Published:Updated:

பள்ளி மாணவர்களின் மனநலனைக் காக்கத் தவறுகிறதா பள்ளிக்கல்வித்துறை?! - விரிவான அலசல்!

பள்ளிக்கல்வித்துறை

``பள்ளிக்கல்வித்துறை சில வரைமுறைகளைக் கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவில் குழந்தைகள் மனநல நிபுணர், குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள்கொண்ட குழுவை வைத்துதான் மாணவர்களிடம் விசாரணையே நடத்த வேண்டும்.” - உமா மகேஸ்வரி

Published:Updated:

பள்ளி மாணவர்களின் மனநலனைக் காக்கத் தவறுகிறதா பள்ளிக்கல்வித்துறை?! - விரிவான அலசல்!

``பள்ளிக்கல்வித்துறை சில வரைமுறைகளைக் கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவில் குழந்தைகள் மனநல நிபுணர், குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள்கொண்ட குழுவை வைத்துதான் மாணவர்களிடம் விசாரணையே நடத்த வேண்டும்.” - உமா மகேஸ்வரி

பள்ளிக்கல்வித்துறை

இன்ஸ்டாகிராமில், பல பாடல்களுக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் ரீல்ஸ் செய்து பிரபலமானவர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அவர். நான்காம் வகுப்பு படித்துவந்த அந்தச் சிறுமி, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 70 ரீல்ஸ்களை வெளியிட்டிருக்கிறார். அக்கம் பக்கத்தில் தன்னுடைய ரீல்ஸ்களுக்குக் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டுவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அந்த மாணவி பிரதிக்‌ஷாவைக் கண்டித்த பெற்றோர் வீட்டுக்குச் சென்று படிக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றிருக்கின்றனர்.

திரும்பி வந்து பார்த்தபோது, தாழிட்ட கதவுகளுக்குப் பின்னால், ஜன்னல் கம்பியில் அம்மாவின் சேலையைக்கொண்டு தூக்கிட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பலியானார். "என்ன காப்பத்தும்மான்னு என் பிள்ளை முனகின சத்தம் இன்னும் என் காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கே" என்று ஆற்ற முடியாத வேதனையில் புலம்பிவருகின்றார் அந்தச் சிறுமியின் தாய்.

பள்ளி மாணவர்களின் மனநலனைக் காக்கத் தவறுகிறதா பள்ளிக்கல்வித்துறை?! - விரிவான அலசல்!
Premkumar SK

இதற்கு அடுத்த நாளே (மார்ச் 29) திருவள்ளூர் ஆரணி பஸ் நிறுத்தம் அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவரும் தமிழ்செல்வனை, வேறு ஒரு மாணவர் தொடர்ந்து உருவகேலி செய்தும் அடிக்கடி வம்பிழுத்தும் வந்திருக்கிறார். உணவு இடைவேளையின்போது வகுப்பறைக்குள்ளேயே இருவரும் சண்டையிட்டிருக்கின்றனர். இதில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

சில மாதங்களுக்கு முன்பு வகுப்பறையிலுள்ள மேசைகளை உடைத்த மாணவர்களின் வீடியோ இணையத்தில் வைரலானதும் நினைவிருக்கலாம். தமிழ்நாடு முழுவதற்குமான சிக்கல் இது.

மாணவர்களிடையே அதிகரிக்கும் இந்த வன்முறைப் போக்குக்கு காரணம் என்ன... இது குறித்து தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்க செயலாளர் வீர பெருமாளிடம் பேசினோம். "பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு ஆன்லைன் வகுப்பு மூலமாக மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. இணையத்தில் அவர்கள் விளையாடும் விளையாட்டுகளும், பார்க்கும் ரீல்ஸ்களும் அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. அதுவரை நல்ல மாணவராக இருந்த பலரே கோபக்காரர்களாக மாறியிருப்பதைப் பார்க்க முடிகிறது. பிள்ளைகளிடமிருந்து செல்போனைப் பிடுங்குவதே பல இடங்களில் பிரச்னையாக இருக்கிறது. என் வீட்டிலேயே இந்த பிரச்னை இருக்கிறது. செல்போனைப் பிடுங்கினால் கதவை வேகமாக அடைப்பது, பொருட்களை கீழே போடுவது என்று குழந்தைகள் தங்கள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

