மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் 10-ம் வகுப்புகளுக்கான மாநில வாரிய (மாத்யமிக்) தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க சில இடங்களில் இணையதள சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது மேற்கு வங்க அரசு.
2019 - 2020 ஆண்டில் தேர்வுகள் தொடங்கிய சில மணிநேரத்தில் வினாத்தாள்கள் கசிந்து மற்ற இடங்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பரவின. இதையடுத்து தற்போது நடக்கவிருக்கும் தேர்வில் இவ்வாறு வினாத்தாள்கள் கசிவதைத் தடுக்க, தேர்வு நடக்கும் சில மணிநேரத்திற்கு சில இடங்களில் மட்டும் இணைய சேவைகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது மேற்கு வங்க அரசு.
இந்த இணைய சேவைகள் நிறுத்தம் மார்ச் 7, 8, 9, 11, 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடக்கும். அதே சமயம், இணைய சேவை அல்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கான சேவைகள் தடையின்றி இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியம் (WBBSE).

இவ்வாறு முன் எச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இணையசேவைகளை தடை செய்வதனால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மேற்கு வங்க இடைநிலைக் கல்வி வாரியத்தின் (WBBSE) தலைவர் கல்யாண்மோய் கங்குலி கூறுகையில், "இதில் வாரியத்திற்கு எந்த பங்கும் இல்லை. இது முற்றிலும் மாநில செயலகத்தால் எடுக்கப்பட்ட நிர்வாக முடிவு. இது முழுக்க முழுக்க தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு" என்று கூறினார்.
மேலும் பல தேர்வு மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். தேர்வு எழுதுபவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களைக் கழிவறை மற்றும் வேறு இடங்களில் மறைத்து வைக்கிறார்கள் என்று புகார்கள் வருவதால், தேர்வு நடக்கும் முதல் 1 மணி நேரம் 15 நிமிடத்திற்கு தேர்வு அறையை விட்டு யாரும் வெளியில் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார் WBBS-யின் தலைவர்.