பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அவமானங்கள் தாங்கி வளர்ந்தேன்; தாண்டி வளர்வேன்!”

பாத்தியம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாத்தியம்மாள்

எங்க வீட்டுல என்னையும் சேர்த்து அஞ்சு புள்ளைங்க. சாப்பாட்டுக்கே கஷ்டம்.

“எங்களோட படிப்பு எங்களோட அடையாளமா மாறணும். சாப்பாடும் தங்குற இடமும் கிடைச்சா போதும், வாழ்க்கையை வாழ்ந்திடலாம்னு தலைமுறை தலைமுறையா, எழுத்து வாசனை இல்லாம இருந்துட்டோம். உடுக்கைச் சத்தம், பூம்பூம் மாடுன்னு எங்களோட உலகம் ரொம்பச் சின்னது. ஆனால் சமுதாயத்தில் எங்களுக்குன்னு எந்த அடையாளமும் இல்லையேங்கிற ஏக்கம் மனசுக்குள்ள இருந்துட்டே இருக்கும். இந்த நிலைமை மாற எங்களுக்குக் கிடைச்சிருக்கிற ஆயுதம்தான் படிப்பு” மாற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை விதைத்துப் பேசுகிறார் பாத்தியம்மாள். துணிச்சலான உடல்மொழி, யதார்த்தத்தை யோசிக்க வைக்கும் நிதானமான பேச்சு என சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் உரையாடல்.

திண்டிவனத்திலிருந்து 20 கிலோமீட்டர், இந்திராநகரில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தைச் சேர்ந்த பெண் பாத்தியம்மாள். சிறுவயதிலிருந்தே சாதிய ரீதியிலான பல புறக்கணிப்புகளுக்கு உள்ளானவர். தற்போது அவர் வசிக்கும் ஆதியன் பழங்குடி குடியிருப்பிலிருந்து முதல் நபராகக் கல்லூரிக்குச் சென்றுள்ளார். ஆடுகளுடனும் நாய்களுடனும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கூட்டத்திடையே அவர்களின் நம்பிக்கையாய் அமர்ந்திருந்த பாத்தியம்மாளைச் சந்தித்தேன்.

பாத்தியம்மாள்
பாத்தியம்மாள்

“படிப்புங்கிறது என்னோட கனவு என்பதைத்தாண்டி, எங்க மக்களோட எதிர்காலம். அவமானப்பட்டால்தான் மாற்றம் நிகழும்னா எங்க ஜனங்கள் சார்பாக எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொள்ள நான் தயார். நமக்கான உரிமையா கிடைக்கலைங்கிறப்போ,போராடி எடுத்துக்க ஆரம்பிக்கணும். என்னோட போராட்டம் தான் இப்போ என்னோட கல்லூரி வாழ்க்கையா மாறியிருக்கு” என்ற பாத்தியம்மாளின் பேச்சில் அழுத்தத்தின் உறுதி.

“தெருத்தெருவா பூம்பூம் மாடுகளோடு போயி, உறுமி அடிச்சு யாசகம் கேக்கிறதுதான் எங்க குலத்தொழில். இப்போ கூலி வேலைகளுக்கும் போக ஆரம்பிச்சிருக்கோம். எங்க குடியிருப்பில் ஐம்பது வீடுகள் இருக்கு. இங்க இருக்கும் எல்லோருக்கும் படிப்புங்கிறது அவங்க வாழ்நாள் லட்சியம். ஆனால் இங்க இருக்கும் நிறைய பேருக்கு படிப்பு எட்டாக்கனிதான். அதுக்காகப் போராடணும், அசிங்கங்களைத் துடைச்சு எறியணும். எல்லாத்தையும் கடந்து வந்தா சாதிச்சான்றிதழ் முட்டுக்கட்டையா மாறி நிக்கும். போராடிப் போராடித் திராணியில்லாம, படிக்குற ஆசையையே விட்டுட்டு, கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சிருவாங்க. அந்த வலிகளையெல்லாம் வார்த்தைகளில் சொல்லிற முடியாது.

