நாட்டின் தேசிய விலங்குக்கே பாதுகாப்பில்லாத நிலையில்தான் நம் நாடு தற்போதுள்ளது. இறந்த ஐந்து பேரின் உடலில் மட்டுமே அவ்னி புலியின் தடயங்கள் கிடைத்துள்ளது. இருந்தாலும் மொத்தமாக இறந்துபோன 13 பேரையும் அவள்தான் கொன்றாள் என்று கொலைப்பழி சுமத்தப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட பின்பும், அந்தப் பலி அவளை விடவில்லை. `13 பேரைக் கொன்ற புலி' என்று பொய்யான செய்தி பரப்பும் அளவுக்குப் புரிதலற்ற சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிறந்து பத்து மாதங்களே இரண்டு குட்டிகளுக்குத் தாயான அவ்னி சூழலியல் ரீதியாக எத்தனை முக்கியமானவள், புலிகள் எண்ணிக்கையை உயர்த்துவதில் பெண் புலிகளின் பங்கு ஆகியவற்றைச் சிறிதும் சிந்திக்காமல் நடவடிக்கை எடுத்தது மகாராஷ்டிர வனத்துறை. அதற்குப் பிறகு அவ்னியின் இரண்டு குட்டிகள் என்ன ஆயின என்பதைப் பற்றியும் அவற்றின் நிலை குறித்தும்கூடச் சிந்திக்காமல் விட்டது வனத்துறையுடைய அக்கறையின்மையின் உச்சகட்டம்.
அவ்னி புலியின் குட்டிகளைப் பற்றி விசாரிக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தால் சில தன்னார்வத் தொண்டு நிறுவனக் குழுக்கள் மகாராஷ்டிராவுக்கு அனுப்பப்பட்டன. அந்தக் குழு நடத்திய விசாரணை மூலமாக குட்டிகளைக் கண்டுபிடிக்க அம்மாநில வனத்துறையோ தலைமை வனவிலங்கு அதிகாரியோ (Chief Wildlie warden) எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு அனுப்பிய கடிதத்தில், ``யாவத்மால் மாவட்டத்துக்கு நாங்கள் அனுப்பிய NGO குழுக்கள் மூலம் அப்பகுதியின் தலைமை வனவிலங்கு அதிகாரியோ, வனத்துறையோ அவ்னியின் குட்டிகளைத் தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரியவந்தது. அதோடு கிராம மக்களுக்கும் அவற்றைப் பிடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்னி புலியைச் சுட்டுக் கொன்றதால் தேசிய அளவில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. தாயின் அரவணைப்பிலேயே வளரக்கூடிய வயதே ஆன இரண்டு குட்டிகளின் மீதான கரிசனமும் கவனிக்கப்பட வேண்டியது. அதனால் வனவிலங்கு மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் உதவியோடு இரண்டு குட்டிகளையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்று பரிந்துரைக்கிறேன். அதற்காக அமைக்கப்படும் குழுவில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த வனவிலங்கு மருத்துவர்களும், அதிகாரிகளுமே இருக்கவேண்டும்" என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
அதே கடிதத்தில் அத்தகைய மருத்துவர்கள், அதிகாரிகள் பன்னிரு பேரின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார். அதோடு அவ்னி கொலையை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் முனைவர். ராஜேஷ் கோபால் பெயரையும் பரிந்துரைத்துள்ளார்.