வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது. குறிப்பாகத் தொழில் வளர்ச்சி. எந்தவொரு வளரும் நாடும் தன்னை வல்லரசாக்க நினைக்கும்போது முதலில் கவனம் செலுத்துவது தொழிற்துறை வளர்ச்சியில்தான். ஆனால், அந்தத் தொழில் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் சுற்றுப்புறச்சூழலுக்கு ஆபத்தானதாகவும் இருக்கும். ``வளரும் நாட்டுக்கு முக்கியம் வளர்ச்சியா சுற்றுப்புறச் சூழலா” எனப் பட்டிமன்றமே நடத்தலாம். இந்த இரண்டுக்கும்தான் இந்தியாவின் எதிர்காலத்தில் பலத்த மோதல் காத்திருக்கிறது. அதற்கான மிகப்பெரிய உதாரணமாக ஸ்டெர்லைட்டையும் அதற்கு எதிரான போராட்டத்தையும் எடுத்துக்கொள்ளலாம். இந்தப் போராட்ட காலத்தில் ஸ்டெர்லைட் சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் நடத்தவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது; பின் அது நடக்கவேயில்லை. இந்தச் சூழலில் சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு ஸ்டெர்லைட்டின் சி.இ.ஒ ராம்நாத் வந்திருந்தார். அதில் நாங்கள் கலந்துகொண்டு அவரிடம் ``ஏன் ஊடகங்களால் ஸ்டெர்லைட்டைத் தொடர்புகொள்ள முடியவில்லை?” எனக் கேட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து, விகடனுக்காக பிரத்யேக நேர்காணல் ஒன்றுக்கு ராம்நாத் அழைத்திருந்தார். அவரிடம் பேசியதிலிருந்து...
ஸ்டெர்லைட் நடத்தவிருந்த பிரஸ் மீட் ஏன் தவிர்க்கப்பட்டது?
அந்தச் சந்திப்புக்காகத்தான் அன்று நான் சென்னை வந்திருந்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அன்று மிரட்டல் வந்திருக்கிறது. ஸ்டெர்லைட் பிரஸ் மீட் நடந்தால் உங்கள் ஹோட்டல் அடித்து நொறுக்கப்படும் என மிரட்டியிருக்கிறார்கள். அன்று மட்டுமல்ல; ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தவறாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. உண்மையே இல்லாத எவ்வளவோ விஷயங்களைப் பயமுறுத்தும் விதத்தில் யாரோ பரப்புகிறார்கள். அதனால்தான் மக்கள் தேவையற்ற குழப்பத்துடன் போராடினார்கள். பிரஸ்மீட் ஒத்தி வைக்கப்பட்டதன் காரணம் சில விஷமிகளின் மிரட்டல்தான்.
அப்படியென்றால், ஸ்டெர்லைட் ஆலையால் அருகில் வாழும் மக்களுக்கோ சுற்றுப்புறச்சூழலுக்கோ எந்தக் கெடுதலுமே இல்லையென உறுதியாகச் சொல்கிறீர்களா?
எந்தத் தொழிற்சாலையும் 100% பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாது. எப்போதுமே நம்மைச் சரி செய்ய வழிகள் இருக்கத்தான் செய்யும். எங்களால் முடிந்த அளவுக்கு நாங்கள் சரியாக இயங்குகிறோம். சொல்லப்போனால் மற்ற தொழிற்சாலைகளைவிட நாங்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இப்போதும்கூட ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் சுற்றுச்சூழலுக்காக முதலீடு செய்திருக்கிறோம். ஒரு பொறுப்புள்ள நிறுவனமாக நாங்கள் இதைச் செய்கிறோம். ஸ்டெர்லைட்டில் லேசர் பாதுகாப்பு வேலி அமைத்திருக்கிறோம். இதைத் தாண்டி ஏதேனும் கசிந்தால் அதைப் பதிவு செய்கிறோம். அப்படி நடந்தால் உடனே ஆலை தானாக ஷட் டவுன் ஆகிவிடும். இது இந்தியாவிலே எந்தத் தொழிற்சாலையிலும் கிடையாது. இதைப் பசுமைத் தீர்ப்பாயமும் வந்து பார்த்திருக்கிறார்கள். காற்றையும் 24*7 கண்காணிக்கிறோம். அந்த மதிப்பை தூத்துக்குடி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திலேயே லைவாக பார்க்கலாம். நிலத்தடி நீரையும் ஒவ்வொரு மாதமும் எங்கள் ஆலைக்குள்ளே சாம்பிள் எடுத்து ஆய்வு செய்கிறார்கள். எல்லாமே அனுமதிக்கப்பட்ட அளவிலே இருக்கின்றன. (இணைப்பு: படங்கள்)
ஆனால், ஆர்சனிக் அளவு அதிகமாக இருக்கிறதெனச் சமீபத்தில் கூட ஒரு மத்திய அரசின் ஆய்வறிக்கை வெளியானதே?
அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை. தூத்துக்குடி சிப்காட் பெரியது. அவர்கள் எந்த நிலத்தடி நீரை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. நாங்கள் கேட்டால் ஆர்டிஐ போட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். எங்கள் ஆலைக்குள் எடுத்த நீரில் எந்தப் பிரச்னையுமில்லை.
இந்தியாவையும், தமிழக மாசுக் கட்டுப்பாட்டு விதிகளையும் கொஞ்சம் தள்ளி வைப்போம். உலக அளவில் காப்பர் ஸ்மெல்ட்டிங் ஆலைகளுக்கு இருக்கும் பாதுகாப்பு விதிகள்படி ஸ்டெர்லைட் இயங்குகிறதா?
ஆமாம். 100%.
`Marine park'ல் இருந்து 25 கிமீ தூரத்துக்குத் தாமிர ஆலை இயங்கக் கூடாது என்பதுதானே உலக விதி? ஆனால், மன்னார் வளைகுடாவிலிருந்து ஸ்டெர்லைட் 14 கி.மீ தானே?
மன்னார் வளைகுடா என்பதைத் தமிழக அரசு இன்று வரை `Marine park' என அறிவிக்கவில்லை. இப்போது அந்த 25 கி.மீ விதியும் 10 கி.மீ எனக் குறைக்கப்பட்டிருக்கிறது. பிறகெப்படி நாங்கள் விதிகளை மீறுவதாகச் சொல்ல முடியும்? NTPC போன்ற நிறுவனங்கள் இன்னும் அருகிலேயே இருக்கிறதே...
தூத்துக்குடியில் இன்னும் நிறைய நிறுவனங்கள் விதிகளை மீறியிருக்கிறார்கள் மறுப்பதற்கில்லை. பிறகேன் 20 ஆண்டுகளாக தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் மீது மட்டும் அதிக கோபத்துடன் இருக்கிறார்கள்?
1998-ல் பெரிய போராட்டம் நடந்தது. அதன் பின் எந்தப் போராட்டமும் இல்லை. 2013-ல் வாயுக் கசிவு எனச் சொல்லி மீண்டும் போராட்டம் எழுந்தது. அதன்பின் இப்போதுதான். எனவே, போராட்டம் தொடர்ந்து நடந்தது என்பது உண்மையில்லை. இதில் நிச்சயம் சமூக விரோதிகளின் வேலை இருக்கிறது என நாங்கள் சொல்வதன் காரணமும் இதுதான். மக்கள் திசை திருப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஏன் ஸ்டெர்லைட் என்றால், பெரிய நிறுவனத்தை எதிர்த்தால் அதிகக் கவனம் கிடைக்கும். அரசுக்கு எதிராகவோ, சிறிய நிறுவனங்களை எதிர்த்தோ ஏதாவது செய்தால் கவனம் கிடைக்காது. அதனால்தான் எங்களை எதிர்க்கிறார்கள்.
தூத்துக்குடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரவில் கேஸ் லீக் ஆவதாக அங்கிருக்கும் மக்களே குற்றம் சாட்டுகிறார்களே...
ஸ்டெர்லைட் ஒரு 24*7 பிளாண்ட். நடுவில் எல்லாம் நிறுத்த முடியாது. அந்த வாயுவைக் குடுவையில் அடைத்தா வைக்க முடியும்? நினைத்தபோது திறந்து விட முடியாது. அதற்கும் ஸ்டெர்லைட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
ஸ்டெர்லைட் இயங்கியபோது (ஜனவரி - மார்ச்) காற்றிலிருக்கும் சல்ஃபர் டை ஆக்ஸைடை அளந்து பார்த்தோம். 11-15 மில்லிகிராம் இருந்தது. எங்கள் ஆலையை மூடியபிறகும் எடுத்துப் பார்த்தோம். எந்த மாற்றமுமில்லை. அதே அளவுதான் இருக்கிறது.
