Published:Updated:

"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்

"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்
News
"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்

அவர்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிரச்னைகள் என்ன? அந்தப் பிரச்னைகளைத் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மக்கள் விடைகாண அவர்களுக்குப் பழங்குடிகள் பற்றிய புரிதலை வழங்கவேண்டும்.

Published:Updated:

"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்

அவர்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிரச்னைகள் என்ன? அந்தப் பிரச்னைகளைத் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மக்கள் விடைகாண அவர்களுக்குப் பழங்குடிகள் பற்றிய புரிதலை வழங்கவேண்டும்.

"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்
News
"பழங்குடிகளற்ற வனம், பன்னாட்டு நிறுவனங்களின் சதி திட்டமே!" - அ.பகத்சிங்

னித இனங்கள் தோன்றி இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அவற்றில் நியாண்டர்தால், ஹோமோ இரக்டஸ் உட்படப் பல்வேறு இனங்கள் பரிணாம வளர்ச்சியில் அழிந்தும் விட்டன; ஒன்றோடொன்று கலந்தும் விட்டன. இறுதியாக இப்போதிருக்கும் மனித இனம் ஹோமோ சேப்பியன். இந்த ஹோமோ சேப்பியன் மனிதர்களின் (நம்முடைய) முன்னோர்கள் யார்? பரிணாம வளர்ச்சியில் இந்த இனம் தோன்றியதில் இருந்து இப்போது வரையிலான மனித வரலாற்றைத் தன்னுள் கொண்டிருப்பவர் யாரோ அவரே நம் முன்னோர். அவரே நம்முடைய வாழும் மூதாதையர்.

ஆங்கிலத்தில் லிவிங் ஃபாசில் (Living Fossil) என்று ஒரு சொல் உண்டு. அதாவது வாழும் தொல்லெச்சங்கள். ஓர் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள, அதன் முன்னோர்களை அறிந்துகொள்ள, அவற்றின் பல லட்சம் ஆண்டுகால வாழ்வியலைப் புரிந்துகொள்ள தற்போது உயிர்ப்புடன் நம் மத்தியில் வாழும் உயிரினங்கள் உதவி செய்தால் அவற்றை அப்படி அழைப்பார்கள். மனித இனத்தைப் பொறுத்தவரை அப்படியானவர்கள்தான் இவர்கள். நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மூதாதையர்கள். அத்தகைய வாழும் மூதாதையர்கள், நாம் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியவர்கள் இன்று உலகளவில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள். அதில் இந்தியாவும் தமிழகமும் விதிவிலக்கல்ல. 18 பழங்குடிக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்புகளையும் மீறி, அவர்களில் பெரும்பாலானோரை அப்புறப்படுத்திவிட்டு அங்கே அவர்களின் நிலத்திலே அரசாங்கமே நிறுவிய அந்தப் பிரமாண்ட சிலையே நாமும் நம் அரசும் பழங்குடிகளுக்குக் கொடுக்கும் மரியாதைக்கான சாட்சி.

அவர்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் பிரச்னைகள் என்ன? அந்தப் பிரச்னைகளைத் தேசியப் பிரச்னையாகப் பார்க்க வேண்டியது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு மக்கள் விடைகாண அவர்களுக்குப் பழங்குடிகள் பற்றிய புரிதலை வழங்கவேண்டும்.

அவர்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்? அந்தப் பொக்கிஷங்கள் தங்களுள் புதைத்து வைத்துள்ள புதையல்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு விடையை கொடுக்கிறது "வாழும் மூதாதையர்கள்" என்ற புத்தகம். பழங்குடிகள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் ஓர் ஆய்வுப் புத்தகம். உயிர் பதிப்பகம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருக்கும் இந்தப் புத்தகம் தமிழகத்திலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் வாழும் பழங்குடியின மக்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம் என்றே சொல்லவேண்டும். இந்த நூலின் ஆசிரியர் முனைவர் அ. பகத்சிங். இதற்கு முன்னர் 'முள்கிரீடம்', 'சோளகர்: வாழ்வும் பண்பாடும்' ஆகிய ஆய்வு நூல்களை எழுதியவர். இதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம். அவருடனான நேர்காணல் இனி...

