அலசல்
அரசியல்
Published:Updated:

நீட் தேர்வு... கோட்டைவிட்ட பள்ளிக்கல்வித்துறை... தொடரும் மெத்தனத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

 நீட் தேர்வு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நீட் தேர்வு முடிவுகள்

தற்போது தேர்வு எழுதிய மாணவர்கள், 10, 11 ஆகிய வகுப்புகளை கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாகவே பயின்றனர். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு நீட் பயிற்சிக்கு அதிதீவிர முக்கியத்துவத்தை அரசு கொடுத்திருக்க வேண்டும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை செப்.7-ம் தேதி நள்ளிரவில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை (NTA). நாடு முழுவதும் 17,64,571 பேர் எழுதிய தேர்வில் 9,93,069 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, 56.28 சதவிகிதம் மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.06 சதவிகிதம் மட்டுமே குறைவாகும். ஆனால், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த ஆண்டைவிட 6 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

அதிகாரிகளின் மெத்தனம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 17,517 பேர் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் வெறும் 21.37 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கத் தகுதியடைந்துள்ளதாகவும் தேர்வு முடிவுகள் வெளியான நேரத்தில் தகவல் வெளியானது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. ஆனால், தற்போது 12,840 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதினர் என்றும், அவர்களில் 4,447 பேர் தேர்ச்சிபெற்றதாகவும் (35 சதவிகிதம்) புதுத் தகவலைக் கசியவிட்டிருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. ஆனால், இந்தத் தகவல் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதன் பின்னணி குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தோம். “கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அரசுப் பள்ளி மாணவர் களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சி வழங்க தனியார் இன்ஸ்டிட்யூட் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப் பட்டது. அதன் மூலம் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது. இதன் காரணமாக 2020-ல் 25 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். ஆனால், இந்த வழிமுறைக்கு நிதி அதிகமாகச் செலவிடப்படுவதாகக் கருதிய பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் மாவட்ட வாரியாக ஆசிரியர்களைவைத்து பயிற்சி வழங்கினர். அதன் விளைவு 2021-லேயே பிரதிபலித்தது. அரசுப் பள்ளியில் பயின்று தேர்வெழுதிய 8,061 மாணவர்களில் 1,957 பேர் மட்டுமே தேர்ச்சி (24.27 சதவிகிதம்) பெற்றனர். எனவே, பழையபடி இன்ஸ்டிட்யூட் மூலமாகவே பயிற்சி வழங்கலாம் என்று பலமுறை கூறியும் உயரதிகாரிகள், தங்களின் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

நீட் தேர்வு... கோட்டைவிட்ட பள்ளிக்கல்வித்துறை... தொடரும் மெத்தனத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

7.5% இட ஒதுக்கீட்டுக்கு வேட்டு

நடப்பாண்டில் நீட் பயிற்சிக்கு எந்த முக்கியத் துவமும், நிதியும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்த ஆண்டு வெறும் 18% பேர் மட்டுமே தகுதிபெற இதுவே காரணம். இந்தத் தகவலை மறைக்கத்தான், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் சேர்த்து 12,840 பேர் தேர்வெழுதியதாகவும், அவர்களில் 4,447 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் (35%) கணக்கு காட்டுகிறார்கள்.

தமிழ்நாடு முழுக்க நன்றாகப் படிக்கும் மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களுக் குத்தான் அரசு இலவசப் பயிற்சி அளித்துவருகிறது. அதன்படி, தலைநகர் சென்னையில் 5 முகாம்களில் பயிற்சிபெற்ற 346 எலைட் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். அவர்களில் 81 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 5 பேர் பூஜ்ஜியத்துக்கும் கீழும் (மைனஸ் மார்க்), 2 பேர் பூஜ்ஜிய மதிப்பெண்களும், 6 பேர் ஒற்றை இலக்க மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். எலைட் மாணவர்களுக்கே இந்த நிலைமையென்றால், பிற மாவட்டங்களில் பயிற்சி எப்படி இருந்திருக் கும்... மாநிலம் முழுவதும் 17 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பூஜ்ஜியமும், அதற்கும் குறைவான மதிப்பெண்களும் வாங்கியிருக் கிறார்கள். மேலும், 7.5% இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி, திறமை இருக்கும் மாணவர்கள் தாங்களாகவே படித்து மேலே வரட்டும் என்ற முடிவுக்கு உயரதிகாரிகள் வந்துவிட்டனர்” என்றனர் ஆதங்கத்துடன்.

நீட் பயிற்சிக்கு முக்கியத்துவமில்லை!

இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “2020 நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2019 செப்டம்பரில் தொடங்கப்பட்டு, ஓராண்டு காலம் பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், 2022-ம் ஆண்டு, ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கு, அதே ஆண்டு ஏப்ரல் மாதம்தான் பயிற்சியே தொடங்கப்பட்டது. அதாவது வெறும் மூன்று மாதங்கள்தான் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் சரிந்திருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம். இதன் பிறகும்கூட, பள்ளிக்கல்வித்துறை தன் மெத்தனப்போக்கைக் கைவிடவில்லை. அடுத்த நீட் தேர்வு 2023 மே மாதம் நடக்கவிருக்கிறது. அதற்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு ஏதுவாக பயிற்சியைத் தொடங்க பள்ளிக்கல்வித்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த மெத்தனப் போக்கு நீடித்தால் வரும்காலத்தில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குக்கூட தகுதியான மாணவர் களைத் தயார் செய்ய முடியாது. நீட் தேர்வு விலக்குக்காக அரசு சட்டப்போராட்டம் நடத்தினாலும், விலக்கு பெறும் வரை மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி வழங்க வேண்டும்” என்றனர் வேதனையுடன்.

நீட் தேர்வு... கோட்டைவிட்ட பள்ளிக்கல்வித்துறை... தொடரும் மெத்தனத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தேர்வின் நிலை குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “தற்போது தேர்வு எழுதிய மாணவர்கள், 10, 11 ஆகிய வகுப்புகளை கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாகவே பயின்றனர். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு நீட் பயிற்சிக்கு அதிதீவிர முக்கியத்துவத்தை அரசு கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வழக்கத்தைவிட குறைவான பயிற்சியே கொடுக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தேர்ச்சி விகிதம் சரிந்திருக்கிறது. அதேபோல, மருத்துவப் படிப்புக்கான கட் ஆஃப் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. கடந்த ஆண்டு 108-ஆக இருந்த கட் ஆஃப் தற்போது 93-ஆக குறைந்திருக்கிறது. அதன்படி, நீட் தேர்வில் வெறும் 12 சதவிகித மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பணம் இருந்தால், தனியார் கல்லூரியில் சீட் வாங்கிவிடலாம். தகுதி, திறமை இருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்கலாம் என்று நீட் தேர்வுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. ஆனால், இந்த கட் ஆஃப் குறைவு தேர்வின் தரத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது” என்றார்.

இது தொடர்பாக கல்வியாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி கூறுகையில், “உயர்கல்வி பயில வரும் மாணவர்களின் சேர்க்கை விகிதம், தேசிய அளவில் 27.1 சதவிகிதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 51.4 சதவிகித மாக இருக்கிறது. ஆனால், நீட் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை தேசிய அளவில் தமிழ்நாடு 29-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவு மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தையே நாம் கேள்விக் குள்ளாக்க வேண்டும். 10, 12-ல் பொதுத் தேர்வு களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுவதால், 9, 11-ம் வகுப்புகளுக்கான பாடமே பள்ளிகளில் நடத்தப் படுவதில்லை. இந்த நடைமுறையை முதலில் ஒழிக்க வேண்டும். நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருந்தாலும், அது இருக்கும் வரை மாணவர்களை முறையாகத் தயார் செய்யவேண்டியது அரசின் கடமை” என்றார்.

ஜெயபிரகாஷ் காந்தி, பிரபா கல்விமணி, நந்தகுமார்
ஜெயபிரகாஷ் காந்தி, பிரபா கல்விமணி, நந்தகுமார்

முற்றுப்புள்ளி வைப்பாரா அமைச்சர்?

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரைப் பலமுறை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டோம். மூன்று முறை அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். ஆனால், அவர் நமது அழைப்பையும் ஏற்கவில்லை, நேரில் சந்திக்கவும் நேரம் கொடுக்கவில்லை.

நல்லதோ, கெட்டதோ அ.தி.மு.க ஆட்சியில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து சரியான புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப் பட்டன. ஆனால், தற்போது புள்ளிவிவரங்கள் எதுவும் முறையாக வெளியிடப்படுவதில்லை. ‘நீட் தேர்வு ரிசல்ட் வெளியான அன்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பதைப்போல இருந்தேன்’ என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உருகியிருந்தார். ஆனால், துறையின் உயரதிகாரிகளுக்கு நீட் பயிற்சி குறித்தோ, ரிசல்ட் குறித்தோ எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. நீட் பயிற்சியில் இருக்கும் பிரச்னைகளுக்கும், உயரதிகாரிகளின் மெத்தனப் போக்குக்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா அமைச்சர் அன்பில்..?

7.5% இட ஒதுக்கீட்டுக்கே வேட்டு?!

“நீட் வந்த பிறகும் சரி, அது வருவதற்கு முன்பும் சரி... மருத்துவப் படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். 7.5% உள் இட ஒதுக்கீடு வந்த பிறகே, கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 445 எம்.பி.பி.எஸ் இடங்களும், 110 பி.டி.எஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. பயிற்சி காரணமாக, அதற்கு 1,806 பேர் தகுதியும் பெற்றிருந்தனர். ஆனால், நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. கூடவே, நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கலாம். கூடுதல் மதிப்பெண் பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் யாராவது, இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினால் 7.5% இட ஒதுக்கீட்டுக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்” என்று எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.