
அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒன்பது அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு களுக்கான அடிப்படை இயந்திரப் பொறியியல், வேளாண் அறிவியல், ஆடை வடிவமைப்பு, அலுவலக மேலாண்மை, ஆடிட்டிங் ஆகிய தொழிற்கல்வி (Vocational) பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே மாணவர்களைச் சேர்த்திருந்தாலும் அவர்களை வேறு பாடப்பிரிவுக்கு மாற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நிறுத்தப்பட்டிருக் கின்றன. திண்டுக்கல் உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலும் இது நடந்திருக்கிறது.

ஏற்கெனவே, கடந்த மே மாத இறுதியில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் ரத்துசெய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், 11, 12-ம் வகுப்புகளுக்கான தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் படிப்படியாக மூடப்பட்டுவருவது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., “மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதுபோல, ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டி, பாடப்பிரிவுகளையே மூடுவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது. இதனால் பொருளாதாரம் பாதிப்படையும், வேலைவாய்ப்பு இருந்தும் அதற்கான ஆட்கள் இல்லாத சூழல் உருவாகும்” என்று எச்சரித்திருக்கிறார்.
கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரியோ, ``இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாகவே ஒவ்வொன்றாக தொழிற் கல்வி பாடப்பிரிவுகளை அரசாங்கம் மூடிவருகிறது. ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடத்தை நிரப்பாமல், பாடப்பிரிவையே நீக்குகிறார்கள். இது ஏழை மாணவர்களை நிச்சயம் பாதிக்கும். எல்லா மாணவர்களும் முதலிரண்டு பிரிவுகளை எடுத்து நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்று விட முடியாது. குடும்ப, பொருளாதார சூழ்நிலை களாலும், விருப்பத்தின் அடிப்படையிலும் பல்வேறு மாணவர்கள் தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை அரசாங்கம் மூடினால், அவர்கள் பள்ளிக்கே வர மாட்டார்கள். அவர்களின் மேல்நிலை, கல்லூரிப் படிப்புகள் தடைப்படும்” என்றார்.

இந்தச் சர்ச்சை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் விளக்கம் கேட்டபோது, ``அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அரசிடம் உரிய அனுமதி இல்லாமலேயே நிறைய பள்ளிகள் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை நடத்திவருகின்றன. அரசிடம் அனுமதி பெற்று, அரசாணை வந்த பிறகே நடத்த வேண்டும் என்பதால் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. நிரந்தரமாக மூடும் திட்டம் நிச்சயமாக இல்லை. அதேநேரத்தில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கும் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்காகத்தான் பள்ளிகள் என்ற உணர்வு, எப்போது வரும் நம் பள்ளிக்கல்வித்துறைக்கு?