லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு! - எங்கே செல்கிறது கல்விப் பயணம்?

இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!

“முந்தைய காலத்தில், சராசரியாக ஐந்து வயதிருக்கும்போது குழந்தைகளை தங்களின் வலது கையால் இடது காதைத் தொடச் சொல்லி, 1-ம் வகுப்புக்கான சேர்க்கையை உறுதி செய்தார்கள்.

‘கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே’

கல்வியின் முக்கியத்துவத்தை பன்னெடுங் காலத்துக்கு முன்பே முன்னோர்கள் வலியுறுத்திச் சொல்லிய வரிகள்தான் மேலே இருப்பவை. ஆனால், வணிகம் புரையோடிப் போய் கல்வியின் போக்கு இன்றைக்குத் தடம் மாறியும் தடுமாறியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதில், மாணவர் சேர்க்கை விவகாரம் முக்கியமானது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஆறு வயது நிரம்பினால் மட்டுமே, 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், ‘நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி களிலும் 1-ம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தை களுக்கு ஆறு வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். அதே நேரத்தில் மூன்று வயதில் குழந்தைகளை கிண்டர் கார்டன் வகுப்புகளில் சேர்க்கலாம். ஆனால், அந்தக் குழந்தைக்கு ஆறு வயது நிரம்பினால் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும். இது குறித்து அனைத்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பெரும்பாலான பெற்றோர்கள் வரவேற்கின்றனர். அதேசமயம், நர்சரி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, வேலைக்குச் செல்லும் பெற்றோர்களின் ஆதங்கம், எல்லா மாநிலங்களும் இந்த அறிவிப்பை ஏற்குமா என்பன போன்ற குழப்பங்களும் நீளாமல் இல்லை. மத்திய அரசின் இந்தப் புதிய அறிவிப்பு குறித்து, பல தரப்பட்ட கோணங்களிலும் அலசுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு...

இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!
இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!

புதிய அறிவிப்பை வரவேற்கலாம். ஆனால்...கல்வியாளர் ஆர்.ராஜராஜன்

“முந்தைய காலத்தில், சராசரியாக ஐந்து வயதிருக்கும்போது குழந்தைகளை தங்களின் வலது கையால் இடது காதைத் தொடச் சொல்லி, 1-ம் வகுப்புக்கான சேர்க்கையை உறுதி செய்தார்கள். மாணவர்கள் பாடங்களை கவனிக்க உளவியல்ரீதியாக அந்தப் பருவம் சரியானதாக இருக்கும் என கணித்திருந்தார்கள். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விவரம் புரிய ஆரம்பிக்கும் வயதில் பாடங்களைப் படிக்க ஆரம்பிப்பதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சரியானது. எனவே, ஆறு வயதில் 1-ம் வகுப்பு சேர்க்கை என்பது வரவேற்கக்கூடியதே” என்றவர், உரிய வயதுக்கு முந்தைய பள்ளிச் சேர்க்கையால் ஏற்படும் சிக்கல்களையும் விவரித்தார்...

“சரியான வயதும் பக்குவமும் இல்லாத மூன்று – ஐந்து வயதிலேயே பாடங்களை மனப்பாடம் செய்யப் பழக்கப்படுத்துவதால், உயர்கல்வி வரையிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன் அதிகரித்து, புரிந்து படிக்கும் திறன் குறைகிறது. அதற்காக, நர்சரி வகுப்புகள் தவறானவை என்று சொல்லவில்லை. ஆனால், அவை முறைப்படுத்தப்படாமல் இருப்பது சிக்க லானது. ‘தங்கள் பிள்ளை சீக்கிரமே ஆங்கிலம் பேச வேண்டும்; விரைவாகப் படிப்பை முடித்து வேகமாக முன்னேற வேண்டும்’ என்று ஆசைப்படும் பெற்றோர்கள், பிள்ளை களின் உளவியலையும், அவர்களின் உணர்வுகளையும், மூளை வளர்ச்சியையும் புரிந்துகொள்ள ஆர்வம்காட்டுவதில்லை. இதனால், படிப்பு, கல்விச்சூழல், எதிர்காலம் ஆகிய விஷயங்களில் பக்குவப்படாத வயதிலேயே குழந்தைகளுக்கு அவநம்பிக்கை ஏற்பட வாய்ப்புள்ளது.

