அந்தப் பகுதியில் ஆடுகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அது ஆச்சர்யம்தான்...ஆடுகளுக்குச் சாப்பிட அப்படி என்ன இருந்திடப் போகிறது அந்தப் பொட்டல் பாலைவனத்தில். ஆனால், அங்கு ஆடுகள் இல்லாத வீடுகளே இல்லை. அந்த வீடுகள் எல்லாமே மண்ணால் கட்டப்பட்டவை தான். பசுமையைத் தாங்கி நிற்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் முட்செடிகள்தான். இது பாகிஸ்தானின் சிந்த் பகுதியைச் சேர்ந்த பாலைவனம்.
ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin) பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருந்தாலும், உலகம் முழுக்க பயணித்துக் கொண்டேயிருப்பவர். உலகின் மிக முக்கியமான 'ஆற்றல் சக்தி ஆலோசகர்'களில் ( Energy Consultant) ஃபரெய்லும் ஒருவர். உலகின் பல நாடுகளைச் சுற்றிவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர், ஓய்வெடுப்பதற்காக தன் சொந்த ஊரான கராச்சிக்குத் திரும்புகிறார் ஃபரெய்ல். அப்போது அவரது மாமா ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானைச் சுற்றிப்பார்க்க வருகிறார். அவரோடு சேர்ந்து ஃபரெய்லும் சிந்த் பாலைவனப் பகுதிகளுக்குப் போகிறார். அந்தப் பாலை நிலத்தின் அனல் அவர் முகத்தை அறைகிறது. சில நிமிடங்கள்கூட அதில் நிற்க முடியாத அளவுக்கு அதன் சூடு இருந்தது. ஆனால், அதே சமயம் அங்கு பார்க்கும் சில காட்சிகள் அவர் மனதை பெரும் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.
அந்தக் கடும் வெயிலில் பல பெண்களும் சிறுமிகளும் கைகளில் காலி கேன்களோடும் குடங்களோடும் தண்ணீர் எடுக்க நடந்து போய்க்கொண்டிருந்தனர். தண்ணீர் எடுக்க அதிகாலை நேரம் வீட்டை விட்டுக் கிளம்பினால், அவர்கள் திரும்ப மாலை இருட்டும் நேரம் ஆகிவிடும். பல சிறுமிகள் பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு, தண்ணீர் பிடிக்கப் போகிறார்கள். இந்தப் பகுதியிலிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வசதி கிடையாது. மண்ணெண்னெய் விளக்குகள் (Kerosene Lamps) தான்.
ஒரு சில கிராமங்களில் டீசலில் வேலை செய்யும் தண்ணீர் பம்புகள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பகுதியிலிருக்கும் கிராமங்கள் அனைத்துமே கடுமையான வறுமையில் இருப்பதால் அவர்களால் டீசல் வாங்கி, தண்ணீர் பம்புகளை இயக்க முடிவதில்லை. இந்த கிராமங்களின் தண்ணீர் பிரச்னைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார் ஃபரெய்ல். சுற்றியிருக்கும் ஆடுகளைப் பார்த்தபடியே வீடு திரும்புகிறார்.
சில நாள்களுக்குப் பிறகு பதான்கோட் கிராமத்துக்கு, தன் குழுவோடு செல்கிறார் ஃபரெய்ல். அந்த ஊர் மக்களை ஒன்று சேர்க்கிறார்.
``உங்கள் வாழ்வின் மிகப் பெரிய பிரச்னை என்ன?"
``தண்ணீர்..."
``அதைத் தீர்க்க ஏதாவது வழி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? ஏதாவது திட்டங்களை வைத்திருக்கிறீர்களா?"
``இல்லை. கடவுள்தான் காப்பாற்றணும்..."
``என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது?"
கூட்டத்தில் ஒரே சலசலப்பு. ``என்ன?", ``என்ன?" என்று பல குரல்கள் கேட்கத் தொடங்கின.
``நீங்கள் என்ன திட்டம் வைத்திருந்தாலும்... அதை செயல்படுத்த எங்களிடம் காசு இல்லை... மொத்த கிராமத்தை அலசினாலும் பத்தாயிரத்துக்கு மேல் தேத்த முடியாது" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.
`` இந்தத் திட்டத்துக்குப் பணம் தேவையில்லை."
