கட்டுரைகள்
Published:Updated:

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

து ஆப்பிரிக்க கண்டத்தின் துணை சகாரா பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஓர் இடம். மணி நள்ளிரவு 1:30. கறையான்களின் படைத்தளபதியும் அரசனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கறையான் புற்றில் வாழும் அனைத்துக் கறையான்களுமே போர் குணங்களோடு இருப்பதில்லை. படை வீரர்கள் தனிக் குழு. உணவுத் தேடி, புற்று கட்டிப் பராமரிக்கும் குடிமக்கள் தனி. முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ராணி கறையான் தனி.

ஆனால், மெகாபொனேரா (Megaponera) எறும்புகள் அனைவருமே போர் வீரர்கள்; வேட்டைக்காரர்கள். ஆக்ரோஷமாகத் தாக்கி இரையை வீழ்த்துபவர்கள். அப்படிப்பட்ட எதிரிகளைத்தான் அந்தக் கறையான்கள் தினமும் சமாளிக்கின்றன.

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

அன்றும் அப்படியொரு போர்தான். எறும்புப் படை அதிகாலை 6 மணிக்கே வந்துவிட்டன. வழக்கமாகத் தாக்குதலை 6 மணிக்குத் தொடங்கினால் 10 மணிக்குள் முடிந்துவிடும். இன்று மாலை வரைத் தொடர்ந்தும் எறும்புகளால் கறையான்களை வீழ்த்த முடியவில்லை. எறும்புகளின் படைத்தளபதி முடிவுசெய்தான், “வேறு வழியில்லை. நள்ளிரவுத் தாக்குதல் செய்வோம்!”

அதுபற்றித்தான் கறையான்களின் அரசரும் படைத்தளபதியும் பதற்றத்தோடு ஆலோசித்துக்கொண்டிருந்தனர். எறும்புகளின் நள்ளிரவுத் தாக்குதல், பகலில் நடக்கும் போர் போல இருக்காது. தந்திரமாகத் தாக்குவார்கள்.  மனிதர்களின் போர் வியூகங்களுக்கு நிகரானவை.

அப்படிப்பட்ட வலிமையான எதிரிகளைத் தினம் தினம் எதிர்த்தே உயிர் வாழ்கின்றன அந்தக் கறையான் கூட்டங்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் லட்சக்கணக்கான கறையான் வாழும். தங்கள் இனம் அழிந்துபோகாமல் வாழ வேண்டும். அதற்கு ராணிக் கறையான்தான் முக்கியம். ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக முட்டையிடும் ராணியைப் பாதுகாத்தாக வேண்டும்.

“இந்தமுறை எறும்புகள் இவ்வளவு ஆக்ரோஷமாகச் சண்டையிடவும் ராணிதான் காரணம். அவருடைய ஆயிரக்கணக்கான முட்டைகள் எங்கு இருக்கின்றன என்பதை எறும்புகள் பார்த்துவிட்டன. அதையெல்லாம் கைப்பற்ற துடிக்கின்றன. நள்ளிரவில் வருவார்கள்” என்றது படைத்தளபதி.

அரசருக்கோ ஆத்திரம் தாங்கவில்லை, “இதற்குமுன்பும் மிக இக்கட்டான சூழலில் இதைத்தானே செய்துள்ளார்கள். கடந்த இரண்டு நாள்களாக நாம் தடுத்துக்கொண்டே இருக்கிறோம். நம் மக்களைச் சாப்பிடவிடாமல் பாதுகாத்துள்ளோம். அடுத்து இதைத்தானே செய்வார்கள். இதைக்கூடத் தெரிந்துவைத்திராத உம்மைப் படைத்தளபதியாக நியமித்ததை நினைத்து வெட்கப்படுகிறேன்!”

பொரிந்து தள்ளிய அரசர் யோசனை கூறினார், “வேறு வழியில்லை. அவர்களின் ஒற்றுமைதான் அனைத்துக்கும் காரணம். அதனால்தான் இவ்வளவு கடுமையாகத் தாக்க முடிகிறது. நாமும் அப்படி ஒற்றுமையாகத் தாக்கினால் வெல்லமுடியும். அவர்களைவிட நாம் எண்ணிக்கையில் அதிகம்.  புற்றுகட்டுபவர், பராமரிப்பாளர், போர் வீரர் என்று பிரிந்து நிற்கும் அனைவரையும் ஒன்று சேருங்கள். நம் குடிமக்களையும் போருக்கு அனுப்புங்கள். நம் புற்றைக் காப்பாற்றியே ஆகவேண்டும்”

நிலைமை கைமீறிப் போயிருந்தது. ஏற்கெனவே அந்த மெகாபொனேரா எறும்புகள் புற்றுக் காவல் வீரர்களைத் தாக்கி உள்ளே நுழைந்துவிட்டன. அன்று நடந்த போரில் எறும்புகளுக்கு அதிகம் சேதம் என்றாலும்,  எறும்புகள் பின்வாங்குவதாக இல்லை.  எப்படியாவது ராணியைக் கைப்பற்றியாக வேண்டும். அப்போதுதான் லட்சக்கணக்கான முட்டைகள் கிடைக்கும்.

ஆனால், கறையான் காலனியைச் சேர்ந்த அனைவருமே சண்டையிட வந்துவிட்டார்கள். மொத்தக் கறையான்களும் போரில் இறங்கினார்கள். எறும்புகள் பக்கம் அதிகம் பேருக்குக் காயம். எறும்புகளின் தலைமைத் தளபதி உயரமான இடத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

எறும்புப் படையில் ஒன்று காயமடைந்து வீழ்ந்தால், தன்னை நோக்கிக் கவரும் விதமாகப் பச்சைநிற ஒளிவீசி சிக்னல் கொடுக்கும். தங்களுள் ஒருவன் வீழ்ந்துவிட்டான் அவனைக் காப்பாற்றச் செல்ல வேண்டுமென்று மற்ற வீரர்களுக்குத் தரும் எச்சரிக்கை ஒளி. அப்படி உதவி கேட்டு ஒளி வீசியும் காப்பாற்ற முடியாத அளவுக்குக் கடுமையான தாக்குதலை கறையான்கள் செய்துகொண்டிருந்தன.

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

அந்த இக்கட்டான சூழலில், அந்த ஒளியைப் போலவே மற்றவையும் வெளியிட்டன. அந்தப் பட்டொளியை வைத்து காயமடைந்த வீரர்கள் ஒன்று சேர, ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து ஒரே நேர்க்கோட்டில் தங்கள் புற்றுக்குச் செல்ல முயன்றன. சண்டையிட்டுக்கொண்டிருந்த எறும்புகள் வழிவிட்டு யாரும் தாக்காத வண்ணமும் பார்த்துக்கொண்டன.

தன் படையில் காயமடைந்த வீரர்கள் முழுமையாகத் தப்பித்த பின்னர்தான் தளபதி கவனித்தது. வீரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோயிருந்தது. ஆயிரக்கணக்கில் இருக்கும் கறையான்களை இனி வீழ்த்த முடியாது. அதனால், எறும்புப் படைத்தளபதி பின்வாங்க உத்தரவிட்டது.

மரணிக்கும் தறுவாயில் இருந்தவர்களைக் கவலையோடு பார்த்துவிட்டுத் தளபதியும் பின்வாங்கியது. தங்கள் படை வீரர்களைத் தூக்கிச்செல்ல மருத்துவ எறும்புகள்  உதவின. காயமடைந்த வீரர்களைச் சுமந்துகொண்டு மருத்துவர்களும் மற்ற வீரர்களும் தங்கள் இடத்தை அடைந்தன. அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயமடைந்த கால்களைக் கீழ்தாடைகளாலும் முன்னங்கால்களாலும் பிடித்துக்கொண்டு காயங்களை நக்கி நக்கிச் சுத்தம் செய்தன மற்ற எறும்புகள்.

அதற்குப் பின் இடைவெளிவிட்டு மீண்டும் சுமார் 4 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாக நக்கி, தங்கள் எச்சிலில் காயங்களை ஊறவைத்தன. காயங்கள் சிறிது சிறிதாகக் குணமடையத் தொடங்கின. இனி அங்கு இவர்களால் செல்லமுடியாது. வேறு இடத்தில்தான் உணவு தேடிச் செல்லவேண்டும்.

கறையான்கள் ஒற்றுமையாக இருந்து தங்கள் புற்றையும் ராணிக் கறையானையும் காப்பாற்றிவிட்டன. அதன்மூலம் தம் கூட்டத்தையே அழிவிலிருந்து காப்பாற்றிக்கொண்டன.

அந்த ஒற்றுமையை அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்ததே எறும்புகள்தான். எதிரியாகவே இருப்பினும் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டதற்கு கிடைத்த வெற்றி இது.

 - க.சுபகுணம், ஓவியம்: ரமணன்

மெகாபொனேரா!

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

து வெறும் கதையல்ல. உண்மையிலும் இந்த மெகாபொனேரா (Megaponera) வகையைச் சேர்ந்த எறும்புகள் இதைத்தான் செய்யும்.

*இவை, சகாராவின் தெற்குப் பகுதியில் வசிக்கின்றன.

*ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பூச்சியியல் வல்லுநரான கஸ்டவ் மேயர் (Gustav Mayr),  1862-ம் ஆண்டில், இந்த எறும்பு வகையைக் கண்டறிந்தார்.

*இவை 20 மில்லிமீட்டர் நீளம் இருக்கும்.

*பொதுவாக, எறும்புகள் எல்லாமே தங்கள் வாழிடத்தைக் காப்பாற்றுவதற்காக நின்று எதிர்ப்பவை. இந்த மெகாபொனேரா எறும்புகள் புற்றுக்கு வெளியேயும் ஒற்றுமையாக நின்று எதிர்த்து வெற்றியோடு திரும்பும்.

*இந்த எறும்புகள் கறையான் புற்றுகள் மீது போர் தொடுத்து அந்தக் கூட்டத்தைத் தாக்கி அவற்றை உணவாக்கிக்கொள்ளும்.

*போரில் கறையான்களோடு சண்டையிடும்போது, அடிபட்டுக் காயம் அடையும் எறும்புகள் மற்ற எறும்புகளிடம் உதவி கேட்கும். எப்படித் தெரியுமா?

*தன் தாடைக்குக் கீழே இருக்கும் சுரப்பி மூலம் மின்னும் வகையிலான திரவத்தை வெளியிடும். கறையான்களோடு சண்டையிடும் எறும்புகள் அந்த ஒளியைப் பார்த்தால், காயமடைந்த எறும்புக்கு உதவிசெய்து, தன் புற்றுக்குத் தூக்கி வந்துவிடும்.

*தூக்கிவந்த பிறகு என்ன செய்யும் தெரியுமா? அடிபட்ட இடத்தில் தன் எச்சிலால் சுத்தமாக்கி வைத்தியம் செய்து தன் நண்பர்களை உயிர் பிழைக்க வைத்துவிடும்.

*ஒருவேளை உயிர்போகும் அளவுக்கு அடிபட்டிருந்தால், அவை அந்த ஒளியை வெளியிடாது. உயிர் எப்படியும் போகத்தானே போகிறது, எதற்கு உதவிக்கு அழைத்து அவர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டும் என  அந்த எறும்புகள் நினைக்குமோ!