Published:Updated:

`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்!' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி

மோனிஷா
News
மோனிஷா

''நீட் எக்ஸாம்னால மோனிஷாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்காம போயிடுமோனு ஊர் மக்கள் கவலைப்பட்டோம். இப்போ ஊரே சந்தோஷத்துல இருக்கு!"

Published:Updated:

`எங்க வீட்டுப்புள்ள இனி டாக்டர்!' - கிராமமே கொண்டாடும் அரசுப் பள்ளி மாணவி

''நீட் எக்ஸாம்னால மோனிஷாவுக்கு மெடிக்கல் சீட் கிடைக்காம போயிடுமோனு ஊர் மக்கள் கவலைப்பட்டோம். இப்போ ஊரே சந்தோஷத்துல இருக்கு!"

மோனிஷா
News
மோனிஷா

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள கோவிந்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி மோனிஷா. ப்ளஸ் டூ தேர்விலும் நீட் தேர்விலும் திருவாரூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் இவர் முதலிடம் பிடித்தார். ஆனாலும்கூட நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர்வது கேள்விக்குறியானது. இந்நிலையில்தான் தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5% இட ஒதுக்கீட்டில், மோனிஷாவுக்கு மருத்துவப் படிப்பு கனவு நனவாகியுள்ளது.

மோனிஷா மட்டுமல்லாது, கோவிந்த நத்தம் கிராமமே இப்போது பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. தங்களது கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவி, நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கும் மகிழ்ச்சியிலும் பெருமையிலும், மோனிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் மக்கள்.

மோனிஷா
மோனிஷா

மருத்துவப் படிப்பு பயில வேண்டும் என்ற பெரும் கனவில் இருப்பவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன்புவரை, தமிழ்நாட்டில் ஏராளமான கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவராக முடிந்தது. ஆனால், தற்போது இதுபோன்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து, இவர்களின் மருத்துவக் கனவை சிதைப்பதாகப் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.

ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும்கூட, கிராமப்புற ஏழை எளிய மாணவர்களால் அதிகளவில் செலவு செய்து நீட் தேர்வுக்கான கோச்சிங் செல்ல முடிவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு ஒருவேளை நீட் தேர்வில் வெற்றி பெற்றாலுமேகூட, ரேங்க் அடிப்படையில் இவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை.

இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இந்த அரசாணைதான், கோவிந்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி மோனிஷாவின் மருத்துவப் படிப்பு பயணத்துக்கு ஒளியேற்றியுள்ளது. நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசினார் மோனிஷா.

``நாங்க சாதாரண விவசாயக் குடும்பம். நான் திருமக்கோட்டை பொன்னுக்கண்ணு வேதாம்பாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில படிச்சேன். பத்தாவதுல 500-க்கு 483 மார்க். ப்ளஸ்-டூல 600-க்கு 557 மார்க். மாவட்ட அளவுல அரசுப் பள்ளி மாணவர்கள்ல நான் முதலிடம். எம்.பி.பி.எஸ் படிக்கணும்ங்கிற என்னோட கனவு. ஆனா, நீட் கோச்சிங் கிளாஸ் போக எனக்கு வசதியில்ல. என்னோட மேக்ஸ் சார், 5,000 ரூபாய் பணம் கட்டி கோச்சிங் கிளாஸ் சேர்த்துவிட்டார். கொரோனா என்பதால, நேர்ல கிளாஸ் போக முடியலை. ஆன்லைன்லதான் கிளாஸ் அட்டண்ட் பண்ணினேன்.

மோனிஷா
மோனிஷா

எங்க அப்பா விவசாயி, அம்மாவுக்குக் கொஞ்சம் கால் சுகமில்ல. அதனால, வீட்டுல ஆடு, மாடுகளைப் பார்த்துக்கிட்டு, சாயந்தரம் 6 மணிக்கு மேல படிக்க ஆரம்பிப்பேன். நீட் எக்ஸாம்ல, 257 மார்க் வாங்கினேன். எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காதுனு தெரிஞ்சுபோனதால, வேற ஏதாவது படிக்கலாம்னு முடிவெடுத்திருந்தேன். ஆனா, தமிழக அரசு கொண்டு வந்திருக்குற இட ஒதுக்கீட்டுல இப்போ எனக்கு சீட் கிடைச்சிருக்கு. நீட் எக்ஸாம்ல அரசுப்பள்ளி மாணவர்கள்ல 37-வது இடம் வாங்கின நான், கவுன்சலிங்ல திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்திருக்கேன். ஊர் மக்கள் என்னைத் தேடி வந்து வாழ்த்துச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.

மோனிஷாவுக்கு மெடிக்கல் சீட் கிடைத்திருப்பதை இப்பகுதி மக்கள் மிகுந்த நெகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய கண்ணன் என்பவர், ``வறுமையான சூழ்நிலையிலயும்கூட, இந்தப் பொண்ணு சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்லா படிக்கும். இது படிச்சு பெரிய ஆளா வரும்னு ஊர்மக்கள் எதிர்பார்த்தோம். ப்ளஸ் டூல மாவட்ட அளவுல அரசுப் பள்ளி மாணவர்கள்ல முதலிடம் பிடிச்சும், நீட் எக்ஸாமால மெடிக்கல் சீட் கிடைக்காம போயிடுமோன்னு ஊரே கவலைப்பட்டுச்சு. இப்போ எல்லோரும் எங்க வீட்டுப் புள்ள மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்துட்ட உற்சாகத்துல இருக்கோம். ஊர் மக்கள் எல்லாரும் மோனிஷாவுக்கு மாலை போட்டு வாழ்த்தினோம்” என்றார் பெருமிதத்துடன்.

கிராமத்துக் கனவுகள் நனவாகும் தருணம் நெகிழ்வானது!