Published:Updated:

அப்பாவின் தவறான முடிவால் படிப்பு நிறுத்தப்பட்ட மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்!

மாணவியுடன் தாய் வீரம்மாள்
News
மாணவியுடன் தாய் வீரம்மாள்

அப்பாவின் தவறான முடிவால் படிப்பை பாதியில் நிறுத்தப்பட்ட மாணவிக்கு விகடன் நீட்டிய உதவிக்கரம்.

Published:Updated:

அப்பாவின் தவறான முடிவால் படிப்பு நிறுத்தப்பட்ட மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விகடன்!

அப்பாவின் தவறான முடிவால் படிப்பை பாதியில் நிறுத்தப்பட்ட மாணவிக்கு விகடன் நீட்டிய உதவிக்கரம்.

மாணவியுடன் தாய் வீரம்மாள்
News
மாணவியுடன் தாய் வீரம்மாள்

குடும்பச் சூழலால் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டு வேலைக்கு அனுப்ப முடிவு செய்ததால், உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று, நீண்ட மருத்துவப் போராட்டங்களின் விளைவாகக் காப்பாற்றப்பட்டுள்ளார் ஒரு மாணவி. அவரின் கனவுகளுக்கு விகடன் உயிர் கொடுத்துள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள வீ.தவிட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் மூத்த மகன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறார். மகள் நிரஞ்சனா (மாணவி குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலம் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) துறையூருக்கு அருகிலுள்ள கண்ணனூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார்.

மாணவியுடன் தாய் வீரம்மாள்
மாணவியுடன் தாய் வீரம்மாள்

கடந்த ஜூன் முதல் வாரம், குடும்பத்தகராறு காரணமாக, நிரஞ்சனாவை மேலும் படிக்க வைக்க வேண்டாம் என முடிவெடுத்த சுப்பையா, பள்ளிக்குச் சென்று மகளை, வேறு பள்ளியில் சேர்க்கப் போவதாகக் கூறி மாற்றுச்சான்றிதழ் கேட்டார். ஆசிரியர்கள் எவ்வளவோ கூறியும், அவர் கேட்க மறுத்துவிட்டதால் வேறு வழியில்லாமல் பள்ளி நிர்வாகம் மாற்றுச்சான்றிதழைக் கொடுத்துவிட்டது.

படிக்க முடியாத உலகில் வாழ விருப்பமில்லாமல், செத்துப் போக முடிவு செய்து எலிமருந்தைக் குடித்துவிட்டேன்.
மாணவி
கல்வி
கல்வி

அதன் பிறகு நடந்ததை விளக்கினார் நிரஞ்சனா,

“இன்னொரு பள்ளியில் படிக்க வைப்பதாக அப்பா கூறியதை நம்பி நானும் கையெழுத்துப் போட்டு கொடுத்தேன். டி.சி வாங்கியதும் அப்பா, இனி நீ படிக்க வேண்டாம். கோயம்புத்தூரில் மில் வேலைக்குச் சேர்த்துவிடுகிறேன் என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், 'தயவு செய்து என்னைப் படிக்க வைங்கப்பா' எனக் கெஞ்சினேன். அதற்கு அவர் மறுத்ததுடன் சத்தம் போட்டார். நானும் சாப்பிடாமல் அடம்பிடித்துக் கிடந்தேன். படிக்க முடியாத உலகில் வாழ விருப்பமில்லாமல், செத்துப் போக முடிவு செய்து எலிமருந்தைக் குடித்துவிட்டேன். உயிருக்குப் போராடிய என்னை, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்கள். அதன்பிறகுதான் அப்பா மனமிறங்கி, நான் தொடர்ந்து படிக்கச் சம்மதித்தார்.

சில பள்ளிகளில் நான் படித்த பள்ளிக்கு போன் செய்து விசாரித்துவிட்டு, என்னைப் பள்ளியில் சேர்க்கவே முடியாது எனக் கறாராகப் பேசினார்கள்.

ஆனால், பல இடங்களில் முயற்சி செய்துவிட்டோம். அட்மிஷன் கிடைக்கவில்லை. சில பள்ளிகளில் இரண்டு மாதம் பாடம் நடத்திட்டோம். அதுவும் 12-ம் வகுப்பு என்பதால் பாடங்களைத் தொடர்ந்து படிப்பது கஷ்டம் என்று, என்னைப் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். மேலும், சில பள்ளிகளில் நான் படித்த பள்ளிக்கு போன் செய்து விசாரித்துவிட்டு, என்னைப் பள்ளியில் சேர்க்கவே முடியாது எனக் கறாராகப் பேசினார்கள். அப்பா அவசரப்பட்டு மாற்றுச்சான்றிதழ் வாங்கியதற்காக, என் படிப்பு வீணாகிறது. என்னோடு படிக்கும் பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூடம் போய்கொண்டிருக்க, நான் மட்டும் வீட்டில் இருப்பதற்குப் பதில் நான் செத்தே போயிருக்கலாம்'னு தோணுது. இனி நான் படிக்கவே முடியாதா?” எனக் கதறி அழுதார்.

