திருமணங்களுக்கு, பிறந்தநாளுக்கு, அரசியல்வாதிகளின் வருகைக்கு ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், கேரளாவில் ஒரு மாணவர் வைத்த ஃப்ளெக்ஸ் போர்டு, அந்த மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சரையே கவர்ந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக, மாணவர் ஒருவர் தனக்குத் தானே வாழ்த்து தெரிவித்து ஃப்ளெக்ஸ் போர்டு வைத்துள்ளார்.
மாணவனின் இந்தச் செயலைக் கண்டு ஆச்சர்யப்பட்ட கேரளாவின் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், அந்த மாணவர் வைத்திருந்த ஃப்ளெக்ஸ் போர்டின் போட்டோவை பதிவிட்டு, வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
``கொடுமோனைச் சேர்ந்த ஓமனக்குட்டன் மற்றும் தீபாவின் மகனான ஜிஷ்ணு அலியாஸ் குஞ்ஜாக்கு (jishnu alias kunjakku) பற்றிய செய்திகளைப் பார்த்தேன்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவைக் கொண்டாடும் விதமாக அங்காடிக்கல்லுக்கு தெற்கே உள்ள மணக்காடு தேவி கோயில் அருகே, தனியாக ஃப்ளெக்ஸ் போர்டை வைத்துள்ளார் ஜிஷ்ணு. அந்த ஃப்ளெக்ஸில் ``வரலாறு சிலருக்கு வழிவிடும்" எனப் பதிவிட்டு இருந்தார். அவர் பதிவிட்டது போல நடக்கட்டும். வாழ்க்கைத் தேர்விலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என, மலையாளத்தில் பதிவிட்டுள்ளார், கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி.

கேரளாவில், 2022-ம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 31-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை நடைபெற்றன. இந்த வருடம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை மொத்தம் 4,26,469 மாணவர்கள் எழுதினார்கள். இத்தேர்வுக்கான முடிவுகள், ஜூன் 15-ம் தேதி வெளியாகின. அவர்களில் 4,23,303 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.