‘ஆறு வயதில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதிசெய்யுங்கள்’ என்று கூறியிருக்கும் மத்திய அரசு, நர்சரி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்தோ, அதற்கான வயது நிர்ணயம் குறித்தோ எதுவும் சொல்லாதது முரணானது. நான்கு வயதில் கே.ஜி வகுப்புகளை ஒரு மாணவன் முடித்திருக்கும்பட்சத்தில், ஆறு வயதுக்கு இடைப்பட்ட ஓராண்டு என்ன செய்வான்? அத்தகைய மாணவர்களுக்காகவே ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற பெயரில், ஓராண்டுக்கான புதிய பாடத்திட்டத்துடன் தனியார்ப் பள்ளிகள் கூடுதலாகப் பணம் சம்பாதிப்பார்கள். எனவே, இந்த விஷயத்தில் எழும் குழப்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய அறிவிப்பை எல்லா மாநில அரசுகளும் கடைப்பிடித்தால்தான் அது சரியானதாக இருக்கும். ஆனால், தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களின் நிலைப்பாடும் என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!
இனி, ஆறு வயதில்தான் 1-ம் வகுப்பு!

சராசரி வயதுக்கு முன்பே பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையால், 10 சதவிகிதத்துக்கும் குறை வான மாணவர்கள் ஐந்து வயதுக்கு முன்பே 1-ம் வகுப்பில் நுழைகிறார்கள். இதேபோல கிராமப்புறம் உள்ளிட்ட பின்தங்கிய பகுதி களில் கல்வியின் அவசியமும் விழிப்புணர்வும் குறைவாக இருப்பதால், 5 முதல் 10 சதவிகித மாணவர்கள் சராசரி வயதைத் தாண்டிய பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த இரண்டு செயல்பாடுகளுமே மாணவர் களின் கற்றல் திறனை பாதிக்கும். எனவே, உரிய பருவத்தில் பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்படுவதைப் பெற்றோர்களும், அவர் களைச் சார்ந்தவர்களும் உறுதிசெய்ய வேண்டியது தலையாய கடமை.”

குழந்தைகளுக்குச் செய்கிற கொடுமை! - கல்வியாளர் ராஜம்மாள்

``வெளிநாடுகளில் கே.ஜி வகுப்புகளில் விளையாட மட்டுமே செய்கிறார்கள் குழந்தைகள். ஆனால், நம் நாட்டில் அப்படியே தலைகீழாகத்தான் நடக்கிறது. மூன்று அல்லது மூன்றரை வயதிலேயே குழந்தைகளை எழுத வைக்கிற பள்ளிக்கூடங்கள்தான் இங்கே அதிகம். இது குழந்தைகளுக்குச் செய்கிற கொடுமை. சில பள்ளிக்கூடங்களில் மட்டுமே கே.ஜி.யில் எழுத வைப்பதில்லை. ஆக, கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் விளையாட மட்டுமே செய்ய வேண்டும் என்பதை இங்கே உறுதிப்படுத்தவேண்டும். இந்நிலை மாற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு நன்கு புத்தி தெரிந்த ஆறு வயதில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதுதான் சரி. இந்த வயதில்தான் பிள்ளைகளால் தெளிவாகப் பேச முடியும். ஆறு வயதில், முதல் வகுப்பில் சேர்ந்தால், ப்ளஸ் டூ படிக்கையில் 18 வயதாயிருக்கும். இந்த வயதில் மாணவர்களுக்குப் படிப்பு விஷயத்தில் இன்னும்கூட முதிர்ச்சியிருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதில் மைனஸ் என்று பார்த்தால், கணவன், மனைவி இருவரும் வேலைக் குப் போகும் குடும்பங்களில், குழந்தையை கே.ஜி வகுப்பில் சேர்ப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கும். இதிலும், தனிக்குடித்தனமாக இருப் பவர்கள் பாதி நாள் கே.ஜி, பாதி நாள் டே கேர் என்று பிள்ளைகள் இருக்கை யில் பத்திரமாக உணர்வார்கள். மற்றபடி, ‘17 வயசுல ப்ளஸ் டூ முடிக்க வேண்டியது. ஒரு வருடம் போச்சே’ என்று பல பெற்றோர்கள் நினைப் பார்கள். ஒரு வருடம் தாமதமானால் பிள்ளைக்கு நல்லதுதான் என்பதுதான் என் கருத்து.’’

