திருவாரூர் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், அப்பள்ளி மாணவர்கள் கவிதை ஒன்றை எழுதி நினைவுப் பரிசாக வழங்கியதுடன் பெற்றெடுக்காத தந்தை எனப் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள ஆலாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் கலைச் செல்வன். கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் இக்கல்வி ஆண்டுடன் பணி நிறைவு பெறுகிறார்.
இந்நிலையில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளியின் ஆண்டு விழாவில் தலைமையாசிரியர் பணி நிறைவு பாராட்டு விழாவையும் சேர்த்து ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடினர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மாரிமுத்து, கோட்டூர் சேர்மன் மணிமேகலை முருகேசன், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் எட்டாம் வகுப்பு மாணவிகள், ”பின்னொரு நாளில் உங்களின் இல்லத்திற்கு, அரசின் உயரதிகாரிகளாய் உருமாறி வருவோம்! பேரன்பின் பூங்கொத்துகளை உம் கையில் தருவோம்!’’ என்ற கவிதையை தாங்களே எழுதி வாசித்ததுடன் அதை கலைச்செல்வனுக்கு நினைவுப் பரிசாக வழங்கினர். கவிதையை கேட்ட எம்.எல்.ஏ மாரிமுத்து மாணவிகளைப் பாராட்டினார்.

மாணவிகள் வாசித்த கவிதையில் நெகிழ்ந்த கலைச்செல்வனின் கண்களில் ஆனந்த கண்ணீர் கசிந்தன. மாணவர்கள் தங்கள் தலைமையாசிருக்கு எழுதிய கவிதை கல்வி வட்டாரத்தில் பலரது பாராட்டை பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.
மாரிமுத்து எம்.எல்.ஏ பேசுகையில், ``மாணவிகள் வாசித்த கவிதை சிறப்பாக இருந்தது. குறிப்பாக அதன் இறுதி வரிகள் என்னை ஈர்த்ததுடன், மாணவர்கள் மீது பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்களில் இருந்து வந்த மாணவிகள் பின்னாளில் அதிகாரிகளாய் வருவோம் என்று சொல்லாமல் உயரதிகாரிகளாய் அரசாங்க வாகனங்களில் வந்து, வயதான காலத்தில் வீட்டிலிருக்கும் தலைமையாசிரியரை சந்தித்து வணங்கி, மகிழ்வையும் ஆனந்தத்தையும் தருவோம் என கவிதை மூலம் தெரிவித்துள்ளனர்.

தலைமையாசிரியர் கலைச்செல்வன், குருவாக மட்டுமன்றி தந்தை ஸ்தானத்திலிருந்து மாணவர்களை வழி நடத்தியிருக்கிறார் என்பது அவர்களின் வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. அவர்கள் அரசின் மிகப் பெரிய பொறுப்புகளை அலங்கரிக்க வேண்டும்’’ என வாழ்த்தினார்.
மாணவர்களிடம் பேசினோம். ```எங்கள் தலைமையாசிரியரின் ஒவ்வொரு சொல்லும் எங்களை செதுக்கியிருக்கிறது. வறுமையான குடும்பத்திலிருந்து வரும் எங்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தியவர் அவர். எங்கள் தேவைகளைப் புரிந்து, அறிந்து, பல்வேறு உதவிகளைச் சத்தமில்லாம் செய்து தருவார். நாங்கள் சிரிப்பதை பார்த்து மகிழ்வார்.
எங்களைப் பெற்றெடுக்காத தந்தை எங்கள் தலைமையாசிரியர். நாங்கள் வாசித்தது கவிதை மட்டுமல்ல. எங்கள் எதிர்கால கனவை உறுதிமொழியாக்கி அவருக்கு காணிக்கையாக்கினோம்’’ என்றனர்.

மாணவர்களின் வார்த்தைகளும், உணர்வுகளும், நெகிழ்ச்சிகளும் அவர்களுடனான தலைமையாசிரியரின் பந்தத்தை புரிந்துகொள்ளச் செய்தன.
``பாடம் சொல்லிக்கொடுத்த மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தால் அவர்களது பெற்றோர்களுக்கு இணையாக சில ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைவதுண்டு. என் பிள்ளைகள் வெளிப்படுத்தியிருக்கும் லட்சியக் கனவை நிச்சயம் வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்களது கவிதை விதைத்திருக்கிறது. இதுவே எனக்கான பாக்கியம்’’ என்றார் தலைமையாசிரியர் கலைச்செல்வன்.