இப்போதைக்கு ஸ்டெர்லைட்டுக்கு மிகப்பெரிய பிரச்னை யார்? பொதுமக்கள், சமூக விரோதிகள், அரசு?
பொதுமக்கள் மீது எந்தத் தப்புமில்லை. எங்களுக்குப் பிரச்னையுமில்லை. சமூக விரோதிகள்தான். இது முழுக்க முழுக்க சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்பட்ட பொய் பிரசாரம். ஸ்டெர்லைட் கேன்சர் என பொய்யைச் சொல்லிச் சொல்லி, மக்களைப் பயமுறுத்தி எங்களுக்கு எதிராகத் திருப்பியிருக்கிறார்கள். எங்களுக்கு வந்தத் தகவல்படி, யார் கேன்சரால் இறந்தாலும் அதற்கு ஸ்டெர்லைட் காரணம் எனச் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின்போதும் ஒருவர் இறந்திருக்கிறார். அவர் குடும்பத்துக்கு பணம் தந்து ஸ்டெர்லைட் ஆலையால்தான் கேன்சர் எனச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இறந்தவர் பெயர் ஜூலி. இரண்டு தவணைகளாக 50,000 என ஒரு லட்சம் அவர் கணவருக்குத் தந்திருக்கிறார்கள்.
இது சர்வதேச சதி. FOIL VEDANTA என ஒரு சர்வதேச அமைப்பு எங்களுக்கு எதிராக இயங்கி வருகிறது. அதன் சார்பாக ஒருவர் போராட்டத்துக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். அவர் பெயரில் ரூம் போடாமல், வேறு பெயரில் ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறார். அவர் பெயர் சமரேந்திர தாஸ். அவர் இங்கிருக்கும் சமூக விரோதிகளுடன் பேசி இதைத் திட்டமிட்டிருக்கிறார். அவர்கள் நோக்கமே வேதாந்தாவைத் தொழில் ரீதியாக அழிப்பதுதான். அவர்களின் திட்டம்தான் இதெல்லாம். நாங்கள் டிடெக்டிவ் ஏஜென்சி கிடையாது. எங்களுக்குத் தெரிந்த தகவல்களை வைத்து நடந்த விஷயங்களை நாங்கள் இணைத்துப் பார்க்கிறோம். அவ்வளவுதான்.
ஸ்டெர்லைட் காப்பரில் எத்தனை சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது?
உண்மையைச் சொல்லப்போனால், நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், இந்தியாவில் காப்பர் டிமாண்டே அதிகம். ஆனால், அரசு பல நாடுகளிடம் வர்த்தக ஒப்பந்தம் போட்டிருக்கிறது. அதன்படி பல நாடுகளிலிருந்து வரி இல்லாமலே காப்பர் இறக்குமதி ஆகிறது. அதனால்தான் நாங்கள் ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நிர்பந்தப்பட்டிருக்கிறோம். எங்களுக்கும் ஸ்டெர்லைட்டின் எல்லா உற்பத்தியையும் இந்தியாவுக்கே தரத்தான் விரும்புகிறோம்.
ஸ்டெர்லைட் நிலத்தின் மாஸ்டர் பிளான் டாகுமெண்ட்படி அது `INSTITUITIONAL AREA'என்றே பதிவாகியிருக்கிறது. ஆனால், அது `Special Industries and Hazardous Industry Zone' கீழ்தானே வர வேண்டும்?
ஸ்டெர்லைட் சிப்காட்டில்தான் இருக்கிறது. எங்களுக்கு 1993-ல் நிலம் ஒதுக்கப்பட்டது. அப்போதே காப்பர் தயாரிக்க என்று சொல்லித்தானே கேட்டிருந்தோம்? அதன்படிதான் நிலம் வழங்கப்பட்டது? அதில் எந்தக் குழப்பமுமில்லையே?
ஸ்டெர்லைட்டிலிருக்கும் புகைபோக்கியின் அளவு குறித்தும் குற்றச்சாட்டு இருக்கிறது. பிளாண்ட்டின் உற்பத்தித்திறன் அதிகரித்தபின்னும் அதே உயரத்தில் இயங்குகிறதா? அது சரியா?