அவள் விகடன் ட்விட்டரில் வாசகர்களின் கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு
கருத்துக்கணிப்பு

பள்ளியில் சேர்க்க எது சரியான வயது? - உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்

‘`சில பெற்றோர்கள் குழந்தைகளை இரண்டரை வயதிலேயே ப்ரீ கே.ஜி சேர்த்துவிடுகிறார்கள் அல்லது மூன்று - மூன்றரை வயதில் எல்.கே.ஜி சேர்த்து விடுகிறார்கள். இதில், பேச்சு சீக்கிரமாக வருதல், சேர்ந்து விளையாடுதல், சக குழந்தைக்கு விட்டுக்கொடுத்தல் என குழந்தைகளுக்கு பல சாதகங்கள் இருக்கின்றன. பெற்றோர் தரப்பில், குழந்தையின் அறிவை வளர்க்கும், பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்கிறோம் என்று நிம்மதியாக உணர்வார்கள். பாதகங்கள் என்று பார்த்தால், பெற்றோருடன் இருக்க முடியவில்லை என்று குழந்தை ஏங்கிப் போகலாம்; குழந்தையுடன் போதுமான நேரம் செலவழிக்க முடியவில்லையே என்று பெற்றோருக்கு குற்றவுணர்ச்சி ஏற்படும். அதை ஈடுகட்ட குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து மிகுந்த செல்லம் கொடுப்பார்கள்.

இதேபோன்ற சாதக, பாதகங்கள் ஆறு வயதில் பள்ளியில் சேர்க்கும் போதும் நிகழும். குழந்தைகள் தெளிவாக கல்வி கற்பார்கள். அதே நேரம், ஆறு வயதுவரை செல்லமாக வீட்டில் வளர்ந்த குழந்தைகள் அதையே பள்ளிக் கூடத்திலும் எதிர்பார்க்கலாம். மூன்று வயது முதல் ஐந்து வயது வரை மாணவர்களுக்குக் கிடைக்கும் அடிப்படை கல்வியே இனி ஆறு வயதிலிருந்துதான் கிடைக்கும்; அதனுடன் 5-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதும் சேர்கையில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அளவிலான ஃபவுண்டேஷன் கிடைக் குமா என்பது சந்தேகமே... இதனால், 6-ம் வகுப்பில் அல்ஜீப்ரா போன்ற கடினமான பாடங்களைப் பயில மாணவர்கள் கஷ்டப்படுவார்கள்.’’

 ஆர்.ராஜராஜன்,  ராஜம்மாள்,  சரஸ் பாஸ்கர்
ஆர்.ராஜராஜன், ராஜம்மாள், சரஸ் பாஸ்கர்

ப்ளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல்... தேவைதானா? - கல்வியாளர் கே.ஆர்.மாலதி

‘`ஒன்றரை வயது முதல் மூன்று வயது வரை இருக்கும் குழந்தைகள் செல்வது தான் ப்ளே ஸ்கூல். குழந்தைகள் விளையாடவும், தன் பெற்றோர்களைத் தாண்டி பிறருடன் பழகவும், சமூக திறனை வளர்த்துக்கொள்ளவும்தான் ப்ளே ஸ்கூலுக்கு செல்வார்கள். ஒரு குழந்தைக்கு ஜீரோ முதல் மூன்று வயது வரையிலான பருவம் மிக மிக முக்கியமானது. மூளை வளர்ச்சி அதிக அளவில் இருக்கும் இந்த நேரத்தில் அவர்களை ப்ளே ஸ்கூலில் சேர்க்கும்போது சமூக திறனோடு சேர்ந்து கைகள் மற்றும் தசைகளுக்கு வேலை கொடுக்கும் ‘ஃபைன் மோட்டார் திறன்'களும் (Fine motor skills) மற்றும் உடல் தசைகளுக்கான `கிராஸ் மோட்டார் திறன்'களும் (Gross motor skills) வளரும்.

