திடீரென பெயர் தெரியாத மர்ம நோய்கள் மனிதர்களிடம் பரவுவதும் பல்வேறு பலிகளுக்குப் பின் அந்த நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதும் மனிதகுலம் காப்பாற்றப்படுவதும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இந்த மர்ம நோய்களையெல்லாம் விட ஒரு சொல்தான் உலக நாடுகள் பலவற்றுக்குமான அச்சமாக இருக்கிறது. அதுதான் `காலநிலை மாற்றம்’.
சர்வதேச அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகக் காலநிலை மாற்றம் மாறியிருப்பதற்கு அதன் விளைவுகளே சாட்சி. இயற்கையினைச் சமநிலைப்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் முயன்று வருகிறது. இவையெல்லாம் ஒருபுறமிருக்கக் காலநிலை மாற்றத்தால் பூமிக்கோ மனிதர்களுக்கோ ஒன்றும் இல்லை என்ற பரப்புரைகளும் நிகழ்ந்து வருகின்றன. காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான ஆதாரங்களைப் பார்க்க சூப்பர் கம்ப்யூட்டரெல்லாம் தேவையில்லை. இந்தக் கட்டுரையில் இருக்கும் ஐந்து விளைவுகள் போதும். இதை அடிக்கடி செய்திகளிலோ, ஆராய்ச்சி முடிவுகளிலோ பார்க்கலாம். இந்த ஐந்து விளைவுகளும்தாம் காலநிலை மாற்றத்தின் ஆதாரங்கள்.
கார்பன் டை ஆக்ஸைடு வெளியீடு
காற்று மாசுபாட்டுக்கு முழுமுதற் காரணம் எனப் பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம். காற்று மாசுபாடு மட்டுமல்ல பூமியைச் சூடாக்கும் பசுமை இல்ல வாயுக்களின் ஆதிமூலமும் இந்த CO2 தான். பூமியில் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 70 சதவிகிதத்துக்கும் மேலே கார்பன் டை ஆக்ஸைடினால்தான் நிகழ்கிறது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடின் அளவு பார்ட்ஸ் பெர் மில்லியன் (parts per million (ppm)) என்ற அளவால் அளக்கப்படுகிறது. கடந்த 8,00,000 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பூமியின் கார்பன் டை ஆக்ஸைடு அளவு தற்போது உயர்ந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக 400ppm குள் இருந்த அளவு 2013ல் அசால்ட்டாக 400ஐத் தாண்டியது. கடந்த ஐந்து ஆண்டுக்குள் அதன் அளவு மடமடவென உயர்ந்து தற்போது 412.03ppmல் நிற்கிறது. 400ஐத் தாண்டும்போதே எச்சரிக்கை மணி அடித்த அறிவியலாளர்கள் தற்போது அபாயச் சங்கை ஊதுகின்றனர். கார்பன் டை ஆக்ஸைடின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது மிக முக்கியமான விசயம். பரவலாக மரபுசார் ஆற்றலைப் பயன்படுத்தப்படுவதே கார்பன் டை ஆக்ஸைடின் அதீத வெளியீட்டுக் காரணம். மரபுசார் ஆற்றலைப் படிப்படியாகக் குறைத்து சூரிய ஆற்றல், காற்றாலை போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம்தான் CO2 அளவைக் குறைக்க முடியும். இல்லையென்றால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்
.
வறட்சி
வரலாற்றில் வறட்சிகள் இல்லாமல் இல்லை. சோளக்கஞ்சியைச் சண்டைப் போட்டு வாங்கிக் குடித்த வறட்சிக் கதைகளை நம் தாத்தா பாட்டிகளிடம் இன்றும் கேட்கலாம். இவையெல்லாம் அரிதாக ஏற்படும் வறட்சிகள். இயற்கையில் இவற்றுக்கு இடம் உண்டு. ஆனால் இப்போது ஏற்படும் வறட்சிகளெல்லாம் செயற்கையாய் நிகழ்பவை. வறட்சியின் அளவு D0 விலிருந்து D44 வரை பிரிக்கப்படுகிறது. D33யைத் தாண்டினாலே அந்த வறட்சியின் தாக்கம் பயங்கரமானது. மழை பொய்த்துப் போவது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. இதற்கான காரணங்களுக்குள்தாம் காலநிலை மாற்றம் ஒளிந்துள்ளது. ஆறுகளையும் நிலத்தடி நீரையும் கபளீகரம் செய்துவிட்டு தண்ணீர் இல்லை, தண்ணீர் இல்லை என இயற்கையைக் கூற முடியாது. இதற்கு கண்முன்னே உதாரணமாகத் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடப்பவை இருக்கிறது. ஒருசொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நகரகமாக கேப்டவுன் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு ஏன் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் வறட்சியால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைச் செய்தித்தாள்களில் படித்திருப்போம். இவையெல்லாம் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட வறட்சியே. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் கவனமாகக் கையாள்வது வறட்சியைத் தடுக்கலாம்.