"பழங்குடிகள் பற்றி எழுத வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றியது ஏன்?"

"பழங்குடி மக்களின் அடையாளம் என்பது நம் அனைவருக்கும் ஆச்சர்யம் தரும் ஒன்றாகவே உள்ளது.  அவர்களின் அடையாளமாக நாம் புரிந்து வைத்துள்ளதில் பலவும் உண்மையில்லை. அவர்களின் பண்பாடு, வாழ்க்கைமுறைகள் பற்றிய தெளிவான பார்வை பொதுச் சமூகத்திடம் இல்லையென்பதுதான் உண்மை. தவறான புரிதல்களையே உண்டாக்கியதில் சினிமாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்த பொது புத்தியைத் தவிர்த்து உண்மையை அறிய தேடல் அவசியம். மானிடவியல்  துறையில் கல்வி கற்றதால் பழங்குடிகள் வாழ்க்கை குறித்து அறிய நல்ல வாய்ப்பு கிடைத்தது. பிறகு சுய தேடல் காரணமாகப் பல பழங்குடிகளைச் சந்தித்தேன். அதில் சேளகர் மத்தியில் திரட்டிய தகவல்களைச் சிறு நூலாக எழுதினேன். அதே போன்று தமிகத்தில் உள்ள அனைத்து பழங்குடிகளைப் பற்றியும் எழுதச்சொல்லி நண்பர்கள் பலரும் வற்புறுத்தினர். அது உடனடி சாத்தியமல்ல என்பதால், சிறு அறிமுகக் கட்டுரைகளை எழுதலாம் என்று முடிவெடுத்தேன். எழுதுவதற்கான இடத்தை சண்முகானந்தம் காடு, உயிர் இதழ்களில் ஏற்படுத்தித் தந்தார். அதன்படி தமிழகத்தில் இருக்கும் அனைத்துப் பழங்குடி இனத்தவர் பற்றியும் அறிமுகப்படுத்தும் ஓர் முயற்சியாக இத்தொடர் அமைந்தது. வாழும் மூதாதையர்கள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் தமிழக பழங்குடிகளை அறிந்துகொள்வதற்கான அறிமுகக் கையேடாக அமையும்."

"பழங்குடிகள் பற்றிய விரிவான அறிவியல்பூர்வமாக வலுவான ஆய்வுப் பதிவுகள் இருக்கின்றனவா?"

"தமிழகத்தில் 36 இனங்களைப் பட்டியல் பழங்குடிகளாக அரசு வரையறை செய்துள்ளது. இவற்றில் அனைத்து பழங்குடிகளை பற்றியும் ஆழமாக, விரிவான பதிவுகள் இல்லை. எண்ணிக்கை அதிகமுள்ள பழங்குடிகள் பற்றி மட்டுமே குறிப்பிடும் படியான பதிவுகள் உள்ளன. காலனிய ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்டவைதான் அதிகம். குறிப்பாக நீலகிரியைச் சார்ந்த இனங்களைப் பற்றிய பதிவுகள் மிக அதிகம். உதாரணத்துக்குத் தோடர் பழங்குடி பற்றி பதிவுகள் ஆய்வு நூல்கள், பயண குறிப்புகள், அரசு பதிவு என அவர்களைப் பற்றிய ஆய்வு ஆங்கிலத்தில் நிறைந்துகிடக்கிறது. பிற பழங்குடிகள் பற்றி ஆழமான அறிவியல்பூர்வமான பதிவுகள் தமிழில் இல்லை. பிலோ இருதயநாத் அவர்கள் சுய தேடுதல் மூலமாகப் பழங்குடி மக்களிடையே பயணித்து அந்த அனுபவங்களைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழகப் பழங்குடிகள் பற்றிப் பொதுவான அறிமுகப் பதிவுகளை சக்திவேல், செல்லப்பெருமாள், பக்தவச்சலபாரதி போன்ற மூத்த பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். இருளர், மலையாளி போன்ற பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் நூல்களும் வெளிவந்துள்ளது. இவை போதாது, ஒவ்வொரு பழங்குடியை பற்றியும் இன்னும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பாக எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் அரநாடன், மன்னான், மலைக்குடி, கொரகர், மகாமலசர், மலையக்கண்டி காடர் உள்ளிட்ட பழங்குடிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  தமிழிலும் பதிவுகள் எழுதப்பட வேண்டும்."

