
பள்ளியை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளும் ‘பாடங்களை நடத்தி முடித்துவிட்டீர்களா' என்றுதான் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தப் பாடத்திலிருந்துதான் மாணவர் களிடமும் கேள்வி கேட்கிறார்கள்
கொரோனா தாக்கம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் அது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் போலிருக்கிறது. கொரோனாவால் சுமார் 19 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்களின் கற்றல் திறன் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது மத்திய அரசின் ஆய்வு. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், மத்திய அரசின் பள்ளிக்கல்வித்துறை போன்ற அமைப்புகள் நடத்திய ஆய்வுகளில், தமிழக மாணவர்களின் கற்றல் திறன் தேசிய அளவில் மிகவும் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 336 பள்ளிகளில் படிக்கும் 2,937 மாணவர்களை நேரடியாகச் சந்தித்து நடத்தப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் ஆய்வில், 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்குத் தமிழைச் சரியாக வாசிக்கத் தெரியவில்லை. 20% மாணவர்களுக்கு மட்டுமே 3-ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகங்களை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளும் திறன் இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.
‘67% மாணவர்களுக்கு எண்களை அடையாளம் காணத் தெரியவில்லை. கூட்டல், கழித்தல், பெரிய எண்களை அடையாளம் காண்பது போன்ற திறனும் போதிய அளவில் இல்லை. ஆங்கிலத்தில் 71% மாணவர்களால் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் இத்தகைய குறைபாடு அதிகமாக இருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வியை முடிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் குறிப்பிட்ட திறன்களைப் பெறவேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறது. அதற்கேற்பவே பாடத்திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அத்தகைய திறன்களைச் சோதிக்கும் வகையிலேயே தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் அதிகம். 1 கி.மீ-க்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ-க்குள் ஒரு நடுநிலைப் பள்ளி, 7 கி.மீ-க்குள் ஒரு மேல்நிலைப்பள்ளி என குறைவில்லாமல் கல்விக்கூடங்கள் இருக்கின்றன. மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவதிலும் தமிழகமே முன்னிற்கிறது. ஆசிரியர்கள் எண்ணிக்கையிலும் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் நிறைவாகவே இருக்கிறது. இச்சூழலில் தென்னிந்தியாவிலேயே கற்றல் திறனில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இதற்கு கொரோனா முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாயினும், நம் கல்வித் திட்டத்தில் இருக்கும் முரணும் இதற்கு முக்கியக்காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.
‘‘தொடக்கக்கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்கள் வாசிப்புத்திறன், அடிப்படையான கணிதத்திறனோடு அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும் என்பதுதான் கல்வித்திட்டத்தின் எதிர்பார்ப்பு. அதில் பின்னடைவு ஏற்பட்டால் உயர்கல்வித்திறனும் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால் நாம் இந்த விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்’’ என்கிறார், எய்டு இந்தியா அமைப்பின் நிறுவனரும் கல்வியாளருமான பாலாஜி சம்பத்.
நம் வகுப்பறைச்சூழலில் இருக்கும் சில பிரச்னைகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். ‘‘இந்தச் சூழலிலேனும் நம் தேர்வுமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். முதலில் பள்ளிகளில் ‘ஸ்கில் சார்ட்' எனப்படும் ‘திறன் அட்டவணை'யை உருவாக்க வேண்டும். ஐந்தாம் வகுப்புக்குள் தமிழ் வாசிப்புத்திறன், உச்சரிப்புத்திறன், அடிப்படைக் கணிதத்திறன், அறிவியலைப் புரிந்துகொள்ளும் திறன், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுத்துத்திறன் என குறைந்தபட்சம் 10 திறன்களில் மாணவர்கள் நிறைவுபெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவனையும் மதிப்பீடு செய்து திறன் அட்டவணையில் டிக் செய்ய வேண்டும். அந்த அட்டவணையை பள்ளி நோட்டீஸ் போர்டிலேயே ஒட்டிவிடலாம். பெற்றோர்களும் அதைப் பார்க்கவேண்டும். அதுவே ரிப்போர்ட் கார்டு. ஒரு வாக்கியத்தை குழந்தைக்குத் தந்து அதை வாசிக்கச் செய்து, வாசித்தால் திறன் அட்டவணையில் டிக் போடலாம். வாசிக்காவிட்டால் அப்படியே விட்டுவிட்டு, கற்றுக்கொடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் முயலலாம். இறுதி நோக்கம் அந்தக் குழந்தை வாசிக்கவேண்டும்.