மூன்று வயது முதல் ஆறு வயது வரை செல்வது ப்ரீ ஸ்கூல். அவர் களாகவே ஸ்கூலுக்குள் நுழைதல், லஞ்ச் சாப்பிடுவது, கழிவறை செல்வது என தங்களுடைய தேவைகளை தாங்களே செய்துகொள்ளும் அல்லது வெளிப் படுத்த தெரிந்துகொள்ளும் இடம்தான் ப்ரீ ஸ்கூல். இந்த வயதில்தான் குழந்தைகளுக்கு ‘Foundational Literacy’ (பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுத முயற்சி செய்து கிறுக்குதல், படிக்க முயற்சி செய்தல்) மற்றும் ‘Foundational Numeracy’ (ஏன், எதற்கு என்று கேள்விகளை, சந்தேகங்களை எழுப்பு தல்) ஆகியவற்றை ஆரம்பிக்க வேண்டும். தவிர, குழந்தைகள் இந்த வயதில் நிறைய கதைகள் சொல்வது அல்லது கேட்பது, படம் பார்த்து பெயர் சொல்வது, ஓடுவது, தாவுவது, குதிப்பது, நொண்டுவது, பந்தை எறிவது, பந்தைப் பிடிப்பது ஆகியவற்றைக் கற்றுக் கொள்வது அவசியம்’’ என்கிறார்...

``பொருளாதார வசதி இல்லாத பெற்றோர் களுக்கு ப்ரீ ஸ்கூல் மற்றும் ப்ளே ஸ்கூல் என்பது அழுத்தத்தை தரதா என்ற கேள்வி எழலாம். அதற்காகத்தான் அரசு பால்வாடி மற்றும் அங்கன்வாடி நடத்துகிறது . இப்போது குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது சிரமமாக மாறி வருகிறது. இந்த இடத்தில் ப்ரீ ஸ்கூல் மற்றும் ப்ளே ஸ்கூல் போன்றவை பெற்றோர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. மேலும் முன்பெல்லாம் விளையாட அக்கம் பக்கத்தில் குழந்தைகளும், சொல்லித்தர வீட்டில் தாத்தா, பாட்டிகளும் இருந்தார்கள். இப்போது அப்படி இல்லாத சூழலில், ப்ரீ ஸ்கூல் மற்றும் ப்ளே ஸ்கூல்களின் தேவை குழந்தைகளுkகு அவசியமாகிறது.’’

 கே.ஆர்.மாலதி , ஆர்.வெங்கடேஷ்வரன்
கே.ஆர்.மாலதி , ஆர்.வெங்கடேஷ்வரன்

வைரல் வீடியோக்களும் மழலை மேதைகளும்..! - குழந்தைகள் மனநல மருத்துவர் ஆர்.வெங்கடேஷ்வரன்

‘`குழந்தை சீக்கிரமே எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றரை இரண்டு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது தவறான செயல். நான்கு வயதுக்கு மேல்தான் எழுதுவதற்கே கற்றுக்கொடுக்க வேண்டும். ப்ரீ ஸ்கூல், ப்ளே ஸ்கூல் போன்றவற்றில் குழந்தை களைச் சேர்ப்பது தவறில்லை. ஆனால், அங்கு குழந்தைகள் விளையாட வேண்டும். கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தும் விஷயங்கள் (Activity based Learnings) மட்டும்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். மாறாக பாடங்களையோ, எழுதப் படிக்கவோ கற்றுக்கொடுக்கக் கூடாது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு எவ்வளவு தாமதிக்கிறோமோ அவ்வளவு நல்லது. குறிப்பிட்ட வயதுக்கு முன்பே பள்ளியில் சேர்த்து படிக்க, எழுதச் சொல்லும்போது அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படலாம்.

சில குழந்தைகள் மிகச்சிறிய வயதிலேயே அசாத்திய திறமைகளுடன் இருப்பதாக செய்திகளிலும், நேரிலும் அறிகிறோம். குழந்தைகளில் 5 சதவிகிதம் பேர் மிக எளிதில் கற்றுக்கொள்வார்கள். 80 சதவிகிதம் குழந் தைகள் சராசரி வேகத்தில் கற்றுக்கொள் வார்கள். 15 சதவிகிதம் குழந்தைகளுக்கு வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள், குறைபாடுகள் இருக்கும். பொதுவாக, குழந்தைகளை எப்படி வடிவமைக்கிறோமோ... வாய்ப்புகளைக் கொடுக்கிறோமோ அந்த வகையில் அவர்களின் திறன் மேம்படும்.

