``அமெரிக்கர்களாக இல்லாதவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவேன்" என்ற வாக்கியம்தான் கடந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றிக்குக் காரணம் எனப் பலராலும் சொல்லப்பட்டது. சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதற்கான வேலைகளை ஆரம்பித்து வைத்துள்ளார் ட்ரம்ப். ஆனால், அதற்கான எதிர்வினை மக்களிடமிருந்து வரவில்லை. உலகம் முழுவதும் இருக்கும் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்துள்ளது. அமெரிக்க - மெக்ஸிகோ எல்லை முழுவதும் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்புவதற்கான வேலைகளை ஆரம்பித்ததற்குத்தான் இந்த எதிர்ப்பு. இதனால் மிகப்பெரும் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என அறிவியலாளர்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எல்லைப்பகுதியில் அமைந்துள்ள உயிர்ச்சூழலை இந்தச் சுவர் முற்றிலும் அழித்துவிடும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையானது 3,200 கிமீ தூரம் நீளமானது. இவ்வளவு நீளமான எல்லையில் உயிர்ப் பல்லுயிர்த்தன்மை கொண்ட பல இடங்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் வட அமெரிக்கா கண்டத்திலேயே மிக முக்கியமான உயிப்பல்லுயிர்க் கோளங்களாகக் கருதப்படக்கூடியவை. மேலும், இந்த எல்லைப்பகுதியில்தான் 1500 க்கும் மேற்பட்ட விலங்கினங்களும் தாவர வகைகளும் காணப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 1000 விலங்கினங்களும் 400 தாவர இனங்களும் இருக்கின்றன. இவற்றில் 62 வகையான உயிரினங்கள் வேகமாக அழிந்து வரக்கூடியவை. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (International Union for Conservation of Nature (IUCN)) சிவப்பு பட்டியலில் இவை இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் அந்தப் பகுதியில் 346 வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த உயிரினங்கள் அந்தப் பகுதியைப் பாரம்பர்ய இடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. ஒருவேளை சுவர் எழுப்பப்பட்டால் இவை எல்லாம் என்ன ஆகும்? இதனைக் குறித்த ஓர் ஆய்வினை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் இணைந்து இதனை நடத்தியுள்ளனர். இதன் முடிவுகள் கடந்த வாரம் ஆய்வு இதழான பயோ சயின்ஸில் வெளியானது. E.O வில்சன்(E.O. Wilson) மற்றும் பவுல் எர்லிச்(Paul Ehrlich) போன்ற முக்கியமான விஞ்ஞானிகளுடன் 16 பேர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகளை அறிவியல் ஆய்வு இதழான பயோ சயின்ஸில்(BioScienece) கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர்.
PHOTO : Creative Commons
``சக விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் அமெரிக்க மெக்ஸிகோ எல்லைச் சுவர் சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படுத்தும் ஆபத்தான தாக்கங்களுக்கு எதிராக அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகவும் இயற்கை பாதுகாப்புக்காகவும் ஒன்றிணைய வேண்டும்", என அந்த ஆய்வில் அவர்களே குறிப்பிட்டுள்ளனர். ஆய்வாளர்களும் ஒருவரான பவுல் எர்லிச் கூறும்போது, " எந்தவொரு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடக்கும்போது அழிவுகள் நடக்கத்தான் செய்கின்றன. மிகப்பெரிய வணிக வளாகங்களையோ விமானநிலையங்களையோ அல்லது மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை கட்டும்போது சுற்றுச்சூழலின் பல்லுயிர்த்தனமை அழிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான மைல் தூரத்துக்கு எல்லைச்சுவர் கட்டப்பட்டு அதைப் பராமரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவது பல்லுயிர்த்தன்மைக்கு எதிரான குற்றம்" என்கிறார். ஏறக்குறைய 50 நாடுகளைச் சேர்ந்த 3000 விஞ்ஞானிகள் எல்லைச்சுவர் கட்டுமானத்தின்போது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை(epartment of Homeland Security (DHS)) சுற்றுச்சூழல் சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸைக் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அடையாளம் காணப்படாத உயிரினங்களை அடையாளம் காணவும் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்மூலம் எல்லைச்சுவர் அமைப்பதைத் தாமதப்படுத்தலாம் என்கின்றனர்.
