திருச்சியிலுள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பாடநூல் கழகத் தலைவர் லியோனி ஆகியோர் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ``திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறக்கலாமா அல்லது ஒருசில நாள்கள் கழித்து திறக்கலாமா என தமிழக முதல்வரிடம் கேட்டிருந்தோம். முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனும் ஆன்லைன் மூலமாக ஆலோசனை கேட்டோம்.

பெற்றோர்களோ, ஆசிரியர்களோ பெரிதாகப் பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போடச் சொல்லவில்லை. அதேவேளையில் மாணவர்கள் இந்தச் சமயத்தில் வகுப்பறையில் அமர்வதே மிக சிரமமாக இருக்கும் என்று சிலர் கருத்துகளைச் சொன்னார்கள். கோடை வெயிலினுடைய தாக்கம் ஜுன் 5-ம் தேதிக்குப் பிறகு படிப்படியாகக் குறையும் எனச் சொல்லியிருக்கிறார்கள். அதையடுத்து வருகிற ஜூன் 7-ம் தேதி 1-12-ம் வகுப்புக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “பள்ளிகள் திறக்கப்படுவது சில நாள்கள் தாமதமானாலும் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தனியார் பள்ளிப் பேருந்துகளின் தரம் எப்படியிருக்கிறது... அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 11 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கின்றனர். இந்த மே மாதத்தில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். பள்ளி வளாகங்களைச் சுத்தப்படுத்துவது, பள்ளிக் கட்டடங்களை பழுது பார்ப்பது எனப் பள்ளிகள் திறக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.