ஆசிரியர்கள் பாடங்களை முடித்துவிட்டார்களா என்பதைக் கண்காணிப்பதைவிட, 5-ம் வகுப்பு முடிக்கிற குழந்தை இந்தக் குறிப்பிட்ட திறன்களைப் பெற்றிருக்கிறதா என்பதில்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும். நம் கல்விமுறையின் இலக்கே இந்தத் திறன்களை வளர்த்தெடுப்பதுதான். ஒவ்வொரு மாணவனைப்பற்றியும் ஆசிரியர்கள் நுட்பமாக அறிந்து, எதில் பின்தங்கியிருக்கிறார்களோ அதைக் கற்றுத்தரவேண்டும். நான் இன்று என்ன பாடம் நடத்தவேண்டும் என்று திட்டமிடுவதைவிட ‘இன்று இந்த மாணவனுக்கு ஆங்கில வாசிப்புத்திறன் கற்றுத்தர வேண்டும்', ‘அந்த மாணவிக்கு கழித்தல் கணக்குத்திறன் கற்றுத்தரவேண்டும்' என்று திட்டமிட்டு வகுப்பறைக்கு வரவேண்டும்.
நம் பாடத்திட்டத்தின் நோக்கம் அதுதான். ஆனால் நடைமுறையில் நோக்கத்திலிருந்து விலகிவிட்டோம். அதிகாரிகளும், ‘எப்போது எந்தப் பாடத்தை நடத்தப்போகிறீர்கள்' என்று ஆசிரியர்களிடம் ‘லெசன் பிளானிங்' கேட்கிறார்கள். அதனால் அவர்கள் வேகவேகமாக பாடத்தை நடத்தி முடித்துக்கொள்கிறார்கள்.
பள்ளியை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளும் ‘பாடங்களை நடத்தி முடித்துவிட்டீர்களா' என்றுதான் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்புகிறார்கள். அந்தப் பாடத்திலிருந்துதான் மாணவர் களிடமும் கேள்வி கேட்கிறார்கள். அதனால் திறன் மீதிருந்த கவனம் மாறி, மனப்பாடம் செய்ய வைக்கிறார்கள் ஆசிரியர்கள்.
பாடப்புத்தகம் என்பது ஒரு கைடு. அதைக் குழந்தைகளின் திறனை வளர்ப்பதற்கான கருவியாகத்தான் பயன்படுத்தவேண்டுமே ஒழிய, பக்கம் பக்கமாக அதை நடத்தினாலோ, இத்தனை நாளுக்குள் இந்தப் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தாலோ நாம் பின்தங்கிவிடுவோம்.
இதுமாதிரியான ஆய்வுமுடிவுகள் வரும்போதெல்லாம் அதைத் தீர்ப்பதற்கு சரியான வழிகளைக் கண்டறியாமல் புதிது புதிதாக திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். அதைச் செயல்படுத்தியது பற்றி எமீஸ் தளத்தில் பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். இதுமாதிரி ரிப்போர்ட் தயாரித்து அனுப்புவதிலேயே நேரம் போய்விடுகிறது என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
8-ம் வகுப்பு, 10-ம் வகுப்புகளில் நிறைய பாடங்கள் இருக்கும். அங்கே முறைப்படி பாடம் நடத்தத்தான் வேண்டும். தொடக்கக்கல்வியில் இந்த அளவுக்கு இறுக்கம் தேவையில்லை. குழந்தைகளுக்குக் கதையைப் பாடமாக நடத்திக் கேள்வி கேட்காமல், வாசிக்கப் பழக்கினால் வேறு வேறு புத்தகங்களைக்கூடத் தேடி வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
முதலில் ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கவேண்டும். தேவையில்லாத டேட்டா என்ட்ரி வேலையை விட்டுவிட வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்ட ‘எண்ணும் எழுத்தும்' திட்டத்தையே திறன் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் ‘பாடத்தையெல்லாம் நடத்திவிட்டுக் கூடுதலாக இதையும் செய்யுங்கள்’ என்று சொன்னால் நிச்சயம் அது நடக்காது’’ என்கிறார் பாலாஜி சம்பத்.
இப்போது மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டாண்டுகள் வீட்டிலிருந்தே படித்தவர்கள். முதல்முறையாக பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்கள் பள்ளியின் சூழலுக்குப் பழகுவதே சவாலாக இருக்கிறது. ஆசிரியர்-மாணவர் உறவுநிலையே குழந்தை களுக்குப் புதிதாக இருக்கிறது. பள்ளிக்கும் வகுப்பறைக்கும் பழக கொஞ்சம் நாள்பிடிக்கும். அவர்களை வைத்து தமிழகத்தில் கற்றல் திறன் குறைந்ததாகச் சொல்வது சரியல்ல என்ற குரலும் கேட்கிறது.
‘‘கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளின் கவனிக்கும் திறன் குறைந்துவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஓரிடத்தில் அமர்ந்து ஒரு விஷயத்தை 25 நிமிடங்கள் கவனிக்கிற குழந்தைகளால் இப்போது 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து கவனிக்க முடிவதில்லை. எளிதாகக் கவனச்சிதறலுக்கு உள்ளாகி விடுகிறார்கள். அதற்கு வழக்கமான பள்ளிச் சூழலில் இருந்து விலகியிருந்ததும் ஆன்லைன் வகுப்புகளும் முக்கியக் காரணம்.
லாக்டௌன் காலகட்டத்தில் கேட்ஜெட்ஸ் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதனால் அவர்களின் சிந்தனைத்திறன் குறைந்துவிட்டதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. பிற குழந்தைகளிடம் பழகக்கூடிய தன்மையும் குறைந்திருக்கிறது. தனிமையாக இருக்கிறார்கள். கல்வியின் மீதான தூண்டுதலும் குறைவாக இருக்கிறது.
ஆயினும் இது ஒரு தற்காலிக நிலைதான் என்று சர்வதேச ஆய்வுகள் சொல்கின்றன. எதிர்பாராத ஒரு பேரிடரால் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் விரைவிலேயே சரியாகிவிடும். இப்போதிருக்கும் சூழலை வைத்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. குழந்தைகள் மேல் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது’’ என்கிறார், மனநல மருத்துவரும் எழுத்தாளருமான சிவபாலன் இளங்கோவன்.
ஆசிரியர்கள் குழந்தைகளின் திறனறிந்து பயிற்றுவிப்பது ஒன்றே இதற்குத் தீர்வு. முக்கியமாக, வகுப்பறை, குழந்தைகளின் வகுப்பறையாக இருக்கவேண்டும். ஆசிரியர்களின் வகுப்பறையாக இருக்கக்கூடாது.
5-ம் வகுப்பு முடிக்கும் குழந்தை, பெற்றிருக்க வேண்டிய அடிப்படைத் திறன்கள்:
1. எளிய கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குத் திறன்கள்
2. அடிப்படையான பின்னங்கள்
3. சிறிய கேள்விகளை வாசித்து அதைப் புரிந்துகொண்டு அதற்கான கணக்குத் தீர்வினைத் தருதல்
4. தமிழ் வார்த்தைகள், வாக்கியங்களை வாசித்தல்
5. வாக்கியத்தை வாசித்து அதன் பொருளை அவர்கள் மொழியில் கூறுதல்
6. வாக்கியத்தைப் புரிந்துகொண்டு அதுசார்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்தல்
7. மூன்றெழுத்து, நான்கெழுத்து ஆங்கில வார்த்தைகளை வாசித்தல்
8. திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் 200 ஆங்கில வார்த்தைகளின் பொருள் உணர்தல்
9. அன்றாட வாழ்க்கையில் உள்ள அடிப்படையான அறிவியல் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளுதல்
10. இந்தியாவின் எல்லைகள், கடல், பூமி பற்றிய அடிப்படையான செய்திகளை அறிதல்