``பணம் தேவையில்லையா?"
``ஆமாம்... பணம் தேவையில்லை. நீங்கள் வளர்க்கும் உங்கள் ஆடுகள்தான் உங்களுக்கான தண்ணீர் பிரச்னையை தீர்க்கப் போகின்றன. வறண்டு கிடக்கும் உங்கள் கிராமத்துக்கு தண்ணீர் தரப் போவது உங்கள் ஆடுகள்தான்..."
``ஆடா? இந்த ஆடுகளா? எப்படி?" மொத்த கூட்டத்தையும் முந்திக்கொண்டு கேட்டது ஒரு குரல்.
``ஆமாம். நான் உங்கள் கிராமத்தில் ``சூரிய சக்தி" கொண்டு இயங்கும் தண்ணீர் மோட்டாரை அமைத்துத் தருகிறேன். 400 அடி ஆழத்திலிருந்து உங்களுக்கான தண்ணீரை எடுத்து தர முடியும். ஆனால், இதை அமைக்க பத்து லட்சம் ரூபாய் வரை செலவாகும்...."
``யாரிடம் இருக்கு அவ்வளவு காசு?" என்று இடைமறித்தார் ஒருவர்.
``பொறுங்கள். நீங்கள் யாரும் காசு தரத் தேவையில்லை. மாறாக ஒவ்வொரு வீட்டிலிருந்து சில ஆடுகளை எனக்குத் தாருங்கள். அதை நான் பணமாக மாற்றிக் கொள்கிறேன். சம்மதமா?"
கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியாக, ஃப்ரெயிலின் திட்டத்துக்கு சம்மதித்தனர்.
சோலாரில் இயங்கும் முதல் தண்ணீர் பம்ப் அங்கு நிறுவப்பட்டது. கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டனர். அது அவர்கள் வாழ்க்கைக்கான வரமாக இருந்தது. சில மாதங்களில் அவர்கள் மொத்த வாழ்வுமே மாறியது. தண்ணீருக்காக நாள் முழுக்க நடக்க வேண்டிய சூழல் மாறியது. சிறுமிகள் மீண்டும் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். பெண்கள் தையல் போன்ற வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். குடும்ப வருமானம் பெருகியது. தண்ணீரில்லாமல் உடல் சோர்ந்து, பலவீனமாக இருந்த கால்நடைகள் தெம்படைந்தன. டீசல் பம்ப்களால் ஏற்பட்ட புகையும் இல்லாமல் போனது. சில நாள்களிலேயே, கெரசின் விளக்குகளுக்குப் பதிலாக, கிராமத்துக்குப் புதிய மின்சார விளக்குகள் வந்தன. அதற்கும் ஆடுகள் கொடுக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளில், இந்தத் திட்டத்தை மூன்று கிராமங்களில் நிறுவியுள்ளார் ஃபரெய்ல். இன்னும் பல பாலைவன கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ஆடுகளை சில மாதங்கள் வரை பராமரித்து `பக்ரீத்' சமயத்தில் ஆடுகளை விற்றுப் பணமாக மாற்றிக் கொள்கிறார் ஃபரெய்ல். "goatforwater" என்ற வலைதளத்தையும் தொடங்கியுள்ளார். ஆன்லைனில் ஆர்டர் செய்தாலேகூட ஆடுகளை டெலிவரி செய்கிறார்,
ஃபரெய்ல் சலாஹுதீன் (Fariel Salahuddin)
"நான் செய்வது நிச்சயம் சமூக சேவை கிடையாது. இதை நான் 'லாபத்தோடு செய்யப்படும் சமூக செயல்பாடு' என்று குறிப்பிட விரும்புகிறேன். எந்தவொரு விஷயத்தையும் நீண்ட காலத்துக்காக இலவசமாக கொடுக்க முடியாது. இலவசங்களால் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. அந்தக் கிராம மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால், அவர்களிடம் பணம் வாங்க முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது... சரி அவர்களிடமிருந்து ஆடுகளை வாங்கி விற்றுக்கொள்ளலாம் என்று நினைத்துதான் இதைத் தொடங்கினேன். இன்று தண்ணீர் பிரச்னை அவர்களுக்கு தீர்ந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி." என்கிறார் ஃபரெய்ல்.