உலகளாவிய சராசரி கடல் மட்டம் ( Global Mean Sea Level (GMSL))
காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாக இவற்றைக் காணலாம். புவிவெப்பமயமாதலால் துருவப் பகுதி பனிக்கட்டிகள் உருகி கடலின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடல்நீர்மட்ட உயர்வு மில்லி மீட்டர் அளவில் அளக்கப்படுகிறது. வருடத்துக்கு 3.4மிமீ என்ற அளவில் கடல்நீர் மட்டம் உயர்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவுக்கு நீர்மட்டம் உயரவில்லை. 20 ம் நூற்றாண்டை விட இந்த அளவு பெரியது. கடல் நீர்மட்ட உயர்வால் பல்வேறு சிறிய தீவு நாடுகள் கடலுக்குள் மூழ்கும் நிலையில் இருக்கின்றன. சில தீவு நாடுகளில் கடல் பெருமளவு உட்புகுந்துவிட்டது. 2015 பாரிஸ் பருவநிலை அறிக்கையில் கூட இந்த விளைவுகளைக் கருத்தில் கொண்டு நாம் விரைவாகச் செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். முதலில் சொன்ன மாதிரியே புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் இதனையும் கட்டுப்படுத்த முடியும்.
கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature (SST))
கடல் நீர்மட்டம் உயர்வதைப் போன்றே இந்த விளைவும் புவி வெப்பமயமாதலால்தான் நிகழ்கிறது. கடல்நீரானது வெப்பத்தை உறிஞ்சக் கூடியது. புவிப்பரப்பின் வெப்பம் உயரும்பொழுது கடல்நீரின் மேற்பரப்பின் வெப்பநிலையும் அதிகரிக்கிறது. 2016ல் தான் இந்தவெப்பநிலை அதிகபட்சமாக 0.75 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பதிவாகியுள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இதுதான் அதிகமான வெப்பநிலை. இந்த அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பால் கடல் வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பாதிக்கப்படும். கடற்சூழலியலில் பெரிய மாற்றங்களே நிகழலாம் என்கின்றனர். பசுமை இல்ல வாயுக்களைக் கட்டுப்படுத்துவதுதான் இதன் தீர்வாகவும் இருக்க முடியும்.
துருவப் பகுதிகளின் பரப்பு குறைதல்
துருவப்பகுதிகளின் பனிக்கட்டிகள் வெறுமனே கடல்பகுதிக்கானது மட்டுமல்ல. அவை சூரிய ஒளியைப் பிரதிபலித்துக் குளிர்விக்கும் பணியைச் செய்கின்றன. பூமியின் துருவப்பகுதிகளின் குளிர்த்தன்மை துருவப் பனிக்கட்டிகளின் மூலம்தான் சமநிலையில் வைக்கப்படுகிறது. பூமியைக் குளிர்விப்பதிலும் இதற்கான பங்கு அதிகம். கடல்நீரைக் குளிர்விப்பதும் இவையே. காலநிலை மாற்றத்தின் விளைவில் இவற்றின் அளவுகள் சுருங்கி வருகின்றன. துருவப் பனியின் பரப்பு குறைந்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். கடந்த ஐந்து வருடங்களில் 150 லிருந்து 250 கியூபிக் கிலோமீட்டர் வரை குறைந்துள்ளது.
மிகவும் கூர்ந்து கவனித்தால் மேலே இருக்கும் ஐந்து ஆதாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றின் விளைவு மற்றொன்றைத் தாக்கும். இப்படித்தான் காலநிலை மாற்றமும் நிகழ்ந்து வருகிறது. நாம் ஒரு பிரச்னைக்கு மட்டும் தீர்வு கண்டுபிடிக்க முயன்றால் பயனில்லை. காலநிலை மாற்றத்தை முற்றிலும் போக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கொள்கை அளவில் உலக நாடுகள் இணைந்து முன்னெடுக்க வேண்டிய செயல்பாடு இது. அரசுக்கான அழுத்தங்களைக் கொடுப்பதில் தனிநபர்களின் பங்கு இருக்கும். கண்முன்னே நிற்கும் பெரிய பிரச்னையை மனிதகுலம் இணைந்துதான் எதிர்கொள்ள வேண்டும்.