புராணங்களிலும் இதிகாசங்களிலும் டிராகன் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. நெருப்பு உமிழும் ஓர் உயிரினம் என்பது எப்போதுமே கதைக்குத் தனி சுவாரஸ்யத்தைக் கொடுக்கும் என்பதில் எந்த கதாசிரியருக்கும் சந்தேகமே இருந்ததில்லை. உலகளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' கதையிலும் அந்த நம்பிக்கை நன்றாகவே தெரிகிறது. அதற்கான பலன்களும் இல்லாமலில்லை.
சுவாரஸ்யமான கற்பனைகள் ஒருபுறமிருக்க நிஜ உலகத்தில் உண்மையாகவே டிராகன்கள் வாழ்ந்தனவா? இல்லையென்று கூறி டிராகன்களின் அம்மாவான டெனேரிஸ் டார்கேரியனின் நம்பிக்கையைக் கெடுப்பதில் எனக்கும் விருப்பமில்லைதான். ஆனால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் டிராகன்களைப் போன்ற உருவ அமைப்புடைய உயிரினம் எதுவும் இதுவரை வாழ்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. நெருப்பில் பொசுங்காத தோலோடு, நெருப்பைக் கக்கும், நெருப்பைச் ஜீரணிக்கும் ஓர் உயிரினம்தான் டிராகன். பழங்காலக் கதைகளில் டிராகன்களுக்குப் பல முக்கியமான கதாப்பாத்திரங்களுண்டு. அதிலும் மேற்கத்திய மற்றும் சீன இலக்கியங்களிலும் அவை மிக முக்கியமானவை.
ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் ஊர்வனங்கள் மற்றும் நீர்நில வாழ் உயிரினங்களைப் பற்றி ஆய்வுசெய்துவருகிற ஆய்வாளர் ஒருவர் லைவ் சைன்ஸ் என்ற ஆங்கில இதழுக்குக் கொடுத்த பேட்டியில், "நெருப்பில் எரியாத, நெருப்பைக் கக்குகின்ற உயிரினங்கள் எதுவுமில்லை. ஆனால், அதிகபட்ச வெப்பத்தையும் தாக்குப்பிடிக்கும் திறனுள்ள சில உயிரினங்கள் இருக்கின்றன. சில வகையான ஆழ்கடல் உயிரினங்கள், சில புழு வகைகள், சில நுண்ணுயிரிகள் மிக மோசமான தட்பவெப்பநிலையிலும் வாழக்கூடியவை. ஆனால், அவை நெருப்பு கக்கும் என்றோ நெருப்பில் தாக்குப்பிடிக்கும் என்றோ டிராகன் போன்றவை என்றோ சொல்லமுடியாது" என்று கூறியுள்ளார்.
கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் டிரோகன், விசேரியன், ரேகல் போன்ற டிராகன்கள் நிஜ உலகத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த மாதிரியான நெருப்பைச் ஜீரணிக்கும் உயிரினங்கள் இருப்பதற்கான இருந்திருப்பதற்கான சாத்தியங்களே இல்லை. ஆனால், டிராகன் மாதிரியான பல உயிரினங்கள் இன்னமும் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உதாரணமாக நஞ்சு உமிழும் நாகம். நாகப் பாம்புகளில் பல வகையுண்டு. அவற்றில் இதுவொரு வகை. தனக்கு ஆபத்து என்ற தோன்றும்போது எதிரியைக் குருடாக்கக்கூடிய நச்சு திரவத்தை அது துப்பும். ஆப்பிரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் தேள் வகைகளில் பாராபுதஸ் என்ற வகைத் தேள், தன் உடலிலுள்ள சிறிய குழாய் மூலம் எதிரிலிருப்பவர்களைப் பயமுறுத்த நச்சுத் திரவத்தைப் பீய்ச்சியடிக்கும்.
டிராகன்களைப் பொறுத்தவரை, நெருப்புதான் அவற்றின் ஆகப்பெரிய தற்காப்பு ஆயுதம். நெருப்புதான் அவற்றுக்கான கவசம், நெருப்பில் பொசுங்காத இறகுகள்தான் அவற்றின் கேடயம். வரலாற்றில் இவ்வளவு பெரிய இவ்வளவு சக்திவாய்ந்த டிராகன்களைப் போன்றதோர் உயிரினம் உண்மையில் வாழ்ந்திருக்கவில்லை. ஆனால், அவற்றின் குணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான சில உயிரினங்கள் இப்போதும் நம் மத்தியில் வாழ்ந்துவருகின்றன. டிராகன் நெருப்பைக் கக்கும். அவற்றைப் போலவே பல உயிரினங்கள் இங்கு நெருப்புக்கு ஈடான சில வேதிமங்களை, நஞ்சுகளைக் கக்குகின்றன. அவ்வளவு ஏன் சில உயிரினங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த தீப்பொறிகளைக்கூடத் தன் உடலிலிருந்து வெளியிட்டுத் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. சில வேட்டையாடிப் பறவைகள் இவற்றைவிட ஒருபடி அதிகமாகச் சென்று நெருப்புமூட்டித் தன் இரையை வெளியேற வைத்து வேட்டையாடுகின்றன. அவற்றின் நடத்தைகள் டிராகன்களுக்கு நிகரானவை. ஆனால், அவை டிராகன்கள் இல்லை.
வேட்டையாடிப் பறவைகளான கரும்பருந்து (Black Kites), பிரவுன் வல்லூறு (Brown Falcon) போன்றவை கனன்று கொண்டிருக்கும் காய்ந்த சருகுகள், மரக்கட்டைகளைத் தூக்கிக் கொண்டுவந்து போடுவதன்மூலம் நெருப்பு மூட்டுகின்றன. அதன்மூலம், புதர்களுக்குள் புற்களுக்குள் பதுங்கியிருக்கும் தன் இரையை வெளியே வரவைத்து வேட்டையாடி உணவாக்கிக் கொள்கின்றன. ஆம், காட்டுத்தீ உண்டாவதற்கு இவையும் சில சமயங்களில் காரணமாகின்றன. இவை டிராகன்களைப் போல் நெருப்பைக் கக்குவதில்லை. ஆனால், அவற்றுக்கும் இந்த வேட்டையாடிப் பறவைகளுக்கும் ஒரு தொடர்புண்டு. இரண்டுமே நெருப்பை உண்டாக்குகின்றன. ஆனால், உத்திகளில் இதெல்லாம் டிராகனுக்கும் அடுத்த லெவல்.
ஸ்டிராஃபுரஸ் (Strophurus) என்ற பல்லிவகை தன் வாலிலிருந்து திரவத்தைப் பீய்ச்சியடித்து எதிரிகளைத் தாக்கும். டிராகன் போல் எரித்துச் சாம்பலாக்கக்கூடிய திறன் இதற்கு இல்லையென்றாலும் எதிரிகளுக்கு எரிச்சல் உண்டாக்கக்கூடிய அளவுக்காவது இவை திறனுடையவை. ஊர்வனங்களில் பலவும் இதுபோன்ற அபாரமான தற்காப்புத் திறன்களைக் கொண்டிருக்கின்றன.
இவற்றைப் போலவே பல உயிரினங்கள் இதுபோன்ற பல்வகையான திரவத் தற்காப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றன. சில உயிரினங்கள் தம் பின்புறத்தில் வெளியிடும் வாயுக்களையே தற்காப்பிற்காகப் பயன்படுத்துகின்றன. தம் உடலில் சுரக்கும் சில வேதிமங்களை ஒன்றாகக் கலந்து வாயுவாக மாற்றி அப்படிச் செய்கின்றன. வண்டு வகைகள் பலவும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றன. ரக்கூன் போன்ற சில உயிரினங்களும் இதைச் சில சமயங்களில் செய்கின்றன. பம்பார்டர் என்ற ஒருவகை வண்டு தன்னைச் சாப்பிடும் தேரையின் வயிற்றுக்குள் சென்றபிறகு தன் பின்புறத்திலிருந்து வேதிமக் கலவையான வாயுவை வெளியிடும். அந்த வாயு வேட்டையாடித் தேரையின் உயிரினத்தின் வயிற்றில் அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்தி வாந்தியெடுக்க வைக்கின்றது. அதன்மூலம் தான் விழுங்கப்பட்ட பிறகும்கூடத் தப்பித்து உயிர்பிழைத்துவிடுகின்றன. ஆனால், அப்படித் தப்பிக்கும் வண்டுகள் அனைத்தும் உயிர்பிழைக்கின்றனவா என்பது சந்தேகம்தான். வெளியேறுகையில் அந்த வேட்டையாடியின் கோழைகளால் ஏற்பட்ட படலம் அதைச் சுற்றியிருக்கும். அதைப் பெரும்பாலான வண்டுகள் எப்படியாவது அப்புறப்படுத்தி உயிர்பிழைத்துவிடுகின்றன. சில வண்டுகள் அதைத் தம் உடலிலிருந்து அப்புறப்படுத்த முடியாமல் இறந்துவிடுகின்றன. எப்படியிருப்பினும் இவற்றின் இந்த வாயு வெளியேற்றும் முறையும் ஒருவிதத்தில் டிராகன்களின் நெருப்பு கக்கும் முறையைப் போலத்தான். கதைகளில் சொல்வதுபோல் தம் வயிற்றில் டிராகன்கள் நெருப்பை உருவாக்குகின்றன. இவை தம் வயிற்றில் வாயுவை உருவாக்குகின்றன.
நெருப்பைச் சுவாசிக்கும் டிராகன்களைக் கற்பனை உலகில் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜ உலகில் நெருப்புப் புகையைச் சுவாசிக்கும் யானையே இருக்கிறது. சில நாள்களுக்குமுன் சமூக வலைதளங்களில் ஒரு காணொளி வைரலானது. ஒரு யானை தன் வாயிலிருந்து புகையை உமிழ்ந்துகொண்டிருப்பது போலவே அந்தக் காணொளி இருக்கும். முதலில் அது கிராஃபிக்ஸ் என்று சந்தேகப்பட்டனர். பின்னர், அது உண்மைதான் என்று நிரூபணமானது. ஆராய்ந்து பார்க்கையில் மற்றுமொரு உண்மையும் தெரியவந்தது. அந்த யானை எரிந்து கிடந்த சில மரக்கட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அது நெருப்பை அணைத்ததால் உண்டான புகைமண்டலம்தான் அதன் வாயிலிருந்து வெளியாகிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் உலகத்தில் டிராகன்கள் இருப்பதுபோல் நம் உலகத்தில் டிராகன்கள் இல்லை. டிராகன் என்ற சித்திரம் இதுபோன்ற உயிரினங்களை வைத்து உண்டான கற்பனை உயிரினமாக இருக்கலாம். கற்பனைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. கற்பனையாகவே இருந்தாலும், அந்த சுவாரஸ்யம் டிராகன்கள் விஷயத்தில் சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.