித்து..?"

``தேசியக் கல்விக் கொள்கையிலுள்ள வழிமுறை, `ஒரே நாடு, ஒரே மொழி’ என்பதைப் போன்ற உள்நோக்கம்கொண்டது. அதோடு இதைப் பொருத்திப் பார்க்கத் தேவை இல்லை. நாம் பாகுபாட்டை எதிர்க்க வேண்டும் என்ற இடத்திலேயே இதை ஆதரிக்கிறோம்."

``இதனால் பழங்குடியினர் பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் இனி விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறதே?’’

``மலைப்பகுதிகளில் ஆசிரியர்கள் பணிபுரிவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக, கத்தரிமலை என்ற சாலை வசதியற்ற பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கூடுதல் ஊதியமோ, சிறப்புப் படியோ கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. பள்ளிக்கல்வியை சமத்துவமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்ற வகையில் இது மாணவர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்பதே எங்கள் கருத்து."