எங்க வீட்டுல என்னையும் சேர்த்து அஞ்சு புள்ளைங்க. சாப்பாட்டுக்கே கஷ்டம். சின்ன வயசுல அப்பா கூட நானும் யாசகம் கேட்டுப் போயிருக்கேன். குடிக்கத் தண்ணி கேட்டாகூட, கொட்டாங்குச்சியில் கொண்டு வந்து விரல் படாமக் கொடுத்துட்டுப் போவாங்க. மனசு வலிக்கும். படிப்பால் மட்டும்தான் இந்த நிலைமையை மாத்த முடியும்னு பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சேன். ஆனால் நிறைய சாதியப் பாகுபாடுகள், கேலி, கிண்டல்கள்னு படிப்பையே வெறுக்குற அளவுக்கு அவமானப்பட்டிருக்கேன்” - கலங்கிய கண்களுடன் சில நிமிடங்கள் மௌனிக்கிறார்.

“என் தங்கச்சிக்கு டாக்டர் ஆகணுங்கிற ஆசை. பள்ளிக்கூடத்துக்குப் போனா ‘யாசகம் கேட்குற ஆளுங்க’ன்னு கிண்டல் பண்றாங்கன்னு பள்ளிக்கூடத்துக்கே போக மாட்டேன்னு சொல்லி, படிப்பைப் பாதியில் நிறுத்திருச்சு. கனவு காணக்கூட உயர் சாதியில் பிறக்கணும்போல. எங்க குடியிருப்பில் இருக்கும் நிறைய பேருக்கு இதே நிலைமைதான். பல போராட்டங்களுக்கு மத்தியில்தான் இப்போ நான் கல்லூரியில் காலடி எடுத்து வெச்சிருக்கேன். இதுவே எங்களோட வெற்றியாகத்தான் எங்கள் ஜனங்க கொண்டாடுறாங்க. இன்னும் சொல்லணும்னா, என்னை தேவதையா பார்க்குறாங்க.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என் கூட அஞ்சு புள்ளைங்க எங்க குடியிருப்பில் இருந்து படிக்கப் போனோம். பள்ளிக்கூடம் ஆறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்துச்சு. வீட்டுல அம்மா அப்பா வேலைக்குப் போயிருவாங்க, தம்பி தங்கச்சிகளுக்கு சாப்பாடு செஞ்சு வெச்சுட்டு, ஆறு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கூடம் போவோம். பள்ளிக்கூடத்துல மத்த புள்ளைங்களோடு எங்களோட மார்க்கை ஒப்பிடுவாங்க. என்ன படிச்சாலும் இவ்ளோ மார்க்தான் எடுப்பீங்கன்னு சொல்லுவாங்க. அடிப்படை வசதிகூட இல்லாத எங்களை மத்தவங்களோடு ஒப்பிடுறது நியாமே இல்ல. ஆனா அதைச் சொல்லக்கூடிய இடத்துலயும் நாங்க இல்ல. எங்க குடியிருப்பிலிருந்து படிக்கப் போனதுல, நான் ஒருத்திதான் பத்தாம் வகுப்பு பாஸ் ஆனேன். என் அண்ணன் ப்ளஸ் டூ வரை படிச்சிருக்கிறதால என்னையும் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் அனுப்புனாங்க. ப்ளஸ் டூ ல 50 சதவிகிதம் மார்க் எடுத்து பாஸ் ஆயிட்டேன்.

