அரசியல்
சமூகம்
Published:Updated:

கற்றனைத் தூறும் அறிவு - கல்விக் கொள்கை: இந்தியாவின் தேவையை புரிந்து கொண்ட ஆவணம்!

கற்றனைத் தூறும் அறிவு
பிரீமியம் ஸ்டோரி
News
கற்றனைத் தூறும் அறிவு

பத்ரி சேஷாத்ரி, ஐ.ஐ.டி மற்றும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீர்திருத்தங்களுடன் வெளியாகியுள்ளது, மத்திய அரசின் இந்தியாவுக்கான ‘புதிய கல்விக் கொள்கை’. உலக அளவில் கல்வியாளர்கள் தொடர்ந்து பேசிவரும் முக்கியமான கருத்தாக்கங்களை உள்ளடக்கி, பல முன்னேறிய நாடுகளின் வெற்றிபெற்ற சில மாதிரிகளைக் கணக்கில் கொண்டு, உலகெங்கிலும் காலாவதியாகிப்போன, ஆனால் இந்தியாவில் மட்டும் நடைமுறையில் இருக்கும் சில பழைமையான முறைகளை நீக்குவதற்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது கல்விக் கொள்கை. அதேசமயம் சில சர்ச்சைக்குரிய, கட்டாயமாக விவாதிக்க வேண்டிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

இன்று நடைமுறையில் இருக்கும் உயர் கல்வி முறையை முற்றிலுமாக மாற்ற முனைகிறது, புதியக் கல்விக் கொள்கை. ஏனெனில் நம் உயர் கல்வி முறை, அதன் அடிப்படை நோக்கத்திலிருந்து முற்றிலுமாக விலகி, பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இறுக்கமான அமைப்பு முறை, பல்வேறு கட்டுப்பாட்டு அமைப்புகளின் தலையீடு, வெறும் சான்றிதழை மட்டும் கொடுக்கும் தரமற்ற கல்வி, ஆராய்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத கல்விக்கூடங்கள், ஊரை ஏமாற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - இவைதான் இன்றைய உயர் கல்வியின் நிலை.

உயர் கல்வித் துறையில் மறுமலர்ச்சி!

இதை மாற்ற முற்படும் புதியக் கல்விக்கொள்கை, கீழ்க்கண்ட முக்கியமான பரிந்துரைகளை முன்வைக்கிறது:

1. நாடு முழுமைக்குமான உயர் கல்விக்கு ஒரே மத்தியக் கட்டுப்பாட்டு அமைப்பு மட்டுமே இருக்கும். இன்று இருக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, பொறியியல் கல்வியைக் கட்டுப்படுத்தும் ஏ.ஐ.சி.டி.இ, மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான எம்.சி.ஐ, ஆசிரியர் பயிற்சியைக் கட்டுப்படுத்தும் என்.சி.டி.இ போன்றவை கல்வியில் நேரடியாக ஈடுபடாது.

2. பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மட்டுமே கவனிக்கும்.

3. இன்றைய பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் அளிக்கும் முறைகள் நீக்கப்படும். பல்கலைக்கழகங்களின்கீழ் வரும் கல்லூரிகள், முழுமையான தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகளாக மாறிவிடும். பல்கலைக்கழகங்கள் எந்தக் கல்லூரிகளையும் கட்டுப்படுத்தாது. மாறாக, அவை அமெரிக்காவில் உள்ளதுபோல் நேரடியாகக் கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவற்றில் ஈடுபடும்.

4. தேசிய ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி அதற்கு அளிக்கப்படும். நாடு முழுவதற்குமான ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவியை இந்த நிறுவனம் அளிக்கும்.

5. தனித்து இயங்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பத்தாண்டுகளில் முற்றிலுமாக நிறுத்தப்படும். கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உட்பட்டே ஆசிரியர் பயிற்சிப் படிப்பும் இருக்கும்.

மேற்கண்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், நிச்சயமாக உயர் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படும். ஆனால், உயர் கல்வியைப் பொறுத்தவரை மாநிலங்களின் அதிகாரம் வெகுவாகக் குறைக்கப் பட்டு, மத்திய அரசின்கீழ் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும். தவிர, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளைத் தேசியத் தேர்வு வாரியம் நடத்தும் என்கிற கருத்து சர்ச்சைக்குரியது. நுழைவுத்தேர்வு என்பதற்குப் பதிலாக ‘தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு’ என்றும்; இந்தத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே என்று இல்லாமல், இந்தத் தேர்வின் மதிப்பெண்களையும் சேர்த்துக்கொண்டு உயர் கல்வியில் சேர அனுமதி என்றும் சொல்லியிருந்தால், சரியாக இருக்கும்.