1996-ல் ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டது 1,00,000 டன் கெப்பாசிட்டி. இப்போது 4,00,000 டன். இதையே மாற்றி மாற்றித்தான் குறிப்பிடுகிறார்கள். தொடங்கியபோது இருந்த விதிப்படி ஒரு டன் சல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு 4 கிலோ சல்ஃபர் வெளியிடலாம் என்றிருந்தது. பின் உலக விதி 2 கிலோ எனக் குறைக்கப்பட்டது. எங்களுக்குத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே ஒரு கிலோவுக்குதான் அனுமதி அளித்தது. ஆனால், நாங்கள் அதையும்விட குறைவான சல்ஃபர் வெளியாகும்படி எங்கள் புராசஸை மாற்றியமைத்தோம். அதனால், ஆரம்பத்திலிருந்த புகைபோக்கியின் உயரமே எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. முன்பு எங்களிடம் ஒரே ஒரு சல்ஃப்யூரிக் ஆசிட் யூனிட் இருந்தது. இப்போது இரண்டு இருக்கிறது. எப்படி பார்த்தாலும் பாதுகாப்பான அளவில்தான் நாங்கள் இயங்குகிறோம்.
இன்னொரு விஷயம். இது எல்லாமே பவர் பிளாண்ட்டோட கைடுலைன். அதையேதான் எங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். காப்பர் ஸ்மெல்ட்டிங் யூனிட்டுக்கு எனத் தனியாக எந்த கைடுலைனும் இல்லை.
ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டபோது 250 மீட்டர் அகலத்துக்கு `Green belt' தேவை என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சொல்லியிருந்தது. இப்போது அது 25 மீட்டராக குறைக்கப்பட்டிருக்கிறது? எப்படி குறைந்தது?
இது எல்லாமே உச்ச நீதிமன்ற வழக்கிலே அதிகம் பேசப்பட்ட விஷயம்தான்.
உண்மைதான். ஆனால், இப்போது மக்களுக்குத் தெரிய வேண்டுமென்னும்போது எந்தத் தகவலும் சரியாகக் கிடைக்கவில்லை. அதற்காகவாது பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
சரிதான். ஆனால், எங்களுக்கு இப்போது சொல்லப்பட்டிருப்பது 25 மீட்டர்தான். அது இருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் என்ன நஷ்டம் ஆகியிருக்கிறது?
எங்கள் காப்பரை நம்பிதான் 36% இந்தியச் சந்தை இருக்கிறது. இப்போது ஆலை மூடியதால் காப்பர் விலை ஏறியிருக்கிறது. இறக்குமதி உயர்ந்திருக்கிறது.
ஆனால், உலக அளவில் காப்பர் விலை இறங்கியிருக்கிறதே?
இதற்குப் பெயர் LME price. இது உலக அளவில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் தொழில் போட்டியால் இறங்கியிருக்கிறது. LMEபிரைஸுக்கு மேல் premium price என ஒன்றிருக்கிறது. அதுதான் இப்போது உயர்ந்திருக்கிறது. இந்தியாவிலிருக்கும் நிறுவனங்கள் காப்பர் வாங்கும்போது LME+ Premium விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.
காப்பர் மட்டுமல்ல. சல்ஃப்யூரிக் ஆசிட்டை ஒவ்வொரு மாதமும் 40,000 டன் தந்து வந்தோம். இப்போது அதை வட இந்தியாவிலிருந்து வாங்குகிறார்கள். போக்குவரத்துச் செலவே அதிகமாகிவிட்டது. இன்னும் நிறைய உபரிப் பொருள்களை நாங்கள் விற்று வந்தோம். அந்தச் சின்ன நிறுவனங்கள் இப்போது முடங்கிக் கிடக்கின்றன.
மே 22 சம்பவம் பற்றி...
அது வருந்தத்தக்க நிகழ்வு. அது நடந்திருக்கவே கூடாது. ஆனால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
அடுத்து என்ன திட்டம்?
சட்டப்படி போராடுவோம். அடுத்து, பொதுமக்களிடம் சென்று பேசப்போகிறோம். மக்கள் பலர் இப்போது எங்களிடம் பேசும்போது எங்கள் உதவி வேண்டுமென்கிறார்கள். டிரக் ஓனர்கள் எல்லாம் இ.எம்.ஐ கட்டப் பணமில்லை என்கிறார்கள். டிரக் விஷயத்தில் மட்டுமே 10,000 பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தின் வால்யூம் 20% குறைந்திருக்கிறது. அது அவர்களுக்கு மிகப்பெரிய அடி. இது இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பொருளாதார ரீதியாக நஷ்டம். அதனால் எப்படியும் ஸ்டெர்லைட்டைத் திறக்கப் போராடுவோம்.