பாத்தியம்மாள்
பாத்தியம்மாள்

காலேஜ் போறேன்னு வீட்டில் சொன்னப்போ அவ்வளவு எதிர்ப்பு. எதிர்ப்பைத் தாண்டி பயம்னுகூடச் சொல்லலாம். ஒரு வாரம் பட்டினி கிடந்தேன். தற்கொலை மனநிலைலகூட இருந்தேன். எனக்குப் படிப்பு வேணும். படிப்புக்காக எவ்வளவு போராட்டத்தையும் எதிர் கொள்ளலாம்னு தோணுச்சு. ஒரு வார போராட்டத்துக்கு அப்புறம் எங்க அப்பா என்ன கூப்பிட்டு “என் மவ காலேஜ் போயி படிக்குதுன்னா எனக்குப் பெருமைதான். ஆனா அவ்வளவு காசு பணத்துக்கு எங்க போறது”ன்னு கேட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் ஒரு தொண்டு நிறுவனத்தில் உதவி கேட்டு காலேஜ் சேர்ந்தேன். இப்போ பி.ஏ ஆங்கில இலக்கியம் படிச்சுட்டிருக்கேன்.

தமிழ் எழுதப் படிக்கவே தெரியாத மக்கள் கூட்டத்தில் இருக்கும் நான், எங்க ஜனங்கள அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணுங்கி றதுக்காகவே ஆங்கில இலக்கியத்தைத் தேர்வு செஞ்சேன். ஆரம்பத்தில் வாசிக்கவே தடுமாறுவேன். நான் சோர்ந்துட்டா, என்னைச் சுத்தி இருக்கிற மத்த பசங்களும் நம்பிக்கையை இழந்துருவாங்கன்னு தோணுச்சு. கிடைக்குற நேரமெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். கண்ணாடி முன்னாடி நின்னு பேசிப்பார்ப்பேன். ஆங்கிலம் பேசப்பேச சிறகு முளைச்ச மாதிரி இருந்துச்சு. அதே நம்பிக்கையில் முதல் வருஷம் படிப்பை முடிக்கப்போறேன்.

“அவமானங்கள் தாங்கி வளர்ந்தேன்; தாண்டி வளர்வேன்!”

கல்லூரி சேர்ந்த புதுசுல, கூட படிக்கிற புள்ளைங்க எல்லோரும் கலர் கலரா டிரஸ் போட்டு வருவாங்க. படிப்பே போராட்டமா இருந்த எனக்கு, டிரஸ் பத்தியெல்லாம் யோசிக்கத் தோணல, என்கிட்ட இருந்த ரெண்டு டிரஸ்ஸை துவைச்சு மாத்தி மாத்தி போட்டுட்டுப் போவேன். கூட படிக்கிறவங்க கிண்டல் பண்ணியிருக்காங்க. சில நேரம் அழுகை வரும். ஆனா, நான் என் மக்களோட அடையாளத்தை மாத்த 100 பேருடைய நம்பிக்கையாக வந்திருக்கேன்னு என்னை நானே சமாதானப்படுத்திப்பேன். என் கூட படிக்கிறவங்கள எங்க குடிலுக்கு அழைச்சுட்டுப் போயி, நான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வர்றேன்னு ஒரு முறை காண்பிச்சேன். இப்போ யாரும் என்னைக் கிண்டல் பண்றது இல்ல.

தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்து திண்டிவனம் அரசுக்கல்லூரியில் படிச்சுட்டி ருக்கேன். காலேஜ் முடிச்சு வந்ததும் எங்க குடியிருப்பில் இருக்கிற பசங்களுக்கு டியூசன் எடுப்பேன். இந்தப் போராட்டம் இதோட முடிஞ்சிடாது. படிப்பைப் பாதியில் விட்ட என் பிரெண்ட்ஸ்கூட டூட்டோரியல் மூலமா படிக்கத் தயாராகிட்டிருக்காங்க. பிச்சை கேக்குற நீயெல்லாம் படிச்சு என்ன பண்ணப் போறேன்னு என் காதுபடப் பேசுன எல்லாரும் வாயடைச்சுப் போற மாதிரி, எங்க ஜனங்களை மரியாதைக்குரிய மனுசங்களா மாத்துவேன்.”

உங்கள் கனவுகள் நனவாகட்டும்; கல்வி கரைசேர்க்கட்டும் பாத்தியம்மாள்!