Published:Updated:

பேச்சுப் போட்டியில் வெற்றி; அமெரிக்கா செல்லும் அரசுப் பள்ளி மாணவி சாதனா!

மாணவி சாதனா ( வெ.தயாநிதி )

``கடந்த மார்ச் மாசம் நடந்த இலக்கிய மன்ற விழாவுல பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு திருவாரூர் மாவட்ட அளவுல முதலிடம் வந்தேன். அதனால என்னை சென்னைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அதுதான் என் வாழ்க்கையிலேயே முதல் முறையா நான் சென்னைக்குப் போனது!’’

Published:Updated:

பேச்சுப் போட்டியில் வெற்றி; அமெரிக்கா செல்லும் அரசுப் பள்ளி மாணவி சாதனா!

``கடந்த மார்ச் மாசம் நடந்த இலக்கிய மன்ற விழாவுல பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு திருவாரூர் மாவட்ட அளவுல முதலிடம் வந்தேன். அதனால என்னை சென்னைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அதுதான் என் வாழ்க்கையிலேயே முதல் முறையா நான் சென்னைக்குப் போனது!’’

மாணவி சாதனா ( வெ.தயாநிதி )

திருவாரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது, கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனா, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட இலக்கிய மன்ற விழாவில் பேச்சுப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று, தற்போது அமெரிக்க செல்வதற்குத் தேர்வாகியுள்ளார்.

பூந்தாலங்குடி என்னும் குக்கிராமத்திலிருந்து அமெரிக்கா வரை செல்ல இருக்கும் அந்த மாணவிக்கு, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அம்மாவுடன் மாணவி சாதனா.
அம்மாவுடன் மாணவி சாதனா.

``ஊரில் கருவகாட்டையும், களத்து மேட்டையும் மட்டுமே பார்த்து வளர்ந்த எனக்கு, அமெரிக்கா செல்கிற வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது நான் படிக்கும் அரசுப் பள்ளிதான்" என்று ஆரம்பித்த சாதனா, இன்னும் சில தினங்களில் அமெரிக்க செல்லவிருக்கும் பூரிப்பில் இருந்தார்.

``நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பூந்தாலங்குடி கிராமம். எங்க அப்பா, அம்மா விவசாயம் பாக்குறாங்க. எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில எட்டாம் வகுப்புப் படிக்கிறேன். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால நடத்தப்பட்ட இலக்கிய மன்ற விழாவுல ஜெயிச்சி, மாநில அளவுல பேச்சுப் போட்டில சிறப்பிடம் பெற்று, இப்போ அமெரிக்கா போற வாய்ப்பைப் பெற்றிருக்கேன்.

பாராட்டு சான்றிதழ், கேடங்கள்
பாராட்டு சான்றிதழ், கேடங்கள்

கடந்த மார்ச் மாசம் நடந்த இலக்கிய மன்ற விழாவுல நான் பேச்சுப் போட்டியில கலந்துக்கிட்டு திருவாரூர் மாவட்ட அளவுல முதலிடம் வந்தேன். அதனால என்னை சென்னைக்கு அழைச்சிட்டு போனாங்க. அதுதான் என் வாழ்க்கையிலேயே முதல் முறையா நான் சென்னைக்குப் போனது. அங்க தமிழ்நாட்டின் பல மாவட்டத்திலேர்ந்து நிறைய மாணவர்கள், என்னை மாதிரியே தேர்வாகி வந்திருந்தாங்க, அவங்க கூட பேசிப் பழகுறதுக்கு நிறைய வாய்ப்புக் கிடைச்சிது. சென்னையில நிறைய இடத்துக்கு கல்வி சுற்றுலா போனோம். சட்டசபைக்குள்ள அழைச்சிட்டுப் போனாங்க. அங்க சட்டமன்ற உறுப்பினர்களையும், முதல்வரையும் நேர்ல பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு.

கிட்டத்தட்ட ஒரு வாரமா எங்களுக்கே தெரியாம எங்களை கவனிச்சுட்டு வந்த, அங்க இருந்த ஆசிரியர்கள், எங்களுடைய திறமையையும் பண்பையும் வச்சு எங்களுக்கு மதிப்பெண் போட்டாங்க. அவங்க கொடுத்த மதிப்பெண் அடிப்படையில, நான் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றிருக்கேன். அதனாலதான் இப்போ எனக்கு அமெரிக்கா போறதுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.

எங்க கிராமத்துக்கு பஸ் வர்றதே அப்பப்போதான். நான் விமானத்துல அமெரிக்காவுக்குப் போகப் போறேன்னு நினைக்கும்போதே பரவசமா இருக்கு.

கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.
கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்.

எங்க அம்மா வயல் வேலை பார்த்துதான் என்னைப் படிக்கவைக்கிறாங்க. எங்க சொந்தக்காரங்க சிலர், கவர்மென்ட்டு ஸ்கூல்லயா உங்க புள்ள படிக்குதுனு எங்களை இறக்கித்தான் பார்ப்பாங்க. ஆனா, அரசுப் பள்ளியில படிச்சதனால தான் இப்போ நான் அமெரிக்கா போகப்போறேன். திருவாரூர் மாவட்டத்துல பல விழாக்கள்ல ஆசிரியர்கள் என்னை மேடை ஏற்றியும் பொன்னாடை போர்த்தியும் பெருமையா சொல்றாங்க.

இந்த அரிய வாய்ப்ப ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து 12-ம் வகுப்பு வரைக்கும் அரசுப் பள்ளியிலேயே படிச்சி, அநீதிக்கு எதிரா போராடுற நேர்மையான வழக்கறிஞரா ஆகணும் என்பதுதான் என் கனவு’’ என்றார் உற்சாகமாக.

கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

பள்ளித் தலைமை ஆசிரியர் வனிதாவிடம் பேசினோம். ``எங்க அரசுப் பள்ளியில 150க்கும் மேல மாணவர்கள் படிக்கிறாங்க. 2011-ம் வருசம் இந்தப் பள்ளிக்கூடத்துக்கு பணி உயர்வு பெற்று தலைமை ஆசிரியரா வந்தேன். மாணவர்களோட திறமைகள வெளி உலகத்துக்குக் கொண்டு வரணும்னு நிறைய முயற்சிகள நானும் இங்க இருக்குற ஆசிரியர்களும் முன்னெடுத்தோம்.

சாதனாவுக்கு இப்போ கிடைச்சிருக்கிற வாய்ப்பு, எங்க பள்ளிக்கூடத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். சாதனா எப்பவும் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வத்தோட இருப்பாங்க. இப்ப கூட எங்க பள்ளியோட பாலர் சபை தேர்தல்ல ஜெயிச்சு பள்ளியோட செயலாளரா இருக்காங்க. அந்த நிர்வாகப் பொறுப்பை நல்லா செஞ்சுகிட்டு வர்றாங்க.

தலைமை ஆசிரியருடன்
தலைமை ஆசிரியருடன்

எங்க பள்ளி சார்பா `பெண்மையைப் போற்றுவோம்' என்கிற தலைப்புல பேசி, மாவட்ட அளவுல முதலிடம் வாங்குனாங்க. தொடர்ந்து சென்னைக்கு போய், இப்போ அமெரிக்கா போவதற்கான வாய்ப்பையும் பெற்று இருக்காங்க. அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களோட அறிவையும் திறமையையும் வளர்த்துக்கிட்டு சமூகத்துல மிகப்பெரிய உயரத்துக்கு போகணும்னுங்கிறதே எங்க ஆசை" என்றார் வாழ்த்தி!

சாதனை பல படைக்க வாழ்த்துகள் சாதனா!