சினிமா
Published:Updated:

நம் மாநிலம்... நம் கல்வி!

நம் மாநிலம்... நம் கல்வி!
பிரீமியம் ஸ்டோரி
News
நம் மாநிலம்... நம் கல்வி!

மத்திய அரசின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதைப் போலத் தெரியவில்லை. மத்தியப் பட்டியலில் இருப்பதாகக் கருதியே செயல்படுகிறார்கள்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளசூழலில், மாநில அளவில் கல்விக்கொள்கை வகுப்பதற்கான ஆலோசனைக்குழுவை அமைத்திருக்கிறது தமிழக அரசு. முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன், பேராசிரியர் இராமானுஜம், பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வியாளர் மாடசாமி, கீச்சான்குப்பம் நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளை ஜெய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி, ஏடுகடந்து உலகளாவிய வடிவெடுத்துவிட்ட நிலையில் விளையாட்டு வீரர், இசைக்கலைஞர், எழுத்தாளர்களையும் கல்விக்கொள்கைக்கான ஆலோசனைக்குழுவில் இணைத்தது பாராட்டைப் பெற்றிருக்கிறது.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின்படி மத்தியப் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தமிழக அரசோ அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிதி மற்றும் நிர்வாக அளவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் போன்ற அமைப்புகளைச் சார்ந்தே இயங்குவதால் அடுத்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் கல்விக்கொள்கையை இங்கும் செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் வரலாம்.

இந்தியா பல்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழும் தேசம். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வாழ்க்கைமுறை இருக்கிறது. இதையுணர்ந்தே கல்வி என்பது மாநில அரசுகளின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என நம் அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதினார்கள். தமிழகம் போன்ற மாநிலங்கள் இன்னும் கீழிறங்கி பஞ்சாயத்து நிர்வாகங்களின் கைகளில் கல்வியைத் தந்தன.

நம் மாநிலம்... நம் கல்வி!

நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட 1976-களில் கல்வி, காடுகள் நிர்வாகம், எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநிலப் பட்டியலிலிருந்து மத்திய அரசின் ஒத்திசைவையும் பெறவேண்டிய பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அவசரநிலை விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவே இல்லை. ஒரு கட்டத்தில் படிப்படியாக மாநிலங்களின் கல்விக் கட்டமைப்புகளில் நுழைந்து மத்திய அரசு ஆளுமை செய்யத் தொடங்கியது. பல்வேறு பாடத்திட்டங்கள், கல்வி முறைகள் கொண்ட இந்தியாவில் தேச முழுமைக்குமான ஒரே கல்வித்திட்டச் செயல்பாடுகளைத் தற்போதைய மத்திய அரசு நிர்மானிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

‘பொதுப்பட்டியலில் இருக்கும் ஒரு துறையில் மத்திய அரசோ மாநில அரசோ ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவர விரும்பினால் ஒத்திசைவு அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறது இந்திய அரசியலமைப்பு. ஆனால், புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்திலோ. நுழைவுத்தேர்வு விவகாரங்களிலோ மாநிலங்களின் குரலை மத்திய அரசு கேட்கவேயில்லை என்ற குற்றச்சாட்டும் மத்திய அரசுமீது வைக்கப்படுகிறது.

தற்போது கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் சூழலில் மத்திய அரசு, மாநிலங்களின் கல்விச்செயற்பாடுகளை வெளிப்படையாகக் கட்டுப்படுத்தும் இக்காலகட்டத்தில் தமிழக அரசு மாநில அளவில் கல்விக்கொள்கை வகுக்க முனைவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டுள்ளது என்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

“கவர்னர்கள் மூலம் மாநிலங்களைக் கட்டுப்படுத்த முனைகிறது மத்திய அரசு. மாநிலக் கல்விக்கொள்கைக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடலாம். மாநில சட்டப்பேரவை உருவாக்கி அனுப்பிய மசோதாக்களை கவர்னர் கையாளும்விதமே இந்தக் கேள்வியையும் உருவாக்குகிறது. எனவே முதற்கட்டமாக கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் பெயரில் அரசே பணம் கட்டி பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் 25 சதவிகித சேர்க்கை நடைமுறையை மாற்றுவது பற்றியும் கல்விக்குழு ஆலோசிக்கவேண்டும். இந்தத் திட்டத்தில் ஒவ்வோராண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் அரசின் செலவில் தனியார் பள்ளிக்குச் செல்கிறார்கள். கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதத்திலும் மாநிலக் கல்விக்கொள்கை அமைவது அவசியம். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான எளிய குடும்பத்துப் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களையும் உள்ளடக்கி திட்டங்களை வகுக்கவேண்டும்” என்கிறார் கல்வியாளரும் எழுத்தாளருமான ஆயிஷா நடராஜன்.

கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி, மாநிலக் கல்விக்கொள்கைக்கான முன்னெடுப்பை வரவேற்கிறார். அதேநேரம் கல்விக்குழுவின் முன்னால் உள்ள சவால்களையும் பகிர்ந்துகொள்கிறார்.

“கல்விச் செயற்பாடுகளையும் கல்விக்கொள்கைகளையும் அந்தந்த மாநிலங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மத்தியக் கல்விக்கொள்கை ஜனாதிபதியின் அங்கீகாரம் பெற்றுச் செயல்படுத்தப்படவில்லை. அதனால் மாநிலங்களின் கல்விக்கொள்கையை கவர்னரோ மத்திய அரசோ அங்கீகரிக்கத் தேவையில்லை. மாநிலங்கள் தன்னிச்சையாக கல்விக்கொள்கை உருவாக்குவதில் பிரச்னை ஏதுமில்லை என்பது என் கருத்து.