"பழங்குடிகள் பற்றிய இலக்கியப் பதிவுகள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?"

ஒருபக்கம் அவர்களின் பண்பாட்டை, சூழலியல் இசைவான வாழ்வியலைப் பதிவு செய்துவிட்டு மறுபக்கம் அவர்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகளையும் பதிவு செய்யவேண்டும். அவர்கள் வாழ்விடத்துக்குள் புகுந்து ஆக்கிரமிப்பவர்களைப் பற்றிப் பேசவேண்டும். அதனால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும் பண்பாட்டுச் சீர்கேடுகள் பற்றியும் பேசவேண்டும். வன வளம் குறைந்து போவது, வன நிலங்கள் தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிக்கப்படுவது என்று அனைத்தும் அதில் பேசப்பட வேண்டும். அவர்களின் இயற்கையோடு சார்ந்த வாழ்வியலைக் கொண்டாடும் மனநிலையில் மட்டுமே அவை அமைந்துவிடக் கூடாது. தற்போது நடக்கும் மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் பேசுவதாக இருக்கவேண்டும். ”சங்கம், சோளகர் தொட்டி” போன்ற படைப்புகள் மேலும் வர வேண்டும். மலையாளி, தோடர் இன மக்கள் கல்வி புலத்திற்குள், குறிப்பாக உயர்கல்விக்கு வரத் துவங்கியுள்ளதைக் காண முடிகிறது. இது மேலும் தொடர வேண்டும். பழங்குடிப் பிரச்சனைகளை அவர்களே எழுதும் சூழலை உருவாக்க வேண்டும். 

"கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் பளியர் இன மக்கள் நீங்கள் சொன்னது போன்ற சிக்கல்களுக்குச் சமீபகாலங்களில் அதிகம் ஆளாகிறார்கள். அவர்களுடனான உங்கள் அனுபவம்...?"

"கொடைக்கானலில் அவர்களைச் சந்தித்தேன். அங்கு போதுமான அளவுக்கு ஆய்வுசெய்ய முடியாமல் போனது. ஆனால், அங்கு ஒருவிஷயத்தைக் கவனித்தோம். மக்கள் குடியிருக்கும் பகுதிகளில்  பிடிபடும் விஷப் பாம்புகளை வனத்துறையினர், பளியர் வாழும் மலைக் காட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். அந்தப் பகுதியின் சூழலியல் அமைப்பு பாம்புகளுக்கானதாக இல்லாததால், அது அச்சுறுத்தப்பட்ட மனநிலையில் அங்கிருக்கும் பளியர் இனக் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. சில சமயங்களில் அவர்கள் பாம்புக் கடிக்கும் ஆளாகிறார்கள். இவை அவர்களின் தினசரி வாழ்வியலையே சிக்கலாக்குகிறது. அதே போல், தேனியில் கடமலைக்குண்டு பகுதியிலும் அவர்கள் வாழ்கிறார்கள். அங்குதான் ஒவ்வொரு சிற்றூராகச் சென்று ஆய்வுசெய்ய முடிந்தது. வனத்துறையினரின் அத்துமீறல்களும், காட்டில் சென்று சுள்ளி பொறுக்கக்கூட அனுமதி இல்லாமல் போனது குறித்தும் வருத்தப்பட்டனர். தமிழகத்தில் வனஉரிமைச்சட்டம் அமலாக்கத்தில் உள்ள குளறுபடிகள் பழங்குடிகளை மிகவும் பாதிக்கின்றன."