வீர பெருமாள்
வீர பெருமாள்
பெற்றோர் மாணவர் நலச் சங்கம்

செல்போன் பயன்பாட்டை, கேம் விளையாடுவதைக் கண்டித்ததால் மாணவர் தற்கொலை என்ற செய்தியையெல்லாம் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் பார்த்துவருகிறோம். இதனால் செல்போனைப் பிடுங்க வேண்டும் என்ற எண்ணமே பெற்றோரிடம் போய்விட்டது. ஆசிரியர்கள் வேறு எங்கோ இருக்கும் கோபத்தை மாணவர்கள்மீது காட்டுகின்றனர். மாணவர்கள் வீட்டில் பெற்றோர்கள் மீதான கோபத்தைப் பள்ளியில் காட்டுகிறார்கள். மனநல ஆலோசனை என்பது ஆசிரியர், மாணவர், பெற்றோர் என மூன்று தரப்பினருக்கும் தேவையாக இருக்கிறது.

மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கம் ஊடுருவிவிட்டதாக புலம்புகிறார்கள். ஒரு மாணவன் ஏன் போதைப்பொருள் பயன்படுத்துகிறான்... மன உளைச்சலைத் தீர்க்கத்தான். அந்த மன உளைச்சலை யார் சரிசெய்வது. சின்ன கோபத்தை, சின்ன தோல்வியைக்கூட தாங்க முடியாத மன நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களால் சமூகமே சீரழியும் அபாயம்தான் நம் கண்முன்னே இருக்கிறது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் தேவை. இதைப் பலமுறை வலியுறுத்தியும் அரசு ஏன் மெத்தனமாக இருக்கிறது என்பதே புரியவில்லை" என்றார்.

"தமிழ்நாடு முழுவதுமே பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள்." என ஆதங்கத்துடன் தொடங்கினார் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரி, "மாணவர்களுக்கு வீட்டிலும், பள்ளியிலும் தங்களைக் குற்றம் கூறியபடியே இருப்பதால், மன நெருக்கடி அதிகரித்திருக்கிறது. வீதிக்கு வீதி டாஸ்மாக்கை அரசே வைத்திருக்கிறது. அதைக் கடந்து செல்லும் மாணவர்களுக்கு குடிக்கத்தானே தோணும். குடி ஒரு மாணவனை எப்படியெல்லாம் மாற்றும். அதனால்தான் பள்ளிக்கு ஒரு மனநல ஆலோசகர் நிச்சயம் தேவை என்கிறோம். அதே போன்று, ஒரு மாணவர் தவறு செய்துவிட்டால் அவரை நேரடியாக போலீஸிடம் ஒப்படைத்து விடுவார்கள். போலீஸ் அவனை ஒரு குற்றவாளியாகவே நடத்தும் என்பது காவல் நிலையம் சென்றவர்களுக்குப் புரியும்.

உமா மகேஷ்வரி
உமா மகேஷ்வரி
ஆசிரியர் சங்கம்

பள்ளிக்கல்வித்துறை சில வரைமுறைகளைக் கொண்டுவர வேண்டும். மாவட்ட அளவிலுள்ள குழந்தைகள் மனநல நிபுணர், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள் கொண்ட குழுவை வைத்துதான் மாணவர்களிடம் விசாரணையே நடத்த வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் தொடர் குற்றவாளிகளாக மாறுவதற்கான வாய்ப்பை அரசே ஏற்படுத்திக் கொடுப்பதைப் போல் ஆகிவிடும்" என்றார்.  

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வாட்ஸ்அப் மூலமாக இது குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர், "வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில் உளவியல்ரீதியாக பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்திருக்கின்றனர். அதை ஈடுசெய்யும் வகையிலும் அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கிடவும், மகிழ்ச்சியாகக் கற்றலில் ஈடுபட ஏதுவாகவும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் 50 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் உடல்நலனும் மனநலனும் பேண, பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது. போதைப்பழக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்துப் பள்ளி மாணவர்களும் எடுத்துக்கொண்டனர். மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்குவதற்காக  மனநல ஆலோசகர்கள் பள்ளிகளுக்குச் சென்று மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார். 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மனநல ஆலோசகர்கள் இந்தப் பணியாற்றுகிறார்கள்.14,417 உதவி மையத்துக்கு வரும் அழைப்புகளின் துணைகொண்டு பிரச்னைகளோடு இருக்கக்கூடிய மாணவர்கள் கண்டறியப்பட்டு மனநல ஆலோசகர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்

தவறிழைக்கும் குழந்தைகளுக்கும் போலீஸாருக்குமிடையில் ஓர் அமைப்பு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளிடம் பேசியபோது, "ஒரு மாணவர் குறித்து காவல்துறைக்கு புகார் வந்தால், காவல்துறை அதிகாரி அந்த மாவட்டத்திலுள்ள நன்னடத்தை அலுவலரைத் (PROFESSIONARY OFFICER) தொடர்புகொள்வார். அவர் சம்பந்தப்பட்ட மாணவர் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பார். மேலும், தவறிழைக்கும் மாணவரை 24 மணி நேரத்துக்குள் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடைமுறையும் இருக்கிறது" என்கின்றனர்.