பெனின்சுலார் பைகார்ன் செம்மறி (Peninsular Bighorn sheep), மெக்சிகன் சாம்பல் ஓநாய்(Mexican gray wolf), பன்றி இனத்தைச் சேர்ந்த பன்றி போன்ற விலங்குகள் மற்றும் சிறுத்தைகள் இன்னும் பெயர் தெரியாத பல உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. 3200 கிமீட்டரில் சிறிது தூரத்துக்கு ஏற்கெனவே சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிறிய பகுதியே விலங்குகளின் இடம்பெயர்வு, பருவ மாற்றம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. முழுவதும் எல்லைச்சுவர் அமைக்கப்பட்டு இயற்கைச் சூழல் பிரிக்கப்பட்டால் உயிரினங்களின் இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம், உணவு எனப் பலவற்றில் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியின் சுற்றுச்சூழல் சங்கிலியே அறுந்துவிடும் என்கின்றனர். இரு நாடுகளுக்குமான உயிர்ச்சூழலாக இவை இருந்து வருகின்றன.
PHOTO : Wikimedia Commons
இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவதற்கே இந்த வழியைப் பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வழி முழுவதும் பாலைவனத்தால் நிரம்பியது. வரும் வழியிலேயே சோர்வாலும் உணவு இல்லாமலும் பலர் இறந்துவிடுகின்றனர். அதைமீறி எல்லையைக் கடப்பவர்களை ராணுவம் கைது செய்துவிடுகிறது. தினமும் 442 குடும்பங்கள் எல்லையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந்த வழி மட்டுமல்லாமல் பீஸ்ட் ரயில்(Beast Train) எனப்படும் சரக்கு ரயில் வண்டியில் உயிரைப் பணயம் வைத்து பயணித்து அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். ஆனால், அதனை ட்ரம்ப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. 2016 பிரசாரம் முழுக்க எல்லைச்சுவர் பற்றி பல இடங்களில் கூறியுள்ளார். இந்த எல்லைப் பாதுகாப்புக்காக 23 பில்லியன் டாலர்களை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளனர். இவற்றில் 18 பில்லியன் டாலர்கள் 1552 கிமீ நீளத்துக்குச் சுவர் அமைக்கத் தேவையான தொகையாகக் கூறப்பட்டுள்ளது. முதலில் இந்தத் தொகையை மெக்ஸிகோவே தரும் என மேடையில் முழங்கிய ட்ரம்ப். அதன்பிறகு இதற்கென கிரவுட் ஃபன்டிங் முறையைத் தேர்ந்தெடுத்தார். மக்களிடமிருந்து கிரவுட் ஃபன்டிங்கில் பணம் சேகரிக்க மசோதாவெல்லாம் நிறைவேற்றினார். ஆனால் அவர் எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை. எல்லைச் சுவருக்கு உதவி செய்யாவிட்டால் கூட்டாட்சி அரசையே நிறுத்திவிடுகிறேன் என இரண்டு நாள்களுக்கு முன் ஆவேசமாகப் பேசியுள்ளார் ட்ரம்ப்.
அரசின் வளர்ச்சித் திட்டங்கள் எனக் கூறப்படுபவை உலகம் முழுக்க ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன. உண்மையில் அவை வளர்ச்சித் திட்டங்கள்தானா?? மக்கள் நேரடியாகப் பாதிக்காவிட்டாலும் மனிதர்கள் சார்ந்திருக்கக்கூடிய இயற்கையை வெகுவாகப் பாதிக்கிறது. அந்தப் பாதிப்பு நம்மையும் விரைவில் தாக்கும். அதுபுரியாமல் அகதிகள், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகளாகப் பார்க்கும் எண்ணம்தான் இதன் வெளிப்பாடு. உண்மையில் அமெரிக்கா என்பது பல்வேறு நாட்டினரால்தான் வல்லரசாக உருவாகியுள்ளது. ட்ரம்ப்புக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.