ஒரு வகுப்பில் 30 குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும். அதில் ஒரு குழந்தை நன்றாக நடனமாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை அக்குழந்தையின் அம்மா வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, அது வைரல் ஆகியிருக்கும். இந்த அளவோடு இருந்தால் குழந்தைக்கும் அழுத்தம் இல்லை, பெற்றோருக்கும் அழுத்தம் இல்லை. மாறாக, அதே போல மீண்டும் மீண்டும் குழந்தையை வைரலாக்க வேண்டும் என்று வற்புறுத்தி குழந் தைக்குப் பிடிக்காத விஷயத்தில் ஈடு படுத்தினால் குழந்தைக்கு அழுத்தம் ஏற்படும்.

மேலும், இந்தக் குழந்தையைப் பார்த்து மற்றொரு பெற்றோர் தன் குழந்தையும் அதே போன்று வைரலாக வேண்டும் என்று தன் குழந்தைக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் நடனமாட வற்புறுத்தினால் அது குழந்தைக்குத் தேவையில்லாத அழுத்தத்தைக் கொடுக்கும். குழந்தைக்குப் பிடிக்காத ஒரு செயலைக் கட்டாயப்படுத்தி செய்யச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு கடுமையான மன அழுத்தம் (Acute Stress) ஏற்படலாம். அதுவே தொடர் கதையானால் நாள்பட்ட மன அழுத்தம் (Chronic stress) ஏற்படலாம். இது மனச்சிதைவு, மனப்பதற்றம் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்னைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

இதேபோல், பாட்டு, நடனம், விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளில் ஒரு குழந்தைக்கு விருப்பமில்லை என்றாலும் கட்டாயப் படுத்தக்கூடாது. ஒரு குழந்தைக்கு கணிதம் நன்றாக வருகிறது என்றால் அது சார்ந்த விஷயங்களில் திறனை மேம்படுத்த பெற்றோர் உதவலாம். மாறாக, கணக்குப் பாடத்தில் அதிக நாட்டம் உள்ள குழந்தையை, பாட்டு வகுப்பில் சேர்த்தால் அந்தக் குழந்தையால் கணிதப் பாடத்தையும் சரியாகப் படிக்க முடியாமல் போகும், பாட்டு வகுப்பிலும் கவனம் செலுத்த முடியாது. குழந்தைகளின் திறன் அறிந்து பட்டைத் தீட்டினால் வைரமாக ஜொலிப்பார்கள். இந்த விஷயத்தில் சிம்பிளான ஒரு விதிமுறையை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைச் செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கக் கூடாது. அவ்வளவுதான்.’’

 லாவண்யா
லாவண்யா

பெற்றோரின் நிலையைப் பொறுத்தது! - லாவண்யா, தனியார் நிறுவன ஊழியர்

‘`என்னுடைய மகளை ஆறு வயதில் தான் பள்ளியில் சேர்க்க வேண்டு மென்று தீர்மானித்திருக்கிறேன். அந்த வயதில்தான் சக குழந்தைக்கு சின்ன கஷ்டமென்றால் தானாக முன் வந்து உதவத் தெரியும்; இதனால், சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு தலைமைப்பண்பு வளர ஆரம்பிக்கும்; சமுதாயத்துக்கு ஏற்ற குழந்தையாகவும் வளர்வாள் என்பது என் நம்பிக்கை. ஆனால், இது எல்லா பெற்றோர்களுக்கும் வாய்க்காது. இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்து, அதிலும் தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கிற பெற்றோர்கள் என்றால், அவர்கள் சீக்கிரமே குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதே நல்லது.’’

 மதுமிதா கோமதிநாயகம்
மதுமிதா கோமதிநாயகம்

கல்விக்கு வயதில்லை..! திருநங்கை மதுமிதா கோமதிநாயகம்

கல்விக்கு வயது தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இந்தியாவின் முதல் திருநங்கை மனிதவள மேம்பாட்டாளர் மதுமிதா கோமதிநாயகம். கல்வி என்பது ஒருவரது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். மதுமிதாவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்தது மட்டு மன்றி அவர் சார்ந்த சமூகத்தை உயர்த்தவும் அந்தக் கல்வி காரணமாகியிருக்கிறது. 43 வயதில் 17 முது கலை, 2 இளங்கலை, சில சர்வதேச பட்டயப்படிப்பு களும், சான்றிதழ் படிப்புகளையும் முடித்து, கல்விக்கு வயதோ, பாலினமோ தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். கல்வியைத் தொடங்க குறைந்த பட்ச வயது எப்படி தேவையில்லையோ, அதிகபட்ச வயதும் அவசியமில்லை என்பதற்கு மதுமிதா மிகச் சிறந்த உதாரணம்.