Published:Updated:

இன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும்? ஓர் விளக்கம்! #DoubtOfCommonMan

International School
News
International School

சில சி.பி.எஸ்.இ பள்ளிகளும் சர்வதேசப் பள்ளி என்று செயல்படுவதைப் பார்த்திருப்போம். அங்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பின்பற்றப்படும்.

Published:Updated:

இன்டர்நேஷனல் பள்ளிகளில் எந்தப் பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும்? ஓர் விளக்கம்! #DoubtOfCommonMan

சில சி.பி.எஸ்.இ பள்ளிகளும் சர்வதேசப் பள்ளி என்று செயல்படுவதைப் பார்த்திருப்போம். அங்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பின்பற்றப்படும்.

International School
News
International School
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "சர்வதேசப் பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ உள்ளிட்ட மற்ற பள்ளிகளுக்கும் இருக்கும் வேறுபாடு என்ன?” என வாசகர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்வியையொட்டி எழுதப்பட்ட கட்டுரை இது.
DoubtOfCommonMan
DoubtOfCommonMan

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர், பெற்றோர்களின் செலவுப் பட்டியலில் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்புக்குதான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால், தற்போது அந்த டிரெண்ட் பள்ளிக்கல்வி பக்கம் வந்திருக்கிறது என்று சொல்லலாம். அதாவது, பெற்றோர்கள் பிள்ளைகளின் பள்ளிப் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்து அது தொடர்பான தகவல்களைத் தேடுகின்றனர். இந்த நிலையில் இன்டர்நேஷனல் ஸ்கூல் பக்கமும் பெற்றோர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஆனால், இந்த சர்வதேசப் பள்ளிகள் தொடர்பான தகவல்கள் பெரும்பாலான இடங்களில் பெற்றோர்களுக்குக் கிடைப்பதில்லை.

International School
International School

இது தொடர்பாக `கேம்பஸ் கே’ சர்வதேசப் பள்ளியின் இயக்குநர் யோகினிடம் பேசினோம், "சர்வதேசப் பள்ளியின் பாடத்திட்டங்களுக்கும் மற்ற பள்ளியின் பாடத்திட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. சர்வதேசப் பள்ளியில் புரிந்து படிக்கும் வண்ணம் பாடத்திட்டங்களும் கேள்வி பதில்களும் இருக்கும். மற்ற பாடத்திட்டங்கள் போட்டித் தேர்வை மனதில் கொண்டு மனப்பாடம் செய்து பதிலளிக்கும் வகையில் இருக்கும். சர்வதேசப் பள்ளியின் பாடத்திட்டம் புரிந்து, கற்றதை செயல்படுத்தும் விதமாக இருக்கும். பாடத்திட்டங்களும் (curriculum) மற்ற பள்ளிகளில் இருந்து வேறுபடும். அதாவது, சர்வதேசப் பள்ளிகளில் பெரும்பாலும் கேம்பிரிட்ஜ் அல்லது ஐ.பி ஆகிய பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும். தேர்வுகளுக்கான கேள்விகளையும் அவர்கள்தாம் தயார் செய்வார்கள். ஒரு பள்ளியில் உள்ள விடைத்தாள்கள் சீல் செய்யப்பட்டு தேர்வு நடத்தும் போர்டுகள் மூலம் வேறு மையங்களில் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

சர்வதேசப் பள்ளிகளில் பெரும்பாலும் கிரேடு சிஸ்டம்தான் பின்பற்றப்படும். ஒவ்வொரு போர்டுக்கும் இது மாறும். அது அந்தப் பள்ளிகள் பின்பற்றும் போர்டுகளைச் சார்ந்தது. இந்தியாவில் சர்வதேசப் பள்ளிகளுக்கு என்று தனியாக வரையறை எதுவும் இல்லை.

சில சி.பி.எஸ்.இ பள்ளிகளும் சர்வதேசப் பள்ளி என்று செயல்படுவதைப் பார்த்திருப்போம். அங்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பின்பற்றப்படும். அவர்கள் பள்ளியில் இருக்கும் கட்டமைப்பு, வசதிகள் அடிப்படையில் சர்வதேசப் பள்ளி எனப் போட்டிருக்கலாம். ஆனால், அங்கு சர்வதேசப் பாடத்திட்டங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தியா முழுவதும் பின்பற்றப்படும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம்தான் அங்கும் இருக்கும். சர்வதேச பள்ளி என்றால், பெயரில் மட்டுமே சர்வதேசம் என்பது கிடையாது. மாணவர்களை சர்வதேச தரத்தில் தயார் செய்வதுதான் இந்தப் பள்ளிகளின் முதன்மையான பணி.

யோகின்
யோகின்

உதாரணமாக, மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் நடந்து கொண்டு இருக்கும் மாற்றங்கள் தொடர்பாக புராஜெக்ட் செய்யச் சொல்வோம். சில புராஜெக்ட்டுகள் தனியாகச் செய்ய வேண்டும். சில புராஜெக்ட்டுகள் குழுவாகச் செய்ய வேண்டும். செய்து முடித்த பின்னர், அவர்கள் அதை பிரசன்டேஷன் செய்ய வேண்டும். படிப்பைத் தாண்டி பல்வேறு விஷயங்களில் அவர்களை ஈடுபடுத்துவோம். வேலை செய்யும் இடங்கள் இருக்கும் அமைப்பை ஏற்படுத்தி, அந்த அனுபவத்தை நேரடியாக வழங்குவோம். அப்போது பணியிடங்களுக்குச் செல்லும்போது இவர்களுக்கு எதுவும் புதிதாக இருக்காது. சர்வதேசப் பள்ளிகளில் ஒருநாள், மாணவர்கள் பாடம் படிப்பது என்பது மட்டுமல்லாமல், இது போன்ற புராஜெக்ட் செய்வதிலும் நேரத்தை செலவு செய்வார்கள். தியரி வகுப்புகளை விடவும் பிராக்டிகல் வகுப்பு அதிகமாக இருக்கும்.

தேர்வுகளுக்குப் பின்னர் கிரேடு முறையில் மதிப்பெண் பட்டியல் வெளியாகும். இந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்காக அந்தந்தக் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு போர்டு வழங்கும் கிரேடுகளை மதிப்பெண்களாகக் கணக்கில் கொள்வார்கள். அதாவது, கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் ஏ கிரேடு எடுத்தால் அதைக் குறிப்பிட்ட மதிப்பெண்களாகக் கருத்தில் கொள்ளப்படும். இந்த மதிப்பெண்கள் ஒவ்வொரு போர்டுக்கும் வேறுபடும். கேம்பிரிட்ஜ் பாடத்திட்டங்களை இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்றுக்கொள்கிறது. ஐ.பி பாடத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இன்னும் ஏற்கவில்லை. ஆனாலும், உலக கல்வி நிறுவனங்களில் அது ஏற்றுக்கொள்ளப்படும். இந்த விஷயங்களைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

சர்வதேசப் பள்ளிகளின் பாடத்திட்டம் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் பாடத்திட்டமாக இருக்கும். சி.பி.எஸ்.இ மற்றும் மற்ற பாடத்திட்டங்கள் இந்தியாவிலும் மற்ற சில நாடுகளிலும் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதிகம் பிராக்டிகல் படிப்பை சர்வதேசப் பள்ளிகள் முன்னிலைப்படுத்தும். மாணவர்களுக்கான கட்டணங்களை ஒப்பிடும்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இருக்கும் கட்டணங்களைவிட சராசரியாக 25 முதல் 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும்” என்றார் விரிவாக!

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man