நிரஞ்சனாவின் தாய் வீரம்மாள் பேசுகையில், “இவ படிப்பதற்கு உயிரைக் கொடுக்கக்கூட செய்வா’னு நாங்க நினைச்சுப் பார்க்கவே இல்ல. அவர் அவசரப்பட்டு டி.சி.யை வாங்கியது தப்புதான். தவற்றை உணர்ந்துதான் மீண்டும் பிள்ளையைப் படிக்க வைக்க நினைக்கிறார். ஆனால், பள்ளியில் சேர்க்க மாட்டேங்குறாங்க. என்பதால் மகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்காகத் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு கொடுத்தோம். மனுவை வாங்கிக்கொண்ட அதிகாரிகள் ஒரு வாரம் கழித்து வாங்க’னு சொன்னாங்க.

விசாரணையில்  மாணவி மற்றும் தாய் வீரம்மாள்
விசாரணையில் மாணவி மற்றும் தாய் வீரம்மாள்

அவங்க சொன்ன தேதியில் போனால், வேறு யாரையோ போய் பார்க்கச் சொல்கிறார்கள். நாங்கள், துறையூரிலிருந்து திருச்சிக்கே வந்ததில்லை என்பதால் திருச்சியில் உள்ள இடங்களுக்குப் போகவும் தெரியல. இப்படியே இழுத்தடித்தால், என் மகள் இந்த வருடம் முழுக்க படிக்க முடியாத சூழல் ஆகி, வேலைக்குப் போகும் நிலைக்குத் தள்ளப்படுவார். அவரைப் பள்ளியில் சேர்க்க உதவி செய்யுங்கள்” எனக் கலங்கியபடியே கேட்டார்.

நிரஞ்சனாவின் சூழலை உணர்ந்த நாம், அவருக்கு உதவ முடிவு செய்து, மாவட்ட கல்வி அலுவலர் சாந்தியைத் தொடர்புகொண்டு, விளக்கிக் கூறினோம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், 'மாணவி தொடர்ந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக' உறுதியளித்தார். ஆனால், அவர் வெளியூரில் இருப்பதாகத் தெரியவரவே, மாவட்ட கல்வி அலுவலரின் ஆலோசனை மற்றும் 'சைல்டு லைன்' உதவியுடன் மாணவி நிரஞ்சனாவை உடனடியாக பள்ளியில் சேர்ப்பதற்கு அடுத்த கட்ட முயற்சிகளை எடுத்தோம்.

அப்பாவை எதுவும் செய்துவிடாதீர்கள். அப்பா எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், என்னை மீண்டும் பள்ளியில் படிக்க உதவி செய்தால் போதும்”
மாணவி

மாணவி நிரஞ்சனா மற்றும் அவரது தாய் வீரம்மாள் ஆகியோரை அழைத்துக்கொண்டு திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக் குழு அதிகாரிகளைச் சந்தித்தோம். அவர்களிடம் நடந்ததை விளக்கியதுடன், மாணவியின் படிப்புக்கு இடையூறுகளைச் சரிசெய்ய வேண்டும் என நாமே புகார் கொடுத்தோம்.

குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரணையில், “அப்பா மதுப்பழக்கம் உடையவர் என்றும், அதனால் அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடுவார். குடும்பச் சண்டை காரணமாக பள்ளியில் சண்டை போட்டு மாற்றுச் சான்றிதழை வாங்கிவிட்டார் என்றும், அதற்காக அப்பாவை எதுவும் செய்துவிடாதீர்கள். அப்பா எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், என்னை மீண்டும் பள்ளியில் படிக்க உதவி செய்தால் போதும்” எனக் கெஞ்சினார் நிரஞ்சனா.

அதையடுத்து அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியரிடம் நடந்ததை விசாரித்தார்கள். நாமும் பள்ளி தலைமையாசிரியர் தண்டபாணியிடம் நடந்ததைக் கூறி பள்ளியில் படிக்க உதவிட கோரிக்கை வைத்தோம்.

அடுத்தடுத்த தொடர் முயற்சியின் பலனாய், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் சிறப்பு உத்தரவின் பேரில், மாணவி நிரஞ்சனா, மீண்டும் அவர் படித்த பள்ளியிலேயே படிப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக நிரஞ்சனா மீண்டும் படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

இறுதியாக, மாணவியின் தந்தை சுப்பையாவிடம், “நிரஞ்சனாவின் கல்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு பேர், அவரின் படிப்புக்காக முயற்சி எடுத்துள்ளார்கள். அவர் படித்தால் உங்களுக்குத்தான் நல்லது. அவர் படிக்கட்டுமே” என விளக்கினோம். அவரும், "அவசரப்பட்டு நான் டிசி வாங்கியது தவறுதான். பிள்ளை மறுபடியும் பள்ளிக்குப் போவதில் சந்தோசம்” என்றார்.

அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த நிரஞ்சனா, "என்ன செய்வது எனக் குழம்பி நின்ற எனக்கு, நான் படித்த பள்ளியிலேயே படிக்க உதவி செய்த விகடனுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. நான் படித்து நல்ல வேலைக்குப் போய் அப்பா அம்மாவை நல்லா பார்த்துக்குவேன். கூடவே என்னைப் போல கஷ்டப்படுகிற பிள்ளைகளுக்கு உதவுவேன்” என நெகிழ்ந்தபடி பள்ளிக்குப் புறப்பட்டார்.

ஏழை மாணவியின் கல்விக்கு உதவிய பெருமிதம் நமக்கு!