இந்தி வளர்க்கும் கேந்திரிய வித்யாலயா இருக்கும்போது, தமிழ் வளர்க்கும் நவோதயா பள்ளிகளை மறுப்பது ஏன்?

‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்’ என்று குமரி மகாசபா அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் ஒய்.ஆர்.ஜான்சன். இவர், இந்தியாவின் முதல் நவோதயா பள்ளியின் முன்னாள் முதல்வர்.
கடந்த 1986-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார், அப்போதைய பிரதமரான ராஜீவ் காந்தி. அதன் பிறகு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஜான்சனைச் சந்தித்துப் பேசினோம்.
‘‘நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?’’
‘‘நகரத்தில் உள்ள மாணவர்களுக்குப் படிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. கிராமத்து மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. கிராமப்புற மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்டவைதான் நவோதயா பள்ளிகள். இந்தப் பள்ளிகளில் 75 சதவிகித மாணவர்கள் கிராமங்களிலிருந்துதான் சேர்க்கப்படுவார்கள். ஆனால், ஏழைகளுக்கு மட்டும் பயன்படும் என்பதால், அரசியல்வாதிகள் இந்தப் பள்ளியைப் புறக்கணிக்கிறார்கள்.’’

‘‘கேந்திரிய வித்யாலயாவுக்கும் நவோதயா வித்யாலயாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?’’
‘‘இரண்டுமே மத்திய அரசுப் பள்ளிகள்தான். கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளன. நவோதயாவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளன. கேந்திரிய வித்யாலயா பகலில் செயல்படும் பள்ளி. நவோதயா உண்டு உறைவிடப் பள்ளி. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் பெற்றோர் வந்து பார்த்துச் செல்லலாம். படித்து வேலையில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கானது கேந்திரிய வித்யாலயா. பள்ளிக்கே செல்லாத கிராமத்தில் உள்ள அடித்தட்டு மாணவர்களுக்கானது நவோதயா. கேந்திரிய வித்யாலயாவில் இந்தி கட்டாயம்; தமிழ் கிடையாது. நவோதயாவில் இந்தி கட்டாயம் கிடையாது... 10-ம் வகுப்பு வரை கட்டாயமாகத் தமிழ் கற்றுக் கொடுப்பார்கள்.
கேந்திரிய வித்யாலயாவில் சமஸ்கிருதம் இருக்கிறது... நவோதயாவில் சமஸ்கிருதம் கிடையாது. கேந்திரிய வித்யாலயாவில் அந்தப் பள்ளி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆகியோருக்கு கோட்டா உண்டு. பரிந்துரையின் பேரில் மாணவர்களைச் சேர்க்கலாம். நவோதயா பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். கேந்திரிய வித்யாலயாவில் வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நவோதயாவில் சொந்த மாவட்டம், சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை. கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்கள் தேர்ச்சிக்குப் பெற்றோர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நவோதயா பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சிக்கு முழுப் பொறுப்பும் ஆசிரியர்கள்தான்.’’
‘‘நவோதயா பள்ளிகள் வடக்கே தமிழ் வளர்க்கும் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?’’
‘‘ஒவ்வொரு பள்ளியையும் பிற மாநிலத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியுடன் தொடர்பு ஏற்படுத்துவார்கள். தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியை லக்னோவில் உள்ள பள்ளியுடன் இணைத்திருந்தால், இங்குள்ள 9-ம் வகுப்பு மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை, லக்னோ பள்ளியில் ஒரு வருடம் படிக்க அனுப்புவார்கள். லக்னோ மாணவர்கள் இங்கு வருவார்கள். லக்னோவுக்குச் செல்லும் தமிழ் மாணவர்களுக்குப் பாடம் எடுக்க அங்கு இரண்டு தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒன்று என 32 பள்ளிகள் இருந்தால், வட மாநிலத்தில் உள்ள 32 பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிப்பார்கள். தமிழ் ஆசிரியர்கள் இருப்பதால், வடமாநிலப் பள்ளிகளில் மாணவர்கள் தமிழை விருப்ப மொழியாக எடுத்துப் படிக்க வாய்ப்பு கிடைக்கும். அங்குள்ள நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இடம் பெறும். பேச்சுப்போட்டி, கலாசார நிகழ்ச்சிகளில் தமிழ் இருக்கும். தாய்மொழியைப் பரப்ப நவோதயா போன்ற ஒரு கட்டமைப்பு வேறு எங்கும் இல்லை.’’
‘‘தமிழ் மொழியைப் பிரதானமாகக் கொண்டு செயல்படும் நவோதயா பள்ளி எங்காவது இருக்கிறதா?’’
‘‘பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் இருக்கும் பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்படுகின்றன.’’
‘‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டும் என்ற வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?’’
‘‘தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தை மையமாகக்கொண்டு செயல்படும் குமரி மகாசபா அமைப்பு சார்பில் 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘நவோதயா பள்ளிகள் குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. எனவே, எட்டு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளைத் தொடங்க வேண்டும்’ என்று 2017-ல் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையாணை வாங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்துள்ள மனுவைத் திரும்பப்பெற வேண்டும் என்று முதல்வரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.’’