
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து, `மன்னையின் மைந்தர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, இது தொடர்பான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். மன்னார்குடியில் தூர்ந்துகிடந்த ஏரிகளைத் தங்களது சொந்த முயற்சியில் தூர்வாரி மீட்டெடுத்தார்கள். ரயில் நிலையம் அருகில் நம்மாழ்வார் பெயரில் ஒரு பூங்கா உருவாக்கியதோடு, மக்கள் கூடும் பொது இடங்களில் ஏராளமான மரங்கள் உருவாக்கியுள்ளார்கள். தற்போது, மன்னார்குடி முழுவதும் பனை உருவாக்குவோம் என்ற லட்சியத்தை முன்வைத்து, இதற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இறங்கியுள்ளார்கள். மன்னார்குடி இளைஞர்களின் பனை மீட்பு முயற்சியை இப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டுகிறார்கள்.

பனை விதையைத் தேடி பயணத்தைத் தொடங்கியுள்ள இவர்கள், 2 நாளில் 500-க்கும் மேற்பட்ட பனம்பழங்களைச் சேகரித்துள்ளார்கள். இது தொடர்பாக மன்னையின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்த ராஜசேகரனிடம் பேசியபோது, ‘’முன்பெல்லாம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்ல ஏரி, குளம், ஆறுகளோட கரைகள்ல ஏராளமான பனை மரங்கள் இருந்துச்சு. மற்ற மரங்களின் வேர்கள் போல பனை மரங்களின் வேர்கள் இருக்காது. இதோட வேர்கள் குழாய்போல் இருக்கும். தண்ணீரை சேகரிச்சி, ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும். தண்ணீர் கசிவினால் நீண்ட தூரத்துக்கு தண்ணீர் ரேகைகளும் உருவாகும்.
ரொம்ப ஆழத்துல உள்ள நிலத்தடிநீரைக்கூட பனைமரங்களின் வேர்கள் மேல கொண்டுவந்துடும். அசுத்தமான தண்ணீரை சுத்தகரிப்பு செஞ்சி, நல்ல தண்ணீராக மாற்றித் தரக்கூடிய மிகவும் உன்னதமான பணியையும் இதன் வேர்கள் செய்யும். மண் அரிப்பையும் இது தடுக்கும். இதனால்தான், நீர்நிலைகளின் ஓரங்கள்ல நம் முன்னோர்கள் பனை மரங்களை உருவாக்கினாங்க. பனை மரங்கள் அழிஞ்சதுனாலதான், நிலத்தடிநீருக்கு மிக மோசமான தட்டுப்பாடு உருவாகியிருக்கு. மறுபடியும் மன்னார்குடியில் உள்ள நீர்நிலைகள்ல ஏராளமான பனை மரங்களை உருவாக்கணும்னு முடிவெடுத்தோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களோட படிப்பு, வேலைகளுக்கு இடையிலயும் பனை விதை சேகரிப்புல இறங்கினோம். இரண்டே நாள்ல 500 பழங்கள் கிடைச்சிருக்கு.
ஒவ்வொரு பழத்துலயும் 1 முதல் 3 விதைகள் இருக்கும். மிகவும் அரிதாக, ஒரு சில பழத்துல 4 விதைகள்கூட இருக்கும். சிலர் விவரம் தெரியாம, அந்தப் பழத்தை அப்படியே முழுசா மண்ணுக்குள்ள பதியம் போடுறாங்க. அதுமாதிரி விதைச்சா, உயிர் பிழைச்சி வராது. பழத்தை நல்லா வெயில்ல காய வச்சி, விதையைத் தனியாக பிரித்தெடுத்து, சணல் சாக்கில் கட்டிவைத்து, அதன் பிறகு விதைப்பு செய்யணும். அரை அடிக்கும் குறைவாக குழி எடுத்து, மண்ணை லேசாக ஈரமாக்கி, விதையின் கண்கள் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, மண்ணைப் போட்டு மூட வேண்டும். 3 முதல் 6 மாதங்களில் குருத்து உருவாகும். இது மழைகாலம். இப்ப பனை விதைகளை விதைப்பு செஞ்சா, நல்லா பொழைச்சி வந்துடும்” என உற்சாகம் பொங்கப் பேசினார்.