"பளியர், காணிக்காரர் போன்ற இனங்களைப் பற்றிப் பேசும்போது அவர்களில் வயதுக்கு வந்த ஆண்கள், பெண்கள் தனிக்குடில் அமைத்துத் தங்குவது பற்றிப் பேசியிருப்பீர்கள். அந்தப் பழக்கம் ஏன்?"

"அவர்களிடம் மட்டுமில்லை இந்தியாவின் பல பழங்குடிகளிடம் அந்தப் பழக்கம் உண்டு. உதாரணத்துக்கு முரியா, கோண்ட் பழங்குடியினரைச் சொல்லலாம். ஆந்திரா, மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர் பகுதிகளில் பரவி வாழ்கிறார்கள். பஸ்தார் முழுக்க அவர்களுடையதுதான். அவர்களிடம் இந்தப் பழக்கம் இன்னும் முழுமையாகவே கடைபிடிக்கப் படுகிறது. நீங்கள் கேட்பதுபோல் இளம்பருவம் எய்தியவர்களைத் தனியாகக் குடில் அமைத்துத் தங்கச் சொல்லுவார்கள். அதன் மூலம் தானாகப் பழகிக்கொள்ள முயல்வது, ஒவ்வொருவரிடம் இணக்கம் ஏற்படுத்திக் கொள்வது என்று தங்களுக்கும் தம் சமூகத்துக்குமான தொடர்பைச் சுயமாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்பின் மீண்டும் தம் குடும்பத்தோடு இணைத்துக்கொள்ளப் படுவார்கள். இதன்மூலம் இளைய பருவம் எய்துபவர்கள் வாழ்வு குறித்த முதிர்ச்சியையும் பக்குவத்தையும் எய்துகிறார்கள். அந்தப் பழக்கத்தை அவர்கள் “கோத்துள்” என்றழைக்கிறார்கள். வெளியுலகம் ஏற்படுத்திய தாக்கங்களால் இன்று குறைந்து வருகிறது."

"பெரும்பான்மைப் பழங்குடிகளின் வாழ்க்கைமுறை இப்போது மாறிக் கொண்டிருக்கிறது. இயற்கையோடும் காட்டோடும் இசைந்திருந்த அவர்களின் வாழ்க்கைமுறை மாறுகிறது. இதற்கான காரணமாக எதைப் பார்க்கிறீர்கள்? அந்த மாற்றங்கள் குறித்தும் உங்கள் புத்தகம் பேசுகிறதா?"

"அந்தந்தப் பழங்குடிகள் சந்தித்த வாழ்வியல் மாற்றங்களையும், சிக்கல்களையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளேன். அவை வளர்ச்சிக்கானதாக இல்லை. அவர்களின் வாழ்க்கைமுறை இயற்கையை ஒட்டியது. இயற்கையைப் பாதுகாப்பதே அவர்களின் பண்பாட்டைக் காப்பதற்கான வழி என்றாலும், அதை முழுமையாகப் பாதுகாப்பது அவர்கள் கையில் மட்டுமே இல்லை. நம்மிடமும் அந்தப் பொறுப்பு உள்ளது. அதை நாம் சரியாகச் செய்யாததே அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் காரணம். நாம் இயற்கையிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளோம், அதோடு வனப்பாதுகாப்பை முறையாகச் செய்யாமல் அவர்களையும் நாமே இயற்கையிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியலில் இருந்து அவர்களைக் கட்டாயமாக அந்நியப்படுத்துகிறோம். ஒவ்வொரு பழங்குடியின் வாழ்க்கை சூழலும் வேறுபட்டது. அதனால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் வேறுபட்டது. அதனை முடிந்தவரை பதிவுசெய்துள்ளேன். "

"பழங்குடிகளின் வனம் சார்ந்த விலங்கியல் தாவரவியல் அறிவு குறித்து இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. ஒன்று அவர்களின் அந்தச் செறிவான இயல் அறிவு மரபுரீதியாகக் கடத்தப்படுகிறது. இன்னொன்று கற்றல் மற்றும் கற்பித்தல் மூலம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது. இந்த இரண்டில் எது சரியானது?"

