நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள பள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சப்னா. கூடலூரில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தீவிரமாகப் படித்து தேர்வுகளை எழுதி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், மாணவி சப்னாவின் தாய் ஷாஜிதாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, பராமரித்து வந்துள்ளனர். சப்னாவும் உடனிருந்து தாய் ஷாஜிதாவை கவனித்து வந்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு ஷாஜிதாவின் உடல்நலம் மோசமடைந்திருக்கிறது. சிகிச்சை பலனின்றி ஷாஜிதா பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
விடிந்ததும் பொருளாதார பாடத்தேர்வை எழுதத் தயாராக இருந்த சப்னா, தன் தாயின் இழப்பால் மிகவும் மனவேதனை அடைந்திருக்கிறார். உறவினர்கள் சப்னாவைத் தேற்றி நேற்று தேர்வுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தாயின் உடலை கடைசியாகப் பார்த்துவிட்டு அழுதுகொண்டே தேர்வு மையத்திற்குச் சென்றிருக்கிறார்.

ஆசிரியர்கள் ஆறுதல் கூறி சப்னாவை நல்லமுறையில் தேர்வெழுத ஊக்கப்படுத்தியுள்ளார். தாயின் இழப்பிலும் தளராமல் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வு எழுதிய சப்னாவின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.