மத்தியக் கல்விக்கொள்கையில் இருக்கும் பெரிய பிரச்னை நுழைவுத்தேர்வுகள். இந்த ஆண்டு மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு வந்துவிட்டது. விரைவில் மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கும் வரப்போகிறது. இதனால் கிராமப்புறப் பிள்ளைகள் வாய்ப்பை இழப்பார்கள். இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் முன்னிற்கும் தமிழகம் பின்தங்கிவிடும். மாநிலக் கல்விக்கொள்கை இதை முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

வசந்தி தேவி, ஆயிஷா நடராஜன், ஜவஹர் நேசன்
வசந்தி தேவி, ஆயிஷா நடராஜன், ஜவஹர் நேசன்

மத்திய அரசின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதைப் போலத் தெரியவில்லை. மத்தியப் பட்டியலில் இருப்பதாகக் கருதியே செயல்படுகிறார்கள். எதையும் மாநிலங்களோடு கலந்து பேசுவதில்லை. மாநிலங்களில் ஒரு தனித்துவமான அரசு இருக்கிறது என்ற எண்ணம்கூட மத்திய அரசின் செயல்பாடுகளில் இல்லை.

புதிய கல்விக்கொள்கை, நுழைவுத்தேர்வு விஷயங்களில் தமிழகம் அளவுக்கு மற்ற மாநிலங்களில் எதிர்ப்புக்குரல்கள் இல்லை. கேரளாவில், மேற்கு வங்கத்தில் கொஞ்சம் பேசுகிறார்கள். மத்திய அரசின் செயல்பாடுகளை மாற்ற, தமிழகம் மட்டுமே முயன்றால் போதாது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முதல்வர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதை இன்னும் தீவிரமாக்கி மத்திய அரசுக்கு அழுத்தத்தை உருவாக்கவேண்டும்” என்கிறார் வசந்திதேவி.

மாநிலக் கல்விக்கொள்கைக்கான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் துணைவேந்தர் ஜவஹர் நேசனிடம் குழுவின் செயல்பாடுகள் குறித்து உரையாடினேன்.

“அரசு இப்படியான உயர்மட்டக் குழுக்கள் போடும்போது விதிமுறைகள், வரையறைகளை வகுத்துத் தருவது வழக்கம். அந்த ப்ரேம் ஒர்க்குக்குள்தான் இந்தக்குழு செயல்படும். அது வழங்கப்பட்டபிறகு இதுகுறித்து விரிவாகப் பேசலாம்...” என்றவர், சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

“கல்வியைப் பொறுத்தவரை பெரும்பாலான பிரிவுகள் மாநிலங்களின் பொறுப்பில்தான் வருகின்றன. கல்வி நிறுவனங்களை உருவாக்குதல், ஒழுங்குமுறைப்படுத்துதல், மூடுதல் போன்ற உரிமைகள் மாநில அரசுகளிடமே இருக்கின்றன. கல்வியில் தரத்தை உருவாக்குவதற்கான காரணிகளையும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மட்டுமே மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. 42வது சட்டத் திருத்தத்திலும் கூட, கல்வியின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாநில அரசோடு சேர்ந்து செய்யவேண்டும் என்ற நோக்கில்தான் ஒத்திசைவுப் பட்டியலில் சேர்த்தார்கள். அதனால் கல்விக் கொள்கைகளை உருவாக்குவதில் அதிக அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் இருக்கிறது.

இந்தியா முழுவதும் இயங்கும் மத்திய கல்வி நிறுவனங்கள் 70க்குள்தான் வரும். லட்சக்கணக்கான பள்ளிகளும் பல ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களும் மாநிலங்களால் நடத்தப்படுபவை. அதனால், கல்விக்கொள்கை வகுக்கவோ ஒழுங்குபடுத்தவோ திட்டங்களை உருவாக்கவோ மாநிலங்களுக்குத்தான் அதிகாரமும் உரிமையும் இருக்கின்றன.

கல்விக்கு மத்திய அரசு நிதியைச் சார்ந்திருப்பதாகச் சொல்வது சரியல்ல. இப்போதும் கல்விக்கு அதிகம் செலவு செய்வது மாநில அரசுகள்தான். தமிழ்நாடு ஜி.டி.பி-யில் 2% கல்விக்குச் செலவு செய்கிறது. மகாராஷ்டிரா 2.2% செலவிடுகிறது. 29 மாநிலங்களையும் எடுத்துப் பார்த்தால் பெருமளவு நிதியை அவைதான் கல்விக்காக ஒதுக்குகின்றன. மத்திய அரசு செஸ் என்ற பெயரில் கல்விக்கான வரியை வாங்கி வேறு வேறு வேலைகளுக்குச் செலவிடுகிறது” என்கிறார் அவர்.

மாநிலக் கல்விக்கொள்கைக்கான பயணம் நீண்டது. நடைமுறையில் பல சிக்கல்கள் எழலாம். ஆனால் அது தமிழகத்தின் நலனுக்கு அவசியம் என்கிறார்கள் கல்வியாளர்கள். இந்தியாவின் பன்மைத்துவத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகளுக்கான எதிர்வினையாகவும் தமிழக அரசின் மாநிலக் கல்விக்கொள்கை இருக்கும். அது இந்தியாவுக்கான முன்மாதிரியாக அமைய வேண்டும்.