கற்றனைத் தூறும் அறிவு - கல்விக் கொள்கை: இந்தியாவின் தேவையை புரிந்து கொண்ட ஆவணம்!

உதாரணத்துக்கு, அமெரிக்காவில் SAT எனப்படும் தரப்படுத்தப்பட்ட தகுதித் தேர்வு நடைபெறுகிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் சேர, இந்தத் தேர்வின் மதிப்பெண்கள், பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள், மாணவர் சொந்தமாக எழுதும் ஒரு கட்டுரை, மாணவருக்கு அவருடைய பள்ளி ஆசிரியர்கள் தரும் பரிந்துரைகள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு இடம் தரப்படுகிறது. அதேபோன்ற முறை இந்தியாவுக்கும் பொருத்தமாக இருக்கும். கல்விக்கொள்கை முன்வைக்கும் மற்றொரு முக்கியமான கருத்து, அரசுக் கல்வி நிறுவனங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் சமமான முறையில் கட்டுப்படுத்தப்படும் என்பது.

சர்ச்சைகள் நிறைந்த பள்ளிக் கல்வி!

பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை சர்ச்சைக்குரிய விஷயங்கள் சற்று அதிகம். முதலில், பள்ளிக் கல்வியை மத்திய அரசு தன் கையில் எடுத்துக்கொள்ள முனையவில்லை என்பதைச் சொல்லிவிடலாம். ஒரு மாநில அரசு தன் மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதற்கான பரிந்துரைகளை மட்டுமே இந்தக் கல்விக் கொள்கை முன்வைக்கிறது.

இன்றைக்குப் பள்ளிக் கல்வியை வழிநடத் தும் மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையை நான்காகப் பிரிக்கப் பரிந்துரைக்கிறது கல்விக்கொள்கை. உயர் கல்வியைக் கட்டுப் படுத்தும் அமைப்புபோல, தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில பள்ளிக் கல்வியைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அமைப்பு; பாடத்திட்டத்தை உருவாக்கி, பாடப்புத்தகங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்குத் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (SCERT); பொதுத்தேர்வுகளை மட்டும் நடத்தி மதிப்பெண்களை வழங்குவதற்கு ஓர் அமைப்பு என்று மூன்று வெவ்வேறு அமைப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவற்றுடன் அரசுப் பள்ளிகளை நடத்தும் பொறுப்பை மட்டும் கொண்ட நான்காவது அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும். இந்தப் பிரிவு மிக முக்கியமானது. இன்று பள்ளிக் கல்வித்துறை இந்த நான்கையும், தான் மட்டுமே செய்கிறது. அதனால், ஒரு பகுதி செய்யும் தவறுகளைச் சரிக்கட்ட இன்னொரு பகுதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. நான்கும் தனித்தனி அமைப்புகளானால், எந்தப் பகுதி தவறு செய்கிறது என்பது வெளிப்படையாகத் தெரியும்; தவறுகள் களையப்படும்.

உயர் கல்விபோலவே பள்ளிக்கல்விக் கட்டுப்பாட்டு அமைப்பு, அரசுப் பள்ளி களையும் தனியார் பள்ளிகளையும் சமமாகக் கட்டுப்படுத்தும். இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளின் தரமற்ற கட்டமைப்பு, மோசமான கல்வி போன்றவற்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் முறையில் மாற்றத்தை முன்வைக்கிறது கல்விக்கொள்கை. இன்று அடிப்படையாக மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய மொழி, கணிதம் ஆகியவற்றைக் கற்றுத்தருவதில் பள்ளிக்கூடங்கள் ஒட்டுமொத்தமாகத் தோல்வி அடைந்துவிட்டன. இதை வெளிப் படையாக ஒப்புக்கொள்வதற்காகவே இந்தக் கல்விக் கொள்கையைப் பாராட்டலாம். இந்த நிலையை மாற்றுவதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கல்விக் கொள்கை விளக்கமாகவே பேசுகிறது.

ஆனால், மொழி போதனை என்பதில் கல்விக்கொள்கையின் கருத்துகளில் நிறையப் பிரச்னைகள் உள்ளன. தாய்மொழி வழிக் கல்வியை உரத்துப் பேசும் இந்தக் கொள்கை, ஆங்கிலத்தைத் தேவையின்றிச் சாடுகிறது. அதே நேரம் அறிவியலுக்கு மட்டும் ஆங்கிலமும் உகந்தது என்கிறது. எட்டாம் வகுப்பு வரையாவது அறிவியல் இல்லாத மற்றப் பாடங்களை தாய்மொழியில் கற்பிக்கவேண்டும் என்கிறது. இன்றைய நிலையில் மக்கள் இதை ஏற்கமாட்டார்கள்.

மும்மொழித் திட்டத்தை அல்ல, பன்மொழித் திட்டத்தை பள்ளிகளில் கொண்டு வரவேண்டும் என்ற பேராசையை கல்விக் கொள்கை முன்வைக்கிறது. இது சாத்தியமற்ற, தேவையற்ற ஒன்று.

மும்மொழித் திட்டத்தை அல்ல, பன்மொழித் திட்டத்தை பள்ளிகளில் கொண்டுவரவேண்டும் என்ற பேராசையை கல்விக் கொள்கை முன் வைக்கிறது. இது சாத்தியமற்ற, தேவையற்ற ஒன்று. தமிழ், ஆங்கிலம், இந்தி ஒரு பக்கம்; சமஸ்கிருதம், தமிழ் போன்ற செம்மொழிகள் ஒரு பக்கம்; இவை தவிர, ஜப்பான், பிரெஞ்சு, ஜெர்மன், சீனம் போன்ற மொழிகள்; தவிர, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி ஒரு பாடம் என்று மொழிகளைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கிறது கல்விக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் இரண்டையும் ஒழுங்காகச் சொல்லித் தருவது எப்படி என்பதே நமக்குக் கவலையாக இருக்கும் நிலையில், இவை எல்லாம் தேவையற்ற கருத்துகள். சமஸ்கிருதத்துக்கு, தேவைக்கு அதிகமான இடஒதுக்கீடு இந்தக் கொள்கை ஆவணத்தில் உள்ளது. அதே நேரம், செம்மொழி தமிழை, கன்னடம், மலையாளம், ஒடியா, தெலுங்கு போன்றவற்றோடு சேர்த்துச் சொல்வதும் தமிழர்களுக்குக் கடுங்கோபத்தை ஏற்படுத்தும்.

மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற புரளியைச் சிலர் கிளப்பி யிருக்கின்றனர். ஆவணம் அப்படி எதையும் சொல்லவில்லை. இந்த வகுப்புகளின் இறுதியில் ‘சென்சஸ் தேர்வு’ என்ற ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறது. இதன் அடிப்படையில் பாஸ், ஃபெயில் என்று எதுவும் கிடையாது. சென்சஸில் (மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருப்பதுபோல்), மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளின் இறுதியில் எத்தனை மாணவர்கள் எந்தெந்தப் படிநிலையில் இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு புள்ளியியல் தகவல் சேகரிப்புச் சாதனமே இது. இதை அடிப்படையாகக் கொண்டு, பாடத்திட்டத்தை மாற்றுவது, கற்பிக்கும் முறையை மாற்றுவது போன்றவற்றில் ஈடுபடலாம்.

கற்றனைத் தூறும் அறிவு - கல்விக் கொள்கை: இந்தியாவின் தேவையை புரிந்து கொண்ட ஆவணம்!

மத்திய அரசு, அதுவும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்திலும் எந்த ஒரு கொள்கையிலும் என்னவெல்லாம் சதித்திட்டங்கள் ஒளிந்திருக்கின்றன என்று தேடித் தேடி அவற்றைச் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆக்கி, கொந்தளித்துக் குமுறுவது தமிழகத்தில் இன்றைய ஃபேஷனாக இருக்கிறது.

உண்மையில் இந்தக் கொள்கை முன்வைக்கும் கருத்துகள் தொடர்பாகப் பரவலான விவாதங்கள் நாடு முழுவதும் தேவை. அவை ஆவணத்தின் நிறை குறைகளைப்பற்றி நேர்மையுடன் நடத்தப்பட வேண்டும். இதில் மாநில அரசுகளின் பங்கு முக்கியம். ஆனால், மாநில பள்ளிக் கல்வித் துறையும் சரி, உயர்கல்வித் துறையும் சரி, இந்தத் துறைகளுக் கான அமைச்சர்களும் சரி, இந்த ஆவணத்தைப் படித்திருக்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

என் அளவில் இந்தக் கல்விக்கொள்கை சரியான திசையை நோக்கிப் பயணிப்பதாகவே கருதுகிறேன். இதில் சில குறைகள் நிச்சயமாக உள்ளன. அவை களையப்படவேண்டும்; மாற்றப்படவேண்டும். ஆனால், இந்தியாவின் கல்வித் தேவைகளை மிகவும் புரிந்துகொண்ட, இந்தியாவின் தற்போதைய கல்வியைக் கவலையுடன் பார்த்து, அதை மாற்றவேண்டும் என்ற அவசரத் தேவையைக் கையில் எடுத்துக்கொண்ட சரியான ஓர் ஆவணமாகவே இதை நான் காண்கிறேன்.