"நம்மிடம் எப்படி சமூகமயமாக்கல் இயல்பாக நடைபெறுகிறதோ அதுபோலத்தான் பழங்குடிகளிடமும். வனப்படுபொருள்களைச் சேகரிக்கக் காட்டுக்குள் செல்லும்போது மூத்தவர்கள் இளையவர்களையும் சிறுவர்களையும் அழைத்துச் செல்வார்கள். அப்போது அவர்கள் பார்ப்பனவற்றைப் பற்றிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். அதோடு ஒவ்வொரு விஷயத்தையும் பெரியவர்கள் கையாளும் விதத்தைப் பார்த்தும் கற்றுக் கொள்வார்கள். இப்படியான கற்றல் கற்பித்தல் மூலமாக முன்னோர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தகவல்களையும் இயற்கை குறித்த தெளிவுகளையும் கடத்தி வந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வழிபாடு, பாடல்கள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் மூலமும் அவை கடத்தப்படுகின்றன. 

மரபணு மூலம் பண்பாடு கடத்தப்படுவதாகவோ, மரபணு நினைவுகளில் பண்பாடு பொதிந்திருப்பதாகச் சொல்லப்படுவதெல்லாம் அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இன்னும் ஆய்வு தொடர்கிறது. ஆனால், சூழ்நிலை மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தும், அது அடுத்த தலைமுறையில் வெளிப்படுவதும் உண்டு. எனவே பழங்குடிகளின் உடலமைப்புக்கு மரபியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் வாழும் சூழுலுக்கு தகுந்தவாறான உடலமைப்பு அவர்களுக்கு இருக்கும். பரிணாமவியல் தத்துவப்படி எந்த உடற்கூறும் அதற்கான தேவை இருக்கும் வரையிலுமே வெளிப்படும். தேவை குறையும்போது அந்தத் திறன்களும் மழுங்கி காலப்போக்கில் மறைந்துவிடும்."

"பழங்குடி இனங்களில் பல வகைகள் உண்டு. அவர்களின் வழிபாடு முறைகள் எப்படிப்பட்டது? அதில் வித்தியாசங்கள் இருக்குமா?"

"பழங்குடிகள் குறித்த  ஆய்வில் மிக முக்கியமானது அவர்களின் வழிபாட்டு முறைகளை அறிவது. இன்று நம்மிடையே இல்லாமல் போன பல வழிபாடுகள் இன்றும் அவர்கள் மத்தியில் இருப்பதைப் பார்க்கலாம். விலங்கு, மரம், நீர்நிலை என இயற்கை சார்ந்த வழிபாடுகளை அனைத்துப் பழங்குடிகளிடமும் காணலாம். ஆனால் அது பன்முகத்தன்மை வாய்ந்தது. இதனை அனிமிஸம் (Animism) என்பார்கள். வழிப்படப்படுபவை பெரும்பாலும் அவர்களின் வளமான வாழ்க்கைக்கு உகந்ததாகவோ, அச்சுறுத்தும் ஒன்றாகவோ இருக்கும். யானை, பாம்பு, எருமை முதலான விலங்கு வழிபாடு இவ்வாறானதே. முன்னோர்களை வழிபடுவதும் இதில் அடக்கம்.

ஒவ்வொரு பழங்குடிக்கும் தனித்த வழிபாடு  முறைகள் உண்டு. இனத்திற்குள் பல்வேறு குலங்கள், ஒவ்வொரு குலத்திற்கு ஒரு தெய்வும், ஊர் தெய்வம் என வழிபடும் தெய்வங்கள் எண்ணிலடங்காதவை. இப்படிப் பன்முகப்பட்ட வழிபாட்டு முறைகளைக் குலைக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. சமவெளி மக்களிடம் உள்ள கடவுள்களோடு பிணைக்கும் முயற்சிகள் ஏராளம்.  

