"நீர்நிலைகளில் மட்டுமல்ல,வீட்டுக்கு வீடு இரண்டு பனை விதைகளை விதைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்" என்று உற்சாகமாக சொல்கிறார்கள் குளித்தலைப் பகுதி இளைஞர்கள்.
நம் மாநில மரமான பனை, வறட்சியை தாங்கி வளரும் திறன் படைத்தது. தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் ஊருக்கு ஊர் சில நூறு என்ற எண்ணிக்கை அளவில் பெருகி இருந்த பனை மரங்கள், இப்போது மாவட்டத்திற்கு சில என்கிற மோசமான எண்ணிக்கைக்கு வந்துவிட்டன. அதற்கு காரணம் நாம்தான். பனைமரத்தை மனை போட, விறகு என்று பல்வேறு காரணங்களால் அழித்ததுதான் இந்த நிலைக்குக் காரணம். ஆனால், பனையில் வேர் முதல் நுனி வரை எல்லாமே மனிதர்கள் பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை மறந்து, நாம் அதை போட்டி போட்டுக் கொண்டு அழித்துவிட்டோம். ஆனால், நம்மாழ்வார் ஏற்றி வைத்த இயற்கை குறித்த விழிப்பு உணர்வுக்கு பிறகு இன்றைய இளம் தலைமுறையிடம் இயற்கையைக் காப்பது குறித்த தன்முனைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் பனை விதைகளை நீர் நிலைகள்,காலி இடங்களில் விதைக்கும் காரியத்தில் தமிழகம் முழுக்க பல இளைஞர்கள் இறங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில்,கரூர் மாவட்டம்,குளித்தலைப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பல்வேறு இயற்கை குறித்த அமைப்புகளை தொடங்கி அதன்மூலமாக இளைஞர்களை ஒருங்கிணைத்து பனைவிதைகளை விதைத்து வருகிறார்கள். கரூர் இளையதலைமுறை அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும்,சேங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் ஒன்றுசேர்ந்து அங்குள்ள ஏரி, கண்மாய், குளக்கரைகளில் இன்று 10,000 க்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்து அசத்தி இருக்கிறார்கள்.
அவர்களிடம் பேசினோம்."கரூர் மாவட்டம் மரங்களை குறைவாகக் கொண்ட, மழை அதிகம் பெய்யாத வறட்சி மிகுந்த மாவட்டம். அதனால்,இங்கு நட்டு மரங்களை வளர்க்கும் 'பசுமை கரூர்' திட்டத்தை செயல்படுத்திகிட்டு இருக்கோம். அந்த வகையில், அடுத்த முயற்சியாக எங்க பகுதியில் பனைவிதைகளை விதைக்கத் தொடங்கி இருக்கிறோம். இன்று மட்டும் 10,000 விதைகளை விதைத்திருப்போம். தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுக்க இந்த பனைவிதை விதைக்கும் முயற்சியை அதிகப்படுத்த இருக்கிறோம். இறுதியில் வீட்டுக்கு வீடு இரண்டு பனைவிதைகள் விதைக்கும் முயற்சியை செய்ய இருக்கிறோம். இன்னும் பத்து வருடத்தில் நூறடிக்கு ஒரு பனை மரம் என்ற நிலையை கரூரில் உருவாக்க இருக்கிறோம்" என்றார்கள் மகிழ்ச்சியாக.