தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 747 மாணவர்கள், 13 ஆயிரத்து 868 மாணவியர் உள்பட 24 ஆயிரத்து 732 பேர் தேர்வை எழுதினர். தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
தேர்வெழுதிய 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 97.79 சதவிதம் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் அளவில் திருப்பூர் மாவட்ட அரசுப் பள்ளிகள் 96.45 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாாரிகள் நம்மிடம் கூறுகையில், " ’நான் முதல்வன்’, ’மாணவர்களுக்கான கையேடு’ எனப் பல்வேறு திட்டங்களை முறையாக மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தோம். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள 19 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ப்ளஸ் 2 தேர்வு முடிவில் கடந்த ஆண்டு மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 7வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த ஆண்டில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது" என்றார்.