சத்தியமங்கலம் பகுதி சோளகர்களிடையே கள ஆய்வின் போது அவர்களில் செளிகர் குலத்தவர்களின் தெய்வமான ஜடசாமியை வழிபட அடர் வனத்திற்குள் சென்ற அனுபவம் என்றும் நினைவில் இருந்து அழியாதது. ஆசனூர் அருகில் உள்ள கெத்தேசால் கிராமத்தில் இருந்து சுமார் 4 மலைகள் தாண்டி வனத்திற்குள் அரை நாள் பயணித்து குல தெய்வ கோயிலை அடைந்தோம். அங்கிருக்கும் சுனையில் இருந்து நீரை வார்த்துப் பொங்கல் வைத்து அம்மக்களோடு ஜடசாமியை வழிபட்டோம்."

"சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பில் பழங்குடிகள் பாதுகாப்பின் பங்கு என்ன? தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பழங்குடி மக்கள் சந்திக்கும் சமூக சூழலியல் மற்றும் நிலவியல் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நாம் செய்ய வேண்டியது என்ன?"

"வனம், நிலம், கடல் எதுவாக இருந்தாலும் அது சார்ந்த மக்களின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அது பாதுகாக்கப்படும். அந்நியர் பார்வையில் அது நுகர்வுப் பொருள்தான். பழங்குடி மக்கள் வனத்தின் அங்கம். வனத்தைப் பாதுகாப்பது என்பது பழங்குடிகளின் பாதுகாப்பையும் சேர்த்துதான். வனத்தைப் பாதுகாப்பதற்காகப் பழங்குடிகளை வெளியேற்றுவதை வனத்தை வணிக மயமாக்குவதற்கான சதியாகவே நான் பார்க்கிறேன். புலிகள் சரணாலயம் என்ற பெயரில் சத்தியமங்கலம், களக்காடு-முண்டந்துறை வனப்பகுதிகளில் நடப்பதும் இதுதான். குமரி மாவட்டம் பேச்சுப்பாறை பகுதியில் புலிகள் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டுக் காணி மக்கள் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். மறுபுறும் காப்புக் காட்டுக்குள் புதிய ரப்பர் தோட்டங்கள் முளைத்த வண்ணம் உள்ளது. காணி மக்களின் அன்றாட வாழ்க்கை வனத்துறையால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றது. வளர்ச்சித் திட்டங்களுக்காக வாழ்விடங்களில் இருந்து பழங்குடி மக்கள் அந்நியப்படுத்துப் படுதல் தொடர் நிகழ்வாக உள்ளது. இது தமிழகப் பிரச்னை இல்லை. சர்வதேச பிரச்னை. பழங்குடிகளற்ற வனம் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் சதித் திட்டம். 

மறுபுறம் பழங்குடிகள் முன்னேற்றத்திற்குத் திட்டம் வகுக்கிறோம் என்று அரசு செய்யும் குளறுபடிகள் ஏராளம். முறையாகப் பழங்குடி இனச் சான்றிதழ் வழங்குவதில்கூட அரசு தோல்வியுற்றுள்ளது என்பதே நிதர்சனம். அடையாளச் சான்றிதழே இப்படி என்றால், நலத் திட்டங்களை பற்றிச் சொல்லவா வேண்டும்? ”வாழும் மூதாதையர்கள்” வாசித்தால் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் இவ்வாறான சீர்கேடுகளைப்  பற்றி அறியலாம்.

பழங்குடிப் பிரச்னைகளுக்கான தீர்வு என்பது பல அடுக்குகளைக் கொண்டது. வாழ்விட உரிமையில் துவங்கிப் பண்பாட்டு அடையாளங்களைக் காப்பது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது. இதற்கு அம்மக்கள் மத்தியில் விழிப்புணர்வும், இயக்கமும் அடிப்படைத் தேவை. அதே வேளையில் பொதுவெளியில் வசிக்கும்  பெருபான்மையினரான நம் மத்தியிலும் அதிக விழிப்புஉணர்வு வேண்டும். அரசினுடைய வனம் மற்றும் பழங்குடிகள் குறித்துக் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து கவனிப்பதோடு, பழங்குடிகளின் வாழ்வியலையும் புரிந்துகொள்ள வேண்டும்."