Published:Updated:

அரசுப் பள்ளியைக் காக்கும் கிராமம்!

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

மழலையர் பள்ளியில் படித்தவர்கள் மீண்டும் எங்கள் ஊர் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியது.

அரசுப் பள்ளிகளைக் காத்திட பரந்த உள்ளத்தோடு நிதியுதவி தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசு `நம்ம ஸ்கூல்’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஊர் மக்கள் சேர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளி ஒன்றைக் காத்துவருகின்றனர். பள்ளிக்கான இடம் தந்தது முதல் மாணவர்களை அழைத்து வர ரூ. 13 லட்சத்தில் வேன் வசதி வரை அனைத்தும் செய்து முன்மாதிரிப் பள்ளியாக மாற்றிப் பாதுகாத்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ளது பூவத்தூர் கிராமம். விவசாயமே பிரதானமாகக் கொண்ட ஊரில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கப் பள்ளி வந்தது. அப்பள்ளியில் படித்த மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்ந்தனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உயர்ந்த பணிகள் செய்வதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

அரசுப் பள்ளியைக் காக்கும் கிராமம்!

நம்மை வளர்த்து ஆளாக்கிய அரசுப் பள்ளியை நாம் வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் ‘பூவை கல்வி வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் பள்ளிக்குத் தேவையான அனைத்தும் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து பூவை கல்வி வளர்ச்சிக் குழுவினரிடம் பேசினேன். ‘‘தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட எங்கள் ஊர்ப்பள்ளி அடுத்து நடுநிலைப்பள்ளியாக உயர்ந்தது. 1992-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்ட போது வகுப்பறைகள் கட்ட இடம் இல்லை. ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து நிதி திரட்டியதுடன், பள்ளிக்கு ஐந்து ஏக்கர் நிலமும் வாங்கிக் கொடுத்தோம். அப்போதுதான் எங்கள் அமைப்பைத் தொடங்கினோம். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினோம். அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை குழு சார்பில் செய்தோம். பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று வந்தனர்.

ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் போன்ற காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதையடுத்து 2016-ல் கல்விக் குழு சார்பில் நிதி திரட்டி ‘லிட்டில் கலாம்’ என்ற பெயரில் ஆங்கிலவழிக்கான மழலையர் பள்ளி தொடங்கினோம். அரசுப் பள்ளி மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வருவதற்காக ரூ. 6 லட்சத்தில் வேன் ஒன்று வாங்கிக் கொடுத்தோம்.

மழலையர் பள்ளியில் படித்தவர்கள் மீண்டும் எங்கள் ஊர் அரசுப் பள்ளியிலேயே சேர்ந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியது. தற்போது பூவத்தூர், பேய்கரம்பன்கோட்டை, பாளமுத்தூர், குடிக்காடு, தெலுங்கன் குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். தொடக்கப்பள்ளியில் 135, உயர்நிலைப்பள்ளியில் 190, மழலையர் பள்ளியில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு வேன் போதவில்லை என்பதால், இப்போது ரூ.13 லட்சத்தில் புதிய வேன் வாங்கிப் பள்ளிக்கு ஒப்படைத்துள்ளோம். அதைத் தொடங்கி வைத்த தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சிவக்குமார், ‘உங்களைப் போல் அனைத்து ஊர் மக்களும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்தால் அரசுப் பள்ளி வளர்ச்சி உச்சத்தைத் தொடும். மாணவர்களின் எதிர்காலம் மாறும்’ என்று எங்கள் செயலைப் பெரிதும் பாராட்டினார்.

அரசுப் பள்ளியைக் காக்கும் கிராமம்!

இரண்டு வேன்களைப் பராமரிப்பதுடன், எட்டு ஆசிரியர்கள், டிரைவர், உதவியாளர், வாட்ச்மேன், தூய்மைப் பணியாளர் உள்ளிட்டோருக்குக் கல்வி வளர்ச்சிக் குழு சார்பில் சம்பளம் கொடுத்துவருகிறோம். பூவை கல்வி வளர்ச்சிக் குழுவில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட எந்தப் பதவியும் கிடையாது. 150 பேரும் உறுப்பினர்களாக மட்டுமே இருக்கி றோம். அதனால் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் பள்ளியின் வளர்ச்சிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் பணி செய்கிறோம். நம்மை வளர்த்த பள்ளியைக் காப்பது நம் கடமை. அதனை நாங்கள் செய்து வருகிறோம். எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் வீட்டின் மீது ஒரு கண் வைத்து கவனிப்பதுபோல், பள்ளியை கவனித்து அதன் வளர்ச்சியின் மீதும் அக்கறையுடன் இருக்கிறோம்’’ என்றனர்.

கல்வியில் சிறந்த பூவத்தூர்!