மாஞ்சோலை செல்லக்கூடிய சுற்றுலா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறது வனத்துறை. அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 895 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் புலிகள் காப்பகம், தமிழகத்தில் முதலாவதாக உருவாக்கப்பட்டது. இந்திய அளவில் 17 வது புலிகள் காப்பகமான இப்பகுதியில் எண்ணற்ற காட்டு ஓடைகளும் ஆறுகளும் உற்பத்தியாகின்றன. இந்த மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மான், மிளா, யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
புலிகள் காப்பகம் அமைந்துள்ள அகத்தியமலைப் பகுதியில் 150 ஓரிடவாழ் தாவர வகைகளும் 33 வகை மீன்களும், 37 வகை நீர்நில உயிரினங்களும், 81 வகையான ஊர்வனங்களும், 273 வகை பறவையினங்களும், 77 வகையான பாலுட்டிகளும் பட்டியலிப்பட்டு உள்ளன. இந்த மலையில் மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. அதன் மேலே சென்றால் மாஞ்சோலை, கக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, கோதையாறு ஆகிய கண்ணுக்கு விருந்தளிக்கும் பகுதிகள் உள்ளன.
மணிமுத்தாறு அருவிக்கு மேலே எழில் கொஞ்சும் தனியார் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. அங்கு செல்ல மணிமுத்தாறு அணைப்பகுதியில் உள்ள வனத்துறை செக்போஸ்டில் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். மலைக்குள் செல்ல பைக் முதல் பஸ் வரையிலான வாகனங்களுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கட்டணத்தை வனத்துறையினர் அதிரடியாக உயர்த்தியுள்ளனர். 50 முதல் 100 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்த, வாகனங்களுக்கான கட்டணம் தற்போது 800 முதல் 950 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சுற்றுலா கட்டணம் என்ற பெயரில் வனத்துறையினர் உயர்த்தி இருக்கும் இந்தக் கட்டண உயர்வு காரணமாகச் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அதிருப்திக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்துடன், குதிரைவெட்டி வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாஞ்சோலை, காக்காச்சி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.