Published:Updated:

அரசுப் பள்ளிகளில் அஸ்ட்ரானமி ஆய்வகங்கள்: பள்ளி இடைநிற்றலைத் தடுத்த இந்தியாவின் இளம் அஸ்ட்ரானமர்!

Astronomy Labs in Government Schools

என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். அறிவியல் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக `Astro Scape' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, கிராமத்துப் பள்ளிகளில் அஸ்ட்ரானமி லேப்களை உருவாக்கிவருகிறேன்.

Published:Updated:

அரசுப் பள்ளிகளில் அஸ்ட்ரானமி ஆய்வகங்கள்: பள்ளி இடைநிற்றலைத் தடுத்த இந்தியாவின் இளம் அஸ்ட்ரானமர்!

என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி நான். அறிவியல் எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக `Astro Scape' எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை உருவாக்கி, கிராமத்துப் பள்ளிகளில் அஸ்ட்ரானமி லேப்களை உருவாக்கிவருகிறேன்.

Astronomy Labs in Government Schools
”எல்லாரையும் போலவே, குழந்தையாக இருக்கும்போது மொட்டை மாடியில், நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசித்தபடி உறங்கச் செல்வேன். அப்போது விண்வெளி பற்றியும் அதைத் தாண்டி இருக்கும் அதிசயங்களைப் பற்றியும் கற்பனை செய்யும்போதே உடலெல்லாம் சிலிர்த்துவிடும்.விண்வெளி பற்றியும், விண்பொருள்கள் பற்றியும் எனக்குப் பல கேள்விகள் இருந்தாலும் அதை யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை"

என்கிறார் இந்தியாவின் இளம் அஸ்ட்ரானமர் ஆர்யன் மிஷ்ரா. தில்லியைச் சேர்ந்த ஆர்யன், தன் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. இவரின் தந்தை செய்தித்தாள் விற்பனையாளர். 

ஆர்யன் மிஷ்ரா
ஆர்யன் மிஷ்ரா

11 வயதில் முதல் முறையாக டெலஸ்கோப்பில் விண்வெளியைப் பார்த்து அதிசயித்த ஆர்யன், 14 வயதில் தன் நண்பரோடு சேர்ந்து செவ்வாய், வியாழன் (Mars, Jupiter) கோள்களுக்கு இடையே ஒரு சிறு கோளை (அஸ்ட்ராய்டு) கண்டுபிடித்தார். ”நான் பள்ளியில் படித்தபோது என் வீட்டில் கம்ப்யூட்டர்கூடக் கிடையாது. அதனால், அருகில் இருக்கும் சைபர் கஃபேவுக்குச் சென்று, அஸ்ட்ரானமி குறித்துத் தெரிந்துகொண்டேன். அதன் மூலம் அறிவியலில் எனக்கு ஆர்வம் உண்டாகியது. 

12வது முடித்ததும், அஷோகா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி இயற்பியல் சேர்ந்தேன். அந்தச் சமயத்தில் அரசுப் பள்ளிகளில் அஸ்ட்ரானமி லேப் உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் அதில் இருக்கும் நன்மைகள், அதனால் ஏற்படப் போகும் தாக்கம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இந்த வேலையில் கிடைக்கும் பணத்தை வைத்து என் கல்லூரிப் படிப்பிற்கான செலவைச் சமாளிக்கலாம் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது. 

பல கிராமத்துப் பள்ளிகளில் தொலைநோக்கியையே (டெலஸ்கோப்) பார்க்காத குழந்தைகள், முதல் முறையாக தொலைநோக்கி வழியாக விண்வெளியைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள் இருந்தன. அவர்களின் ஆர்வத்தைப் பார்த்துதான், கிராமத்துப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்களுக்கான தேவை புரிந்தது. அறிவியல் வெறும் மேல்தட்டு குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் இருக்கிறது. சிறு வயதில் எனக்குக் கிடைக்காத வசதிகள், இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது என்பதை உணர்ந்தபோது, பள்ளிகளில் அஸ்ட்ரானமி ஆய்வகங்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கினேன். 

வானம் எப்படி எல்லோருக்குமானதாக இருக்கிறதோ, அதேபோல  விண்பொருள் ஆய்வகங்களும், ஆராய்ச்சி மையங்களும் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் `Astro Scape' என்ற என்னுடைய ஸ்டார்ட்-அப் கம்பெனியை உருவாக்கி, அதன் மூலம் பள்ளிகளில் அஸ்ட்ரானமி ஆய்வகங்களை இன்னும் அதிகமாகவும் வேகமாகவும் உருவாக்க ஆரம்பித்தேன். 

இப்போது ஐந்து வருடங்களாக இந்தியா முழுக்க பல மாநிலங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பல நூறு விண்வெளி ஆராய்ச்சி லேப்கள் உருவாக்கிவருகிறேன். இந்த ஆய்வகங்களின் வழியாக, குழந்தைகளுக்கு அறிவியலில் ஆர்வமும் புரிதலும் உருவாகியுள்ளன.  

அஸ்ட்ரோ ஸ்கேப்- அஸ்ட்ரானமி லேப்
அஸ்ட்ரோ ஸ்கேப்- அஸ்ட்ரானமி லேப்

ஒவ்வொரு அஸ்ட்ரானமி ஆய்வகத்திலும் 70 அறிவியல் கருவிகள் இருக்கும். அதன் மூலம் 55 இயற்பியல் தொடர்பான எக்ஸ்பெரிமென்ட்களைச் செய்து பார்க்க முடியும். முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்திலிருக்கும் கோட்பாடுகளை எடுத்து அவற்றைப் பரிசோதனை செய்து பார்த்து குழந்தைகள் புரிந்துக்கொள்ளும் வண்ணம், லேப்களில் அதற்கான கருவிகளையும் வசதிகளையும் உருவாக்கியுள்ளோம்.

மூன்று லட்சத்தில் ஒரு அஸ்ட்ராணமி ஆய்வகத்தை, பத்து நாள்களுக்குள் ஒரு பள்ளியில் அமைத்துக்கொடுக்க முடியும். அதே போல, நான்கு மணி நேரத்தில், ஆசிரியர்களுக்கு அந்த லேபில் உள்ள கருவிகளை எப்படிக் கையாள வேண்டும் என்று முழுப் பயிற்சி அளித்துவிடுவோம். மேலும், அந்தப் பள்ளி ஆசிரியர்களுடன் ஒரு வாட்ஸ்-அப் குழு ஆரம்பித்து அதன் மூலம் அந்த ஆய்வகம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்துகொள்வோம்” என்கிறார்.

ஆர்யன் மிஷ்ரா
ஆர்யன் மிஷ்ரா

ஆர்யனின் இந்த முயற்சி மூலம், அடிக்கடி பள்ளிக்கு வராத குழந்தைகள், நாள் தவறாமல் பள்ளிக்கு வருகின்றனர். இந்த லேப் மூலம் பள்ளி இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு அறிவியல் மீதான ஆர்வமும் ஆதிகரித்து, கல்வியில் அதிக கவனம் செலுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுவரை அஸ்ட்ரோ ஸ்கேப் நிறுவனம், 18 மாநிலங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகங்களை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து இந்தியா முழுக்க அனைத்துp பள்ளிகளிலும் அஸ்ட்ரானமி லேப்களை அமைக்க வேண்டும் என்பதும், வானியற்பியல் (Astrophysics) படித்து, அதில் பிஹெச்.டி முடிக்க வேண்டும் என்பதே ஆர்யனின் கனவாக இருக்கிறது.