வில்லவன் ராமதாஸ்
வில்லவன் ராமதாஸ்
பள்ளி மனநல ஆலோசகர்

"ஆனால், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதே இல்லை. காவல்துறையைக்கொண்டே குழந்தைகள் விசாரிக்கப்படுகிறார்கள்" என்கிறார் பள்ளி மனநல ஆலோசகர் வில்லவன் ராமதாஸ்.

தொடர்ந்து பேசிய அவர், "50 லட்ச ரூபாய் செலவில் அரசு எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு நிச்சயம் பயன் தராது. இது எப்படிச் செயல்படுத்தப்படுமென்றால் பள்ளி மாணவர்களை மொத்தமாகக் கூப்பிட்டு அவர்களிடம் உரையாற்றிவிட்டு, இத்தனை பேருக்கு கவுன்சிலிங் கொடுத்தோம் எனக் கணக்கு காட்டுவார்கள். ஒரு குழந்தை ஒருவரை நம்ப வேண்டும் என்றாலே அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். அப்படியென்றால் ஒரு மனநல ஆலோசகர் அந்தப் பள்ளியில் நிரந்தரமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பள்ளிகளுக்கு ஒரு மன நல ஆலோசகராவது தேவைப்படுவார். மாணவர்களிடையே பல போதைப்பொருள்களின் பயன்பாடு இருக்கிறது. உதாரணத்துக்கு ஒருவித போதைப்பொருளை எடுத்துக்கொள்வோம். அதைப் பயன்படுத்தும் பழக்கம் ஆறாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கிறதா... எட்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கிறதா... என்று நமக்குத் தெரியாது. ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகுப்பறையும் வித்தியாசமானது. எனவே, பிரச்னையென்றால் தேடிப்போய் கவுன்சிலிங் கொடுப்பது என்பது நிச்சயம் நல்ல தீர்வாக அமையாது.

பள்ளிக் கல்வி இயக்கம்
பள்ளிக் கல்வி இயக்கம்

சென்னையில் பெண் குழந்தைகளும் அதைப் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. அதைத் தடைசெய்வதில் பள்ளிகளின் பங்கு பூஜ்ஜியமாக இருக்கிறது என்பதே நம் முகத்தில் அறையும் உண்மை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து சாதாரண போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர் அந்தப் போதை போதாததால், வேறு வீரியம் மிக்க போதைப் பொருளைப் பயன்படுத்துகிறார். எந்தப் பள்ளியில் எந்தப் போதைப்பொருள் கிடைக்கிறது என்ற தகவல் நம்மிடம் கிடையாது. நான் பணிபுரிந்த பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்தும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர் ஒருவர் ஆசிரியரிடம் காட்டிக்கொடுக்கிறார். அந்த மாணவரை சப்ளையரான 12-ம் வகுப்பு மாணவர், 'நீ ஏன் காட்டிக் கொடுத்தாய்' என கிரவுண்டில் வைத்து அடிக்கிறார். இதற்கு ஆசிரியர் மட்டுமே பொறுப்பு என்று நினைத்தால் நாம் தோற்றுப் போய்விடுவோம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும். பெற்றோர் வாரம் ஒரு முறையாவது ஆசிரியரைச் சந்திக்க வேண்டும். ஒரு வார்டு கவுன்சிலர் தொடங்கி, சமூக ஆர்வலர் வரை அனைவருமாக சேர்ந்துதான் ஒரு மாணவரை நல்ல மாணவராக உருவாக்க முடியும். இது ஒரு கூட்டு சமூக பொறுப்பு " என்றார் விரிவாக.

``நாங்கள் கல்விக்காக எத்தனை கோடி ஒதுக்கியிருக்கிறோம் தெரியுமா என மார்தட்டுவது பெருமை இல்லை. மாணவர்களின் மனக்குமுறலைக் காது கொடுத்து கேட்டு அதைச் சரிசெய்வதில்தான் பெருமை இருக்கிறது” - இதை ஆட்சியாளர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி!