சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!

காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!

காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!

குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் கருகி 23 பேர் உயிரிழந்த சம்பவம், கடந்த ஆண்டு நாட்டையே அதிர வைத்தது.  நடப்பாண்டில் பந்திப்பூர், முதுமலை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி என்று மேற்குத் தொடர்ச்சி மலையெங்கும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த முறை லட்சக்கணக்கான நாட்டு மரங்களும், மூலிகைகளும், புற்களும் சாம்பலாகி உதிர்ந்துகொண்டிருக்கின்றன. 

காட்டுத்தீ இயற்கையின் ஆற்றல்மிக்க சக்தி. காற்றின் திசையில் 30கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறனுடையது. காட்டுத்தீப் பரவுவதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம். நெருப்புக்கான தூண்டுதல், ஆக்சிஜன் மற்றும் எரிபொருள். இந்த மூன்றையும் நெருப்பு முக்கோணம் என்பார்கள். இந்த மூன்றும் எங்கு அதிகமாகக் கிடைக்கிறதோ அந்தத் திசை நோக்கியே காட்டுத்தீ பயணிக்கும். இதில் ஏதாவதொன்று கிடைக்காமல் தடுத்தாலே காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

இயற்கையான காரணங்கள் மட்டுமல்லாமல் செயற்கையாகவும் காட்டுத்தீ ஏற்படுத்தப் படுகின்றது. இந்தியாவிலுள்ள காடுகளில் 64% தீப்பற்றக்கூடியவை. தமிழகத்தின் வனப்பகுதி மொத்தமும் அந்த வகைதான். வனப்பகுதிக்கு அருகிலுள்ள விவசாய நிலங்களில் மண்ணைச் செழுமைப்படுத்த பயிர்களுக்கு நெருப்பு வைப்பார்கள். அது காற்றின் வேகத்தில் பரவி காட்டுத்தீ ஏற்படலாம். மலையேற்றம் செல்பவர்கள் புகைபிடித்துவிட்டு  அணைக்காமல் போடும்போது, அது புகைந்து காட்டுத்தீயை உருவாக்கும். மரக் கடத்தல் கும்பல்களும் மரங்கள் வெட்டப்பட்ட அடையாளங்கள் தெரியாமலிருக்கக் காட்டுத்தீயை உருவாக்கி விடுகிறார்கள். அதேபோல் தமிழகக் காடுகளில் சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாடுபவர்களும், விலங்கு உறுப்புகளைக் கடத்துபவர்களும் காட்டுத்தீயைப் பற்றவைக்கின்றனர்.

காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!

கடந்த நான்கே மாதங்களில் காடுகளுக்குள் ஏற்படும் தீ விபத்து மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. வனத்துறை பராமரித்துவரும் காட்டுத்தீ எச்சரிக்கை வலைதளத்தில் பதிவேற்றியிருக்கும் தரவுகள் நமக்கு அதைத்தான் காட்டுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடு முழுவதும் 4,225 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 15,497-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாள்களில் மட்டும் தமிழகத்தில் காட்டுத்தீ எச்சரிக்கைகள் 1,191 முறை ஒலிக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ம் தேதியிலிருந்து அதிகமான தீ விபத்துகளைச் சந்தித்த வனப்பகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். நாடு முழுக்க ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களில் 37 சதவிகிதம் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ சம்பவங்களால் மட்டுமே ஆண்டுக்கு 1,176 கோடி ரூபாய் இந்தியாவுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. ஆண்டுக்குச் சுமார் 50 கோடி ரூபாய் வரை காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நிதி ஒதுக்கப்படுகிறது.

நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ், “இந்தியா முழுவதும் ஏற்படும் காட்டுத் தீயில் 99 சதவிகிதம் மனிதர்களின் தவற்றால்தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த விபத்தில் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை என்று வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனால், ஏராளமான பல்லுயிர்களும், பறவைகளும் தீயில் கருகி சாம்பலாகிவிட்டன. இவை அழிவதன் மூலம், கொசுக்கள் அதிகளவு உருவாகித் தொற்றுநோய்கள் பரவும். புவி வெப்பமயமாதலால், மழை குறைந்து தண்ணீர்ப் பிரச்னை ஏற்படும். தண்ணீர்ப் பிரச்னை ஏற்பட்டால் மனிதர்களின் வாழ்வாதாரமே முடங்கிவிடும். எனவே, இதைச் சாதாரணப் பிரச்னையாகக் கருதாமல் அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கையாள வேண்டும்” என்று எச்சரிக்கிறார்.

காட்டுத் தீ... சாம்பலாகப் போவது நாம்தான்!

“புல்வெளிகள் இருக்கும்போது, காட்டுத் தீயால் பெரிய அளவு பாதிப்பு இருக்காது. ஆனால், தற்போது நம் காடுகளில் லன்டனா கேமரா போன்ற அந்நியத் தாவரங்கள் அதிகம் இருப்பதால், தீ அதிகளவு பரவும். மேலும், அதன் விதைகள் நிலத்துக்கடியில் இருக்கும். காட்டுத் தீயில் நமது நாட்டு மரங்கள், தாவரங்கள் எல்லாம் அழிந்துவிடும். இதனால், காட்டுத் தீ விபத்துக்குப் பிறகு, காடுகளில் லன்டனா அதிகம் வளரும் அபாயம் இருக்கிறது. எனவே, நம் காடுகளில் இருக்கும் லன்டனா போன்ற அந்நியத் தாவரங்களை அகற்றுவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் வசந்த்.
தமிழக வனத்துறையின் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மல்லேஷப்பா, ``காட்டுத் தீயைத் தடுப்பதற்கான அனைத்துப் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் வனத்தைத் தீவிரமாகக் கண்காணிக்க உத்தர விட்டுள்ளோம். காட்டுப் பகுதிக்குள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று சொல்லியுள்ளோம். ட்ரெக்கிங்குக்குத் தடை விதித்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் காடுகளைப் பாதுகாக்க முடியாது. காடுகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது” என்றார்.

மனிதர்கள் பல லட்சக் கணக்கான மரங்களை நடலாம்.  அவற்றில், வெகு சில மரங்கள் மட்டுமே வளரும். ஆனால், பறவைகளும், பல்லுயிர்களும் காடுகளை உருவாக்கக் கூடிய வலிமையைப் பெற்றவை. காடுகள் இருப்பதால் தான் உயிர்ச்சூழல் இருக்கிறது. அவற்றை அழிப்பது என்பது, நமது அழிவுக்கான தொடக்கம் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

- க.சுபகுணம், குருபிரசாத்

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.அருண்