பல வகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனை மரத்தை ``கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்” என்று அழைப்பர். அத்தகைய பனை மரத்தை வளர்க்க 5 ஆயிரம் விதைகளை கிராமத்துப் பெண்களும் சேர்ந்து நடவு செய்துள்ளது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பனை மரத்தின் தாயகமாக ஆப்பிரிக்காவைக் குறிப்பிடுவார்கள். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் எடுத்த கணக்கின்படி இந்தியாவில் 102 கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், அதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிறது பனை மரம். பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும். இதிலுள்ள கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு ஆகிய சத்துகள் உள்ளன. எளிதில் செரிக்கக்கூடிய இது எலும்புருக்கி நோய் மற்றும் ஈரல் நோய்க்கு மருந்து எனக் கூறப்படுகிறது. பனை ஓலையிலிருந்து பனந்தும்பு, தூரிகைகள், பாய்கள், கூடைகள் மற்றும் அலங்காரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயம், நெசவு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக பனந்தொழில் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
இப்படி மனித வாழ்வுக்கு உறுதுணையாக விளங்கும் பனை மரங்கள் அழிந்து வருகின்றன. இதைக் காப்பாற்ற நாகை மாவட்டம், சீர்காழி அருகே வைரவனிருப்பு, கூத்தியம்பேட்டை ஆகிய ஊர்களில் ஏரிக் கரையைச் சுற்றியும், வாய்க்கால் ஓரங்களிலும் 5 ஆயிரம் பனை விதைகளை நடும்விழா நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் தலைமையேற்று பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்தார். விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் 200 கிராமத்துப் பெண்கள், 100 ஆண்கள் எனப் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விதைகளை நட்டனர். இதுபற்றி ஸ்டாலின் பேசுகையில், ``பனை மரத்தின் பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 5 ஆயிரம் பனம் விதைகள் நடும்விழா ஒரு சிறியத் தொடக்கம்தான். விரைவில் லட்சக்கணக்கில் மாவட்டம் முழுவதும் பனம் விதைகள் நடும் பணி தொடரும்” என்றார்.