சமூகம்
Published:Updated:

“மாணவர்கள் இயந்திரங்களா?”

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

இப்போது வேண்டாம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு...

கொரோனா தொற்றின் தீவிரம் குறையாத சூழலில் ‘வரும் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும்’ என்கிற தமிழக அரசின் முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

“மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊரடங்கு தளர்த்தப்படா விட்டால், மாணவர்களின் போக்குவரத்து வசதி குறித்து மே மூன்றாவது வாரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தக்கோரி பெற்றோர்களைத் துன்புறுத்தக் கூடாது. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, பத்து கல்லூரிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். ஆன்லைன் வகுப்புகள் ஏற்படுத்தப்படும்” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆனால், இவ்வளவு நெருக்கடியான நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த, கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “மாணவர்கள், 50 நாள்களுக்கும் மேலாக வீடுகளில் அடைபட்டுள்ளனர். மலைக்கிராமங்களில் இருக்கும் மாணவர்கள், தெருவில் வசிப்பவர்கள், விளிம்புநிலை தொழிலாளர்களின் குழந்தைகள் எல்லோராலும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை எப்படி எழுத முடியும்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் உள்ளன. அவர்கள் எப்படி இருக்கின்றனர், அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைத்ததா, அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது, வீட்டு நிலவரம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு சிந்தித்துப் பார்க்கவில்லை.

ஏப்ரல் 15-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு வழிகாட்டுதலைக் கொடுத் துள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளது. அந்த வழிகாட்டுதல் நடைமுறையில் உள்ளபோது ஜூன் 1-ம் தேதி தேர்வு நடத்துவது எப்படி சாத்தியம்? 10-ம் வகுப்புத் தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்றால், பள்ளிகள் திறக்கலாம் என்ற சூழல் உருவான பிறகு பள்ளிளைத் திறந்து 15 வேலை நாள்கள் வகுப்பு நடத்திய பிறகே தேர்வு நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கிடைக்கும். அவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா, தேர்வு எழுத மனதளவில் தயாராக உள்ளனரா என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவரும்.

ஏனென்றால்,

மலைக்கிராமத்தில் வசிக்கக்கூடிய குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் தோட்டத் தொழிலுக்கும் காட்டு வேலைகளுக்கும் சென்றுள்ளனர்.

அந்தக் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன், தேர்வு எழுதும் மனநிலையில் இருக்கின்றனரா என மதிப்பிட வேண்டியது மிகவும் அவசியம். ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு விடுபட்டுள்ள ஒரு தேர்வையும், அவர்களுக்கு ஐந்து பாடவேளைகள் நடத்திய பிறகே நடத்த வேண்டும்.

மாணவர்கள்
மாணவர்கள்

இப்போதைய சூழலில், ‘சுமார் 10 லட்சம் குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கான பாதுகாப்பான சூழல் உள்ளது. தேர்வு நடத்தலாம்’ என உத்தரவாதம் அளிக்க தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையும் பொது சுகாதார இயக்ககமும் தயாராக உள்ளனவா? பொது சுகாதாரத் துறை இயக்குநரும், பேரிடர் மேலாண்மை ஆணையரும் இதை அறிவிப்பார்களா? அசாதாரணமான சூழலின் தாக்கம் இல்லாமல் பாடப்புத்தகங்களை படித்து தேர்வு எழுத மாணவர்கள் என்ன இயந்திரங்களா? வறியவர்களுக்கு அரசு அளித்த 1,000 ரூபாயில் அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

‘நிறைவகம்’ குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவரான பள்ளி ஆசிரியர் ப்ரியசகியிடம் பேசினோம். “ஊரடங்கில் ஆன்லைன் வகுப்புகள் அமையப்பெற்ற குழந்தைகளுக்கு வேண்டுமானால், அரசின் அறிவிப்பு சாதகமாக இருக்கலாம். விளிம்புநிலை மக்களின் குழந்தைகளைப் பற்றியும் அரசு சிந்தித்துப்பார்க்க வேண்டும். வருமானமற்ற பெற்றோர்களின் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் வலுவற்று இருப்பர். அசாதாரண சூழலால் 50 நாள்களாக பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கு, மனதளவில் அவர்களின் இயல்பு வாழ்க்கை தடைப்பட்டிருக்கும். இந்தச் சூழலில் குழந்தைகள் தேர்வு எழுதினால் அது அவர்களை மேலும் மனச்சிக்கலில் ஆழ்த்தும். அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து இயல்பான சூழலில் சில நாள்கள் வகுப்பு நடத்தி, தேர்வுகளை நடத்துவதே குழந்தைகளுக்கு நன்மை தரும். இல்லையென்றால், இந்தத் தேர்வுகள் அவர்களின் மனநலத்தை மேலும் சிக்கலாக்கும்” என்றார்.

கல்வி அவசியம்தான். ஆனால், அது நம் குழந்தைகளின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களை வதைப்பதாக இருக்கக் கூடாது.