
நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 720. இதில் 117 மதிப்பெண் பெறும் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தேர்ச்சி மதிப்பெண் 93.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளிவந்துள்ளன. இத்தேர்வில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 1,32,167 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். இதில் 12,840 பேர் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 4,447.
நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறிவருகிறது. ஆனாலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்தச் சூழலில் பெரும்பாலான அரசுப்பள்ளி மாணவர்கள் நம்பிக்கையிழந்துள்ளார்கள். கடந்த ஆண்டு 8.9 லட்சம் மாணவர்கள் தமிழகத்திலிருந்து +2 தேர்வை எழுதினார்கள். இதில் 5.5 லட்சம் பேர் அரசுப்பள்ளியில் படித்தவர்கள். இவர்களில் 2.5 லட்சம் மாணவர்கள் அறிவியல் பிரிவை எடுத்தவர்கள். இதில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே நீட் எழுதினார்கள்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், தமிழகம் முழுவதும் ‘தொடுவானம்' என்ற பெயரில் 416 மையங்களை உருவாக்கி நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. ஆனால் போதிய எண்ணிக்கையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கொரோனாத் தாக்குதல் காரணமாக இந்தப் பயிற்சி ஆன்லைன் வழியாக மாற்றப்பட்டதால், படிப்படியாக இது பயனற்றுப்போனது.

மாநிலப் பாடத்திட்டமாக இருந்தாலும் சரி, சி.பி.எஸ்.இ-யாக இருந்தாலும் சரி, தனியாக கோச்சிங் போனால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற சூழலில், விரிவான பயிற்சி ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ‘எலைட் மாடல் பள்ளி' என்ற பெயரில் தமிழகம் முழுமைக்கும் 10 உண்டு உறைவிடப்பள்ளிகளைத் தொடங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் நன்றாகப் படிக்கும் 80 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பயிற்சி அளித்தார்கள். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் பிரிவைப் படித்த நிலையில், ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைத்தது.
நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 720. இதில் 117 மதிப்பெண் பெறும் பொதுப்பிரிவினர் தேர்ச்சி பெறுவார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தேர்ச்சி மதிப்பெண் 93. தேர்வெழுதிய 12,840 பேரில் 8,393 பேரால் இந்தக் குறைந்தபட்ச மதிப்பெண்களைக்கூட எடுக்கமுடியவில்லை. வெறும் 3 பேர் மட்டுமே 450 முதல் 471 மதிப்பெண் பெற்றுள்ளார்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளிலேனும் இடம்பிடிக்க 540 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. 7.5% ஒதுக்கீட்டில் மட்டுமே இவர்கள் மருத்துவம் சேரமுடியும்.
‘‘நன்றாகப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களைத் தேர்வுசெய்து எங்கள் அறக்கட்டளை மூலம் முழுச்செலவேற்றுப் படிக்க வைக்கும் பணியை கடந்த ஏழு ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெறவும் உதவுகிறோம். வடமாநிலப் பள்ளிகளில் பெயருக்கு பிளஸ் 2 வகுப்புகளை நடத்திவிட்டு முழுமூச்சாக நீட் தேர்வுக்குத் தயார்படுத்துகிறார்கள். தமிழக அரசு தெளிவான முடிவெடுக்க வேண்டும். விலக்கு பெறுவதென்றால் மிகப்பெரும் அழுத்தம் கொடுத்து அந்த வழியில் செல்லவேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களை அந்தத் தேர்வுக்குத் தகுதிப்படுத்த வேண்டும்’’ என்கிறார் திருநெல்வேலியைத் சேர்ந்த நிஜாம் முகமது.
அரசுப்பள்ளியின் நிலை இதுவென்றால், ஒட்டுமொத்தத் தமிழக மாணவர்களின் நீட் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் 1,19,327 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 63,340 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். எல்லாம் சேர்த்து தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 51%. தமிழகத்தில் 2020-ம் ஆண்டில் 57%, 2021-ல் 54% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் படிப்படியாகச் சரிந்துவருகிறது. தேசிய அளவில் அதிக உயர்கல்விச் சேர்க்கை நடப்பதாகப் பெருமிதப்படும் மாநிலத்தில் இது கவலைக்குரிய விஷயம்.
‘‘ஒன்றிய அளவில் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்களை அரசு உடனே தொடங்க வேண்டும். அதை மீண்டும் ஆசிரியர்கள் தலையில் சுமத்தாமல் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நியமிக்கவேண்டும். பயிற்சி மையங்களில் தங்கும் வசதி, உணவுவசதியும் இருக்கவேண்டும். நீட்டிலிருந்து விலக்கு பெற்றாலும் இந்தப் பயிற்சி மையங்கள் அவசியம். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் இடம்பெற, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பெற, மத்திய அரசு நிறுவனங்களில் நர்சிங், பார்மசி படிக்க நீட் அவசியமாக இருக்கிறது. அதைத் தமிழக மாணவர்கள் பெற இந்தப் பயிற்சி மையங்கள் உதவியாக இருக்கும். நீட் விலக்கு கேட்பது வேறு விஷயம். மாணவர்களை அந்தத் தேர்வுக்குத் தகுதிப்படுத்துவது வேறு விஷயம். இரண்டையும் பிரித்துப் பார்க்கவேண்டும்’’ என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்.

மாநிலக் கல்விக்கொள்கைக் குழு உறுப்பினரும் முன்னாள் துணைவேந்தருமான ஜவஹர் நேசனிடம் இதுகுறித்துப் பேசினேன். ‘‘நீட் தேர்வில் தனிப்பயிற்சி இல்லாமல் தேர்ச்சிபெறமுடியாது. பணம் இருப்பவர்கள் 6-ம் வகுப்பு முதலே பயிற்சி எடுக்கிறார்கள். அப்படிப் படிப்பவர்கள்தான் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற சூழலில் நமது கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும் பாடத் திட்டத்தையும் எப்படிக் குறை சொல்ல முடியும்? தமிழக அரசு நீட் விலக்குக் கேட்டுப் போராடுவதோடு தற்காலிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எலைட் பயிற்சி மையங்களை விரிவுபடுத்தலாம்’’ என்கிறார் அவர்.
இதுதொடர்பாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினேன். ‘‘அரசுப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்தத் துறையுடன் இணைந்து பயிற்சியை மேம்படுத்துவது பற்றிப் பள்ளிக்கல்வி அமைச்சரோடு பேசுவேன். அதேநேரம் தேர்ச்சி விகிதத்தில் பெரிய சரிவு எதுவுமில்லை. 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 540 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடும்’’ என்றார் அவர்.
தமிழக அரசு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக்கூடாது. போராடி நீட்டுக்கு விலக்குப் பெறுவது இருக்கட்டும்... அதைச் சொல்லி மாணவர்களைக் கைவிட